பரிசாகும் மரணம்..!
மனிதர்கள் எல்லோரும் தனித்தன்மை கொண்டவர்கள் என்பதை நம்புவது
கடினம் என்றாலும் அது தான் உண்மை. ஒரு இரட்டையர்களை எடுத்தால் கூட அவர்களுக்கு இடையில்
பல ஆயிரம் வேற்றுமைகளைக் காண முடியும்..!
அதேபோல் எல்லா மனிதர்களுக்குள்ளும் நல்ல மனமும் கெட்ட மனமும்
இருந்தேயாகும். ஆனால், நல்லறிவு பெற்றவர்கள் மட்டுமே நல்ல மனத்தை வலுப்படுத்தியும், கெட்ட மனத்தை பலவீனப்படுத்தியும் வைத்திருப்பர்.
அதனாலேயே அவர்களை சமூகம் நல்லவர்களாகப் பார்க்கின்றது.
இவ்வாறாக நல்லவனாகவரப் போராடுகின்றான் ராகுலன். தன்னை எவ்வளவிற்குச்
செதுக்க முடியுமோ அவ்வளவு செதுக்கி, ஒரு நல்ல உயர்ந்த பதவியில் வந்து அமர்கின்றான்.
அலுவலகத்தையும், குடும்பத்தையும் சமநிலைப்படுத்தித் தன்வாழ்க்கையைக் கொண்டுசெல்கின்றான்.
பெரியவீடு, கார், வசதிகள், பணம், பிள்ளைகள், மனைவி எல்லாம் அவனுக்கு இறைவன் அருளால் கிடைத்திருக்கின்றன. ஆனால் அவன் மட்டும் என்றும் ஒரு வித வேறுபட்ட வாழ்க்கைப் பயணத்தையே நடத்துகின்றான். அவனால் எல்லோரும் நன்மையடைகின்றார்கள். ஆனால் அவனுக்கு நன்மையளிக்க எவரும் நினைப்பதில்லை. இது கடவுளின் செயலோ என்பதும் தெரியாது..! இப்படியான சூழல் அவனுக்கு பெரும் கவலையை அளிக்கின்றது. அதேவேளை அந்த கவலையை வெளியே காட்டாமல் வாழ்கின்றான். ஒரு விதத்தில் நடிக்கின்றான்.
மனைவி, பிள்ளைகள், உறவுகள் மற்றும் நண்பர்கள் போன்ற அனைவருடனும் செலவளிக்கும் நேரத்தைச் சுருக்கித் தனியே, சிந்திப்பதற்கும், எழுதுவதற்கும், ஒவ்வொரு விடயங்களை ரசிப்பதற்கும் தனது நேரத்தைப் பயன்படுத்துகின்றான். எப்படித்தான் தனிமையை ரசித்தாலும், அவன் நிறைவாக இருந்துவிட்டான் என்று மட்டும் சொல்லமுடியாது. அவனது மனம் ஆழ்ந்த வடுக்களையும், வலிகளையும் வாங்கித் தேக்கி வைத்துள்ளது. அவனைத் தவிர யாருக்கும் அதனைப்பற்றித் தெரியாது. தெரிவிக்கவும் அவன் விரும்புவதில்லை. யாருக்கும் சொல்ல முடியாத வகையில் சம்பவங்கள் அவன் வாழ்வில் நிகழ்ந்துள்ளன. காலமும் அவனைக்கஷ்டப்படுத்தினாலும், அதே காலமே அவனை அனைத்து கஷ்டங்களிலுமிருந்து காத்தும் வருகின்றது..! காலத்தின் இந்த தன்மை ராகுலனுக்குப் புரிகின்றது. இயற்கையைப் பற்றி புரிகின்றது. இறைவன் அருகில் இருப்பதை உணர்கின்றான். தனியாக இருந்தாலும் இறைவனுடன் கூட இருப்பதாக நினைத்தே வாழ்க்கின்றான். உண்மையில் இறைவனும் அவன் கூடவே இருக்கின்றார்.
அவனுக்கு அடிக்கடி வரும் கவலை என்னவென்றால் தன்மேல் யாரும்
அக்கறையில்லாமல் இருப்பதாகவே கருதுவான். ஆனால் அவன் அனைத்திலும் அக்கறையாக இருப்பதாகச்
சொல்வான். ஆனால் அவனது கணிப்பிலும் குறையிருக்கலாம். அவன் மற்றவர்களுக்கு உதவுவதை ஒரு கடமையாகவே
செய்வான். ஆனால் மற்றவர்கள் அப்படி நினைக்க வாய்ப்புக் குறைவே. அவனும் தன்னைப்போல் மற்றவர்களும்
இருக்கவேண்டும் என்று நினைப்பதும் தவறு என்பது அவனுக்குத் தெரியும். இருந்தாலும் இவ்வாறான
எண்ணங்கள் அவன் மனதிற்குள் வருவதை அவனால் கூடத்தடுக்க முடியவில்லை.
அவனது செயற்பாடுகள் சில மிக விநோதமாக இருக்கும். அவனது மேசைகளில்
எப்போதும் ஒரு பேப்பர் குச்சி, காதுக்குள் விடக்கூடிய வகையில் இருக்கும். படுப்பதற்கு
பல இடங்களைப் பயன்படுத்துவான். உணவும் அவ்வாறே..!
நித்திரை செல்வது என்பது மிகக்குறைவு. நடுராத்திரியில் பிசாசுகள் நடமாடும் வேளைகளிலே
அவனின் நடமாட்டம் இருக்கும். இறைவழிபாடும்
ஆச்சரியமானதாக இருக்கும். ஒரு பூசாரி செய்யும் பாணியிலே அர்ச்சனை அல்லது அவனின் இறைவழிபாடு
இருக்கும். விசித்திரம் நிறைந்த நடவடிக்கைகள், அவனை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக்காட்டும்.
அவனும் அதனை விரும்புவது போலவே செயற்படுவான். யாரையும் பின்பற்ற விரும்ப மாட்டான்.
தனியாகக் தனக்கு என்று ஒரு பாணியை நிலைநாட்டவே முனைவான்.
இப்படியான எண்ணங்களுடன் அவன் வாழ்க்கை போகும்வேளை, ஒரு ராத்திரி ராகுலன், தனது மொட்டை மாடியில் தனியே இனிமைகண்டு உறங்கும்வேளை ஒரு பெரு இடி அவன்மேல் விழுந்து,
ஒரு கஷ்டமும் அறியாமல் எரிந்து சாம்பலாகி இறந்து போகின்றான். அவனின் மரணம் அவனுக்கு
பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பது எனது கருத்து. அதேவேளை அவனால் நன்மையடைந்த அனைவருக்கும்
அந்த மரணம் பெரும் துன்பத்தையே கொடுத்தது.
மனித வாழ்வு என்பது முதுமைவரை போகவேண்டும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. முதுமையில் வாடவேண்டிய சூழல் இருந்தால் வாடத்தான் வேண்டும். முதுமையைப் பார்க்க
விரும்பாவிட்டாலும், தற்கொலை முயற்சிகள் செய்தாலும் முதுமை பார்க்கவேண்டும் என்று ஒரு நியதி
இருந்தால் பார்த்தேயாகவேண்டும். வருவதை ஏற்கும் பக்குவத்தில் இருக்கும்போது, எது வந்தாலும், நிம்மதியாக ஏற்று மகிழலாம். அது மரணமாக இருந்தால்
கூட மிக நிறைவாகவே இருக்கும் என்பது எனது நம்பிக்கை. மரணத்தை நோக்கியே அனைவரின் வாழ்க்கைப் பயணமும் செல்கின்றது. இடையில் இருக்கும் நிலைகள், வெவ்வேறான அனுபவங்களைத் தந்துசெல்கின்றது. அதுவே மனித வாழ்வின் பிரபஞ்ச நோக்கம்.
ஆனால் ஒன்று, மரணம் என்ற ஒரு இழப்பால் வரும் துன்பம் குடும்பத்தை துயரத்தில் ஆழ்த்தும்.
குடும்பத்தின் பலன் அவ்வாறு தான் அமையவேண்டும் என்றால், அதனை இறைவனைத் தவிர, யார் தான் தடுக்க முடியும்.
ஆ.கெ.கோகிலன்
19-04-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக