வடலி..!
எனது நண்பர் அவர் மனைவியுடன் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்திருந்தார். வழமையாக வரும்போது என்னையும், மேலும் சில பள்ளிக்கால நண்பர்களையும் அவர் சந்தித்துவிட்டுச் செல்வது வழமை. முன்பு வரும்போது அவரது தாயார் இருந்தார். கடந்த 3 வருடங்களில் பல மாற்றங்கள் உலகில் நடந்தன..! யாருமே எதிர்பாராத பல சம்பவங்கள் மக்களை அச்சத்திற்குள் வைத்திருந்தன..! அதிலிருந்து மெல்ல மெல்ல மீளும் சூழலுக்கு உலகு வந்துகொண்டிருக்கின்றது. அதேபோல் பல வெளிநாட்டு உறவுகளும், தமது இரத்த உறவுகளையும், நட்புக்களையும் சந்திக்க ஊர்வந்து செல்கின்றார்கள். அது அவர்களுக்கு ஒரு உந்து சக்தியாக, பிறந்த மண்ணின் ஆசியைப் பெற்ற ஒரு உணர்வை கொடுப்பதாக கருதுகின்றார்கள். இவ்வாறான சூழலில் நண்பர் வந்திருந்தார். என்னைச் சந்திக்க விரும்பினார். பணிச்சுமை கூடிய காலம் என்பதால் எல்லோரும் ஒன்று சேருவது கடினமாக இருந்தது. இருந்தாலும் முயற்சி செய்தேன். இன்று மூன்று பேர் சந்திப்பதாக இருந்தது. ஒரு உணவுவிடுதிக்கு செல்ல முடிவு செய்தோம். எனக்கு வழமைபோல் பொக்ஸ் பொருத்தமாகத் தெரிந்தது. நண்பர் சொன்னார் ”வடலி நல்லாக இருக்கும் என்று..! ” நானும் அதற்கு கிட்டவாகவே இருக்கின்றேன். எமது உறவினர் ஒருவரே அதன் உரிமையாளர் என்றும் அறிந்துள்ளேன். ஆனால் இதுவரை சென்று பார்த்ததில்லை.
ஆனால் நண்பர் அது நன்றாக இருக்கும் என்றும், முயற்சி செய்வோம்
என்றும் நம்பிக்கை தந்தார். அவர் சொன்னதுபோல், உண்மையில் எல்லாம் சிறப்பாக இருந்தன.
சுவையும் பராவாயில்லை. விலையும் பராவாயில்லை. எனவே இனி குடும்பத்துடன் போகக்கூடிய ஒரு
இடமாக வடலி வந்துள்ளது..!
வடலி என்றால், பனை மரத்தின் ஒரு சிறு பிராயத்தையே கூறுவார்கள்.
அதேபோல், இதுவும் வளர்ந்து வரும் பனையைப்போல் வடலி சிறிதாகவும், நம்பிக்கை தரக்கூடிய
வகையிலும் அமைந்துள்ளது.
இன்னொரு நண்பர் வருவதாகச்சொல்லிப் பின்னர் மறுத்துவிட்டார்.
காலம் இப்போது எல்லோருக்கும் சற்று இறுக்கமாகவே இருக்கின்றது. அவரவர் தமக்கு ஏற்பவே
தீர்மானங்களை எடுக்க வேண்டும். இன்று அவருடன் செலவழித்த நேரங்கள் மிகவும் பயனுடையதாக
அமைந்தன. உண்மையில் பல நாடுகளுக்குச் சென்று இயற்கையை அனுபவித்து வந்தவர் அவர்..! வீட்டிலேயே
இருந்தபடி பிறரின் கண்மூலம் இவ்வாறான பல நாடுகளையும், நகரங்களையும் நாகரியங்களையும்
கண்ட எனது கண்களுக்கு மேலும் தெளிவூட்டியதாக
நண்பருடான உரையாடல் அமைந்து இருந்தது.
இறுதியாக உணவுகளை உண்டு, சிறிது கதைத்துப் பின்னர் அவரை அவரது
வீட்டில் இறக்கிவிடச் சென்றேன். அவரும் தன்பாட்டிற்கு,
என்னை ஆச்சரியப்படுத்த, அவரது மனைவிமூலம் பரிசுப்பொருட்களைத் தந்தார். அதற்கு நான்
நன்றி கூறவேண்டிய நிலையில் இருக்கின்றேன். அவரது மனைவியும் எமது நிறுவனத்தில் ஆங்கிலம்
படித்த பழைய மாணவியே..! அவரைச் சந்தித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. அன்பும், அடக்கமும் இருந்தால், அவனியை ஆளலாம் என்பதற்கு
உதாரணமாக பலவற்றைச் சொல்லலாம். இத்தம்பதியும் அதற்கு ஒரு உதாரணம்..!
ஆ.கெ.கோகிலன்.
21-08-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக