வாத்தி..!

 



ஆசையே ஆக்கம்..! ஆசையே அழிவு..!

சரியான கல்வியே அழிவையும் ஆக்கத்தை  நோக்கி மாற்றமுடியும்..!

கல்வியின் மேன்மையைப் புரிய வைக்க, சில மசாலாக்கள் தடவினாலும், படத்தின் மையக்கருத்து நழுவவில்லை என்பதே  படத்தின் வெற்றிக்குக்காரணம்.

 

வழமையாக, ரவுடிகள் போல் வந்ததால் தான் மரியாதை எனநினைத்து, அதிக படங்களில் நடித்த தனுஷிற்கு தான் இந்தப்படமும் வாய்த்துள்ளது..! முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்..! ரவுடீசத்தை விதைத்த தனுஷ் மூலமே கல்வியின் முக்கியத்துவம்  பற்றிச்சொல்லப்பட்டது பல பிள்ளைகள், குறிப்பாக அதிக தனுஷ் ரசிகர்கள் திருந்த வாய்ப்பு உண்டு.

படம், தொடக்கம் முதல் முடிவு வரை தொய்வில்லாமல் சிறப்பாகச் செல்கின்றது.

கல்வியை வியாபாரமாக மாற்றுவது என்பது வருங்காலத்தை அழிப்பதற்கும், இயற்கையோடு விளையாடுவதற்கும் சமம். இந்த மாற்றத்தின் விளைவுகளையே தற்போது உலகம் அனுபவிக்கத் தொடங்கியுள்ளது. போகப் போகத்தான் வியாபாரமாக்கப்பட்ட கல்வியின் பாதிப்புக்கள் உலகெங்கும் தெரியும்.  மக்களாலும் நன்றாக உணரமுடியும்..!

என்னைப் பொறுத்தவரை கொரோனாக் கூட வியாபாரக்கல்வியின் விளைவா என்ற சந்தேகம் பல முறை எழுகின்றது. எல்லாவற்றிற்கும் காலத்திடம் பதிலுண்டு. பொறுத்திருந்து பார்ப்போம் அல்லது பார்க்கலாம்..!

உண்மையான கல்வி என்பது மூளை என்னும் தரையில் இரசாயனங்கள் பயன்படுத்தாமல், இயற்கையாகப் பாடுபட்டு  வளர்க்கப்படும் பயிர்களுக்கு ஒப்பாக நோக்க முடிகின்றது. அதன் பலன் மக்களின் சக்தியாகின்றது.  அந்த சக்தியே, மகாசக்தியாக உலக இருப்பை தொடர உதவும். மாறின் எதிர்காலமே கேள்விக்குறிதான்..?

உண்மையான கல்வியை, சேவையாக, தானமாகவே கொடுக்க முடியும். காசால் கல்வியை வாங்க முடியாது. ஆனால் கல்வியாளர்களையும், கல்வித்தொழிற்சாலைகளையும்,   அதற்கான வரையறைகளை வகுக்கும் விற்பன்னர்களையும் வாங்க முடியும்.

மூளையில், உண்மையாகச் சரஸ்வதி  குடியிருக்க கல்வித்தவம் செய்ய வேண்டும். அந்தத் தவம் மூலம் பெறும் கல்வியே இந்தப்பிரபஞ்சத்திற்கான முறையான கல்வி. உயிர்கள் அனைத்திற்குமான கல்வி. அன்பையே ஆதாரமாகக் கொண்ட ஆக்கத்திற்கான கல்வி. அந்தக்கல்வி, ஆணவத்தையும், அகங்காரத்தையும், அதிகார எண்ணத்தையும் அழிக்கும் உலக அமைதிக்கான கல்வி..!

இந்தப்படம் பார்க்கும் போது எனது வாழ்க்கையில் சில கட்டங்களைப் பார்ப்பது போல் இருந்தது. எனக்குக் கூட க.பொ.த உயர்தரத்தில் 3 பாடங்களும் கற்பிக்கும் சந்தர்ப்பம் வந்தது. மிகவும் பிற்படுத்தப்பட்ட, இராணுவக்கட்டுப்பாடற்ற இடத்தில் அதனை மேற்கொண்டது, இன்றுவரை நான் செய்த நல்லவிடயங்களில் ஒன்றாக் கருத முடிகின்றது. பட்டதாரிப் பயிலுனர் ஆசிரியராகத் தொடங்கி, தற்போது பணிப்பாளர் என மாறினாலும், அந்த பாடசாலை ஆசிரியராக இருக்கும் போது, படிக்க ஏங்கும் பிள்ளைகள், என்னை வகுப்பறைக்கு அழைக்கும் சத்தம் இன்றும் மிகமெல்லிய தோனியில் கேட்பதாக உணர்கின்றேன்.

திரிகோண கணித நிறுவல்களும், கதி, வேகம் போன்றவற்றிற்கான விளக்கங்களும், சமத்துவமான எண்ணங்களும் இந்தப்படத்தை எனக்கு மிகக்கிட்டவாக கொண்டுவந்துவிட்டது..!

சினிமாக்கள் ஊடாகக் கல்வியைத் தேடிய எனக்கு, கல்விக்காக சினிமாவை பயன்படுனால் என்ன என்று தோன்றிய காலத்தில் கதை நடப்பதாகப் படத்தில் வருவதும், வீடியோ  வகுப்புக்கள் சினிமா   தியேட்டர்களில் நடப்பதும், வழமையான படம் போல் இருந்தாலும், வித்தியாசங்கள் நிறையத் தெரிந்தன..!

இந்தக்கதையில் நடித்த தனுஷூக்கும், நடிகை சம்யுக்தா மேனனுக்கும் மற்றும் சகல கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள்.  ஜி.வி. பிரகாஷ்குமாரின் இசையும் சிறப்பு. அதிலும் “அடியாத்தி இது என்ன..”  என்ற பாடல் அதிக இளைஞர்களின் ரிங்டோன்..!



தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி (Venky Atlury) கதையை எழுதி இயக்கியிருப்பது, தரம் என்பதுடன் காலத்திற்கும் தேவையானது..!  கல்வி என்பது   பிரசாதம் போன்றது..! விற்பனைக்கான பண்டம் அல்ல..!  ஆசிரியர்கள் (வாத்திகள்) விருப்பத்துடன் செய்ய வேண்டியது கல்விச்சேவை.  அதுவே கடைசிவரை ஆசிரியர்களை மதிப்பான நிலையில் வைத்திருக்கும்.

 

ஆ.கெ.கோகிலன்

01-08-2023.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!