மாமிச மரம்..!
பொதுவாக நாம் உயிர்கள் என்றால் அசையும் உயிர் இனங்களையே உயிராக மதிக்கின்றோம். இடம்பெயராத உயிர் இனங்களாகத் தாவரங்கள் இருக்கின்றன. சில தாவரங்கள் மட்டும் இருந்த இடத்திலே அசையும் தன்மை கொண்டதாக இருக்கின்றது. சாதாரண பூச்சிகளை உண்ணும் தாவரங்கள் முதல் பெரிய விலங்குகளையே உண்ணும் மாமிச தாவரங்களும் பூமியில் இருக்கின்றது என்றால் வியப்பதற்கு ஒன்றும் இல்லை.
இவ்வாறான தாவரங்கள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றான் மலரவன். மலரவனோடு பல்கலைக்கழகத்தில் படித்த தோழியான தேன்மொழியும் அதே தாவரங்கள்
தொடர்பான ஆய்வுகளிலே ஈடுபடுகின்றாள்.
தென் ஆபிரிக்க காடுகளில் வளரும் மான்விழுங்கி என்று சொல்லப்படும்
டியரோகில்லர் என்ற ஒருவகை மரம் விலங்குகளை உணவாக எடுப்பதை அறிந்து அந்த மர வகையில்
ஒரு மரத்தை வெட்டிகொண்டுவர ஒரு நிறுவனத்திடம் கட்டளைபிறப்பிக்கின்றாள் தேன்மொழி. நிறுவனம்
ராமர் மற்றும் துரை என்ற இருவரை அந்த வேலையைச்
செய்யப்பணிக்கின்றது.
மரத்தைத்தேடி தென்னாபிரிக்கா போனவர்கள் பல நாட்களாக வரவில்லை. நிறுவனத்திடம் விசாரிக்க, அவர்களும் இருவரை அந்தப்பணிக்கு
நியமித்ததாகச் சொன்னார்கள். ஆனால் அவர்களிடம் இருந்து தொடர்புகள் ஏதும் வரவில்லை என்பதையும்,
மேலும் வேறு இருவரை அனுப்புவதாகவும், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை விசாரிக்க 5பேர்
கொண்ட ஒரு விசேட குழுவையும் நியமித்தார்கள்.
இந்த விடயங்களை தேன்மொழி மலரவனுக்குச் சொல்ல அவன் ஏன் இந்த
ஆய்வுக்குப் போகின்றாய். மான்விழுங்கி மரம் என்பது தாவரம் என்றாலும் அது ஒரு விலங்கு
போன்றது. பழிவாங்கும் தன்மை கொண்டது. மான் போன்ற விலங்குகளையே விழுங்கும் அந்த மரம்
மனிதர்களையும் விழுங்க வாய்ப்புண்டு.
ஆய்வுகளுக்கு பணம் கிடைக்கின்றது என்பதற்காகவும், அதனால்
சமூகத்திற்கு நன்மை கிடைக்கும் என்பதற்காகவும் இயற்கையுடன் விளையாடக்கூடாது. குறித்த
நிறுவனத்திடம் பிறப்பித்த கட்டளையை நிறுத்தச்சொன்னான்.
அவளும் அதனை ஏற்றுக்கொண்டு, குறித்த நிறுவனத்திடம் சொன்னாள்.
ஆனால் நிறுவனம், மேலும் இரண்டு பேரையும், ஒரு தனிகுழுவையும் இது தொடர்பாக நியமித்துள்ளதாகவும்,
நீங்கள் செய்ய நினைத்த ஆய்வை செய்யவும், எமக்குரிய செலவை தரவும் கேட்டுக்கொண்டது.
இவ்வாறு மாட்டியதால், தேன்மொழி மீண்டும் மலரவனின் உதவியை நாடினாள்.
வேறுவழியின்றி மலரவனும் குறித்த மரம் தொடர்பாகத் தேடி பல விபரங்களை அறிந்தான். அவன் அறிந்த தகவலின் அடிப்படையில்
மான்விழுங்கி, பல நூறு ஆண்டுகள் உயிருடன் இருக்கும் என்றும், அதனது வாழ்க்கைக் காலத்தில்
இலட்சக்கணக்கான விலங்குகளை பிடித்து உண்ணும் என்றும், அதனை யாராவது வெட்ட வெளிக்கிட்டாலே,
கிளைகளை மடித்து வெட்டவந்த அனைவரையும் கொன்றுவிடும் என்றும் சொன்னான். தேன்மொழியும் ஆய்வுக்காகவே அந்த மரத்தை தெரிவுசெய்தாள். மீண்டும் குறித்த உதவி நிறுவனத்துடன் தொடர்புகொண்டு,
தான் அந்த ஆய்வைச் செய்யவில்லை. நீங்கள் கேட்டபணத்தைத் தருகின்றேன். அனுப்பியவர்களை
திருப்பி அழைக்கும்படியும் சொன்னாள்.
நிறுவனம், தமது பக்கத்தில் இருந்துபோன அனைவரும் இன்னும் திரும்பவில்லை
என்றும், தென்னாபிரிக்க அரசிடம் உதவிகேட்க இருப்பதாகவும், தாங்கள் இன்னும் அதிக பணம் தரவேண்டிய நிலை ஏற்படலாம்
என்றும் சொன்னது. தேன்மொழியும் “நானும் முதலே விடச்சொன்னேன் தானே நீங்கள் தான்,
தொட்டவேலையை முடிக்காமல் விடமாட்டோம் என்றீர்கள்..” இப்போது, இவ்வாறு நடந்ததற்காக என்னிடமே
எல்லாவற்றையும் எதிர்பார்த்தால், அது நடக்காது. ஆரம்பத்தில் சொன்ன தொகை மட்டுமே செலுத்துவேன்.
மேற்கொண்டு நடக்கும் இழப்புக்கு நீங்களே பொறுப்பு என்பதைச் சொல்லிவிட்டு, மலரவனுக்கு
இந்தத்தகவலை தெரிவித்தாள்.
மலரவன், இனி ஒன்றும் செய்ய முடியாது. எல்லாம் கைமீறிவிட்டது. தானே களத்தில் இறங்கினான்.
தென்னாபிரிக்காவிலுள்ள குறித்த காட்டுக்கு, தனது ஆய்வு மாணவர்களைக் கூட்டிக்கொண்டு
சென்றான்.
அந்தப்பிரதேசம் பொதுப்பாவனைக்கு விடப்படவில்லை. குறித்த நிறுவனம்
அனுப்பிய ராமர் மற்றும் துரையும் போதிய அறிவு
இன்றியே அந்தக்காட்டுக்குள் மாண்டுவிட்டனர். பின்னர் அனுப்பிய இரு நபர்களும், குழுவும்
அவ்வாறே அந்நாட்டு அரசின் விதிமுறைகளை மீறி மாட்டிக்கொண்டுள்ளது..!
இறுதியாக, தென்னாபிரிக்க அரசின் உதவியை குறித்த நிறுவனம்
நாடியதால், குறித்த காட்டுப்பகுதிக்கு அரசின், வனப்பகுதி ஊழியர்களும் வந்திருந்தார்கள்.
மலரவன் சகல விபரத்தையும் கூறி என்ன செய்யலாம் என்று வினாவ, அவர்களும் இந்த பகுதிக்குள் நாங்களும் போக முடியாது.
உயிரேவேண்டாம் என்றால் மட்டுமே அதற்குள் போகமுடியும்.
இந்த நாட்டின் ஒரு அற்புதமே இம்மரங்கள் கொண்ட காடு. இந்த நாட்டின் வளத்திற்கும், இயற்கை உயிர் சமநிலைக்கும் இம்மரக்காடே முக்கிய காரணம். இந்தக்காடு கேட்கும் உயிர்களைக்கொடுப்பதே இந்த நாட்டுக்கும் நல்லது. எனவே இந்தக்காட்டுக்கு உணவாகச் சென்ற உங்கள் அனைத்து உயிர்களுக்குரிய நஷ்டயீட்டை, எமது நாடு நிச்சயம் தரும். இந்தக்காடு பற்றிய எந்த ஒரு விடயத்தையும் உலகிற்குத் தெரிவிக்க வேண்டாம். அவ்வாறு தெரிவிப்பது உங்களது உயிர்களுக்கே அச்சுறுத்தலாக அமையும். எனச்சொல்லியபடி, அந்த அற்புதக்காடு எமது நாட்டின் பொக்கிசமாகவும், பாதுகாப்பு வனமாகவும் இருக்கும்.
தயவுசெய்து, இழப்பீட்டைப்பெற்றுக்கொண்டு
செல்லுங்கள். “இந்தவிடயத்தைப் பரப்பாதீர்கள். இது தொடர்பான ஆய்வையும் செய்யாதீர்கள்.” எனக்கேட்டதற்கு இணங்க மலரவன் குழு நாடு திரும்பியது.
மரம் பெற்றுத்தர ஒப்புக்கொண்ட நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு இழப்பீட்டுத்தொகையை
வழங்கியது.
எல்லா ஆய்வுகளும் தேவையானது அல்ல என்ற முடிவோடு, தேன்மொழியைத்
தனது காதலியாகவே எண்ணிக்கொண்டான். அவளும், அவ்வாறே அவனை நினைத்தாள். ஆபத்தான ஆய்வில்
இருந்து தப்பி, அதைவிட ஆபத்தான வாழ்வில் இருவரும் நுழையத் திட்டமிட்டார்கள்.
ஆ.கே.கோகிலன்
13-04-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக