ஜெய்லர்..!
பல நாட்களாகத் திரையரங்குக்குப் போக மனமில்லாமல் இருந்தது..! ஆனால் அண்மையில் வெளிவந்த ரஜினியின் ஜெய்லர் வசூல் சாதனைகள் படைத்துவருவதாகப் பத்திரிகைகளில் அறிந்த பின்னர் படத்தைப் பார்க்கும் ஆர்வம் ஏற்பட்டது. அதே ஆர்வம் மனைவிக்கும் ஏற்பட்டுள்ளதை இரண்டாவது மகள் சொல்லப் புரிந்தது..! அவளுக்கும் அந்தப்படத்தைப் பார்க்க ஆவல் இருந்துள்ளது..! தாயின் பேரில் தானும் படம் பார்க்கத் திட்டம் போட்டிருந்தாள். தாய்க்கும் ஆர்வம் இருந்தது உண்மையே..! இந்த நிலையில் சில நாட்களுக்கு முன், முன்பதிவு செய்ய முற்பட அது முடியாமல் போய்விட்டது. தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாகப் படம் செல்வதால், புக்(Book)பண்ண முடியவில்லை. இறுதியில் இன்று பார்க்கக்கூடிய வகையில் முற்பதிவு செய்ய முடிந்தது.
அதேபோல், மாலை நானும், மனைவியும், இரண்டாவது மகளும் படம் பார்க்கச்
சென்றோம். கார் விடவே இடமில்லை. நல்ல காலம் நாம் போக ஒரு கார் வெளியே வந்தது. அதனால்
ஒரு இடம் கிடைத்தது. ஒருவாறு நேரத்திற்கு தியேட்டருக்குள் வந்துவிட்டோம். படம் தொடங்கும்
வரை ஏதோ கொறித்துக்கொண்டே இருந்தோம். படம் ஆரம்பத்தில் ரசிக்கக்கூடியதாக இருந்தது.
இடைவெளைக்குப் பின்னர் வழமைபோல் போர(Bore)டிக்கத் தொடங்கிவிட்டது. இந்தப்படத்திற்கு ஏன் சனம்
இவ்வளவு அடிபடுகின்றார்கள் என்பது புரியவில்லை..! எல்லா மாநிலப் பிரபல நடிகர்கள் சிறு
காட்சிகளில் வந்ததால் அந்தந்த மாநிலங்களில் படம் நன்றாக ஓடுகின்றது என்று நினைக்கின்றேன்.
ரஜினியின் நடிப்பு வழமைபோல் அமர்களமாக இருந்தது. ஆனால் கதையில் யதார்த்தம் இல்லை. நடிகர் திலகம் சிவாஜியின் தங்கப்பதக்கம்
போல் தந்தையே மகனைக்கொல்லும் நிலைக்கு செல்லவேண்டிய, புத்திசாலி போல் செயற்பட்ட முட்டாள்
தந்தையாக ரஜினியை நெல்சன் சித்தரித்தது எனக்குப் பிடிக்கவில்லை.
நேர்மையாக வளர்த்தேன் என்பதற்காக களத்தில் இறங்கும் ரஜினி,
நேர்மையில்லாத மகனின் நிலையைக் கண்டதும் களத்தைவிட்டு வெளியே வந்திருக்கலாம். சும்மா
பில்டப்புக்கள் செய்து, மசாலாப் பிரியர்களுக்கு விருந்து வைத்துள்ளார் நெல்சன். லொஜிக் (Logic) பார்த்தால் படத்தின் திரைக்கதையே உளவியல் குழப்பத்தில் புனையப்பட்டுள்ளது. கத்தியால்
ஆட்களை வெட்டும் கெட்ட ரஜினி நேர்மையாக இருக்கின்றார் என்பதும் முரணாக உள்ளது. ஏதோ
சனத்திற்கு படம் பிடித்துள்ளது..! அதனால் தான்
ஓடுகின்றது. உண்மையில் இரண்டாம் பாதி எனக்குத் துண்டாகப் பிடிக்கவில்லை. சிவகார்த்திகேயன்
நடித்த டாக்டர் பகுதி 2 போல் தான் இருந்தது. மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கிஷோரப்,
கிஷோர் எனப்பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். தமன்னாவும் ஒரு பாட்டுக்கு ஆடி, கவர்ச்சி
காட்டி நடித்துள்ளார். மூளை இல்லாமல் பார்த்தால் ஒருவேளை படத்தை ரசித்திருக்கலாம்.
ஆனால் எனக்கு மையக்கதையின் யதார்த்தம் புரியவில்லை. உண்மையில் ரஜினியின் மனரிசங்கள் (Mannerisms) மற்றும் மலையாள வில்லன் விநாயகனின் நடிப்பு என இரண்டும்
ரசிக்க வைத்தன..!
கதையில் இன்னும் கூடிய கவனம் செலுத்தியிருந்தால், எல்லாத் தரப்பினருக்கும் பிடித்த வெற்றிப்படமாக இருந்திருக்கும். ஒளிப்பதிவு, இசை, தொழில்நுட்பங்கள் அனைத்தும் தரமாக இருந்தன. “காவாலே”
பாடலும் பொருத்தமான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது சிறப்பு.
நெல்சன் வெற்றியைக் கொடுத்துள்ளார். இது அவரது உழைப்பிற்கானதா
என்பது கேள்விக்கூறி..!
ஆ.கெ.கோகிலன்
22-08-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக