ஜயற்ற தோட்டம்..!

 


 


இது எங்களது குடும்பக்காணி..! கந்தரோடையில் உள்ள புதைபொருள் ஆராய்ச்சி நிலையத்திற்கு கிட்டவாகவும், பினாக்காய் ஆறுக்கு சில காணிகள் முன்னாலும் இருக்கின்ற,  தென்னை, பனை  போன்ற பல வகையான மரங்கள் நிறைந்த பசுமையான சோலைக்காடு..!

சிறுவயதில் இருந்தே அந்தக்காணிக்கு சென்று வருவது எனது கடமைகளில் ஒன்று. இன்னும் சொன்னால், ஒரு காலத்தில் எம்மை வாழ வைத்ததே அந்தக்காணி தான். அந்தக்காணி, எனது அம்மாவிற்கும், மாமாவிற்கும் பங்காக, ஜயா (தாத்தா) மற்றும் அம்மம்மாவால் நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்தக்காணியை வாங்க, தாத்தா பாட்டிக்கு உதவியவர் எனது அம்மாவின் மூத்த சகோதரர் தான். அவர் அந்தக்காலத்திலே தபால் அதிபராக இருக்கும் போது அரசு கொடுத்த மாதச்சம்பளம் ஏறக்குறைய 5 பவுண் நகை வாங்கக்கூடியதாக இருந்ததாம். அந்த அளவிற்கு அரச தொழிலில் சம்பளம் கிடைத்துள்ளது. மதிப்பும் இருந்துள்ளது. அந்தக் காலத்தில், மகன் உழைத்து, தாத்தா பாட்டி  சேர்த்த பணத்திலே இந்தக்காணியை வாங்க முடிந்துள்ளது. இன்றைய காலத்தில் ஜனாதிபதியின் சம்பளத்திலேயே அந்த அளவிற்கு நகை வாங்க முடியுமோ தெரியாது. அந்த அளவிற்கு பணவீக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தக்காணியை ஜயற்றதோட்டம் என்று பலரும் அழைப்பதுண்டு. அதற்குக்காரணம், அந்தக்காணியை கண்ணகையம்மன் கோவில் ஜயரிடம் பணம் கொடுத்து வாங்கியது எனது அம்மாவின் தந்தை..! இருந்தாலும் அந்தக்காணியை எமக்குத் தெரியாமல், பயன்படுத்தியது, அந்த காணியுள்ள ஊரில் இருக்கும் பெரும்பாலோனோர்..! வறுமை, கஷ்டம் இருந்த அந்தக்காலத்தில் அந்தக்காணியே கற்பகதரு..! தாக சாந்தி செய்யும் தடாகம்..! ஊரே மகிழும் மடம்..! இந்தக்காணியை ஏன் தாத்தா, ஜயரிடம் இருந்து வாங்கினார் என்று கேட்டபோது, மாமா சொன்னார் அந்தக்காணியை ஜயருக்கு கொடுத்தது  எனது  தாய் வழித்தாத்தாவின்  அம்மம்மா என்றும் அவரது பெயர் சீதேவி என்றும், கந்தரோடை மற்றும் சண்டிலிப்பாய் எல்லையிலுள்ள கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு நேத்தி வைத்து, அந்தக்கோவிலுக்குத் தேவையான தேங்காய், மாங்காய், மாதுழை, பலா, வாழை போன்ற அனைத்து பொருட்களையும் விளைவிக்கக்கூடிய வகையில்  இருந்த அந்தக்காணியின் விளைபொருட்கள், கோவிலுக்கு பயன்படும் என்ற நல்ல நோக்கில் கோவில் ஜயருக்கு பல தலைமுறைகளுக்கு முன் தானமாக வழங்கப்பட்டுள்ளது..! ஜயரால் நீண்டகாலம் காணியைப் பராமரிக்க முடியாமல் மீண்டும் சீதேவியின் பேரனான எனது தாயாரின் தகப்பனுக்கு, விலைக்கு அந்தக்காணி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணத்தை எனது மாமனார் வழங்கினார்.

தாத்தாவின் பாட்டியான சீதேவியின் பாட்டியான நெடும்பன் சிவகாமி என்ற பெண்ணின் உரிமையான காணியே தற்போதைய சுன்னாகம் பொதுச்சந்தை உள்ள காணி..!

கேள்வி ஞானத்தில்  எனது மாமாவால் சொல்லப்பட்ட இந்த வரலாற்றின் உண்மைத்தன்மையை, ஆய்வுகள் ஊடாகவே நிரூபிக்க வேண்டும்.

அந்தச்சந்தை வருவாய் முதலில் சென்றது நெடும்பன் சிவகாமிக்கே..!

பொருளாதாரத்தில்  வசதியாக இருந்ததால் நிறைய நில புலன்களை அவர்களால் வாங்க முடிந்துள்ளது. அவ்வாறே ஜயற்றதோட்டக்காணியும் எம்மிடம் இருந்து ஜயரிடம் சென்று, திரும்ப எங்களிடமே வந்துள்ளது..!

இறுதியாக என்னிடமும், மாமாவின் மகனிடமும் அந்தக்காணியின் உரிமை கைமாறியுள்ளது. விலைகள் வந்தாலும், சோதனைகள் வந்தாலும் அந்தக்காணி எம்மிடமே வருகின்றது என்றால் எமக்கான ஒரு கடமை அந்தக்காணியில் இருக்கின்றது என்று நான் நினைக்கின்றேன். அந்தக்கடமை முடியும்வரை, பொறுப்பு என்னிடமும் இருக்கும். பொறுப்பு வரமுன்னரே பல வேலைகளை அந்தகாணியில் செய்து, பல அனுபவங்களைப் படித்துள்ளேன்..! திரும்பவும் உரிமை என்ற ரீதியிலும் காணி வந்ததால், இனியும் பல பாடங்கள் படிப்பேன் எனநம்புகின்றேன்..! இறைவன், நினைத்ததைச் செய்யாமல் விடமாட்டார். நாமும் அவர் பிடியில் இருந்து நழுவமுடியாது.  

 

ஆ.கெ.கோகிலன்

29-07-2023.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!