விரதமும் நானும்..!

 

 



சில விடயங்கள் சமயங்களில் பிடிக்கவில்லை என்றாலும் சில விடயங்கள் தேவை என்பது புரிகின்றது.

தற்போது மாணவர்களுக்கான பரீட்சைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. லீவு எடுப்பது கொஞ்சம் கடினம். அத்துடன் முன்னேற்பாடு செய்ய வேண்டும். இந்த நிலையில் தந்தையாரின் மோட்சத்திற்காகவும், குடும்பத்திற்கு நன்மை வேண்டியும் விரதமிருக்க அம்மாவும், மனைவியும் வேண்டினர். தந்தை இல்லாதவர்களே இந்த விரதத்தைப் பிடிக்க வேண்டும். எனது தந்தையே பொதுவாக கோவில் குளங்களுக்குப் போவது மிகக்குறைவு. யாருக்கும் தீமைசெய்யாமல் எங்களுக்கு வழங்கப்பட்ட கடமையை சரியாகச் செய்தாலே இறைவன் எம்மை விரும்புவார் என்றும், எமக்குத் தேவையானவற்றைத் தாமே செய்வார் என்றும் கூறியுள்ளார். அந்தவகையிலே தான் நானும் தற்போது சிந்திக்கின்றேன்..! பயணிக்கின்றேன்..! நேற்று லீவுக்கு முயற்சி செய்ய, அது தடைப்படுகின்றது. பின்னர், விரதம் பிடிக்காமல் வழமைபோல் செயற்படுவோம் என இருந்துவிட்டேன். நேற்றைய நாளில் காலை உணவிற்கு, பாண் வாங்குவது வழமை. ஆனால் எனக்கு மட்டுமே வாங்கவேண்டிய தேவை வந்தது. கூட வாங்கட்டா என்று மனைவியிடம் கேட்க அவரும் வேண்டாம்.. இழுபடும்.. பின்னர் எனக்கு ஒரு மனம் வந்தது காலைச் சாப்பாட்டை விட்டுவிட்டு, மதியத்தை வழமைபோல் கொண்டுசென்றேன். பரீட்சைகள் நடந்தன. எனது வேலைகளும் நடந்தன. மனமும் நிறைவாக இருந்தது. அந்தநேரம், மாலை பரீட்சைகள் இல்லை என்பது புரிந்தது. காலைச்சாப்பாட்டைத் தவிர்த்ததால், விரதம் பிடித்த உணர்வுக்குச் சென்றேன். வீட்டுக்குப் போன்பண்ணிச்சொன்னேன் “மதியம் வருவேன் என்று..!“ அவர்களுக்கும் சந்தோசம். சரியாக பரீட்சைகள் எல்லாம் முடித்துக்கொண்டு, வீடு வர மதியம் 1.30  மணிக்கு மேலாகிவிட்டது. மனைவி காகத்திற்கு உணவுவைக்கத் தந்தார். அவை உடனேயே வந்து உண்டுவிட்டன..! இறைவனை வணங்கி, தட்டுத்தடுமாறி செய்த விரதம், நிறைவேறியது. மாலையும் மனைவி கோவிலுக்குப் போகக்கேட்டார். பிள்ளைகளில் ஒருவர் சம்மதித்தார். பின்னர் தெல்லிப்பளை துர்க்கையம்மனின் அருளையும் இவர்களுடன் சென்று பெறமுடிந்தது. இவ்வாறாக ஆடிஅம்மாவாசை விரதம், சாத்தியப்படாமல் இருப்பதுபோல் இருந்து சாத்தியப்பட்டது மனதிற்கு நிறைவைத் தந்தது. எது நடக்க வேண்டுமோ அது நடந்தேயாகும்..! நடப்பதை ஏற்பதும், இயைந்து வாழ்வதும் நிம்மதியான நல்வாழ்க்கைக்குத் தேவையான ஒன்று.

 

ஆ.கெ.கோகிலன்.

16-08-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!