மறதிக்கு மரியாதை..!

 



சில வருடங்களாக ஞாபகசக்தி சிதறுவதை அவதானித்து வருகின்றேன். சில சமயம் தேகப்பயிற்சி செய்யும் போது எண்ணலைத்  தவறவிட்டு, திரும்பத்திரும்ப ஒரே இடத்தில் நிற்பதை, நேரத்தை வைத்துக் கண்டுள்ளேன்..!

சில சமயங்களில் எனது மகளின் பெயரை உச்சரிக்க நினைத்து தங்கையின் பெயரை உச்சரிப்பதோ அல்லது எனது அலுவக ஊழியர்களின் பெயர்களை உச்சரிக்கும் போது ஆளை மாற்றி உச்சரிப்பதோ, பலகாலமாக எனக்கு இருக்கும் ஒரு பிரச்சனை..!

சிறுவயதில், நான் இடக்கையால் எழுதுவதே வழக்கம் என்றும், எனது தாயார் என்னை பலவந்தமாக, வலது கையால் எழுதிப்பழக்கியுள்ளார்..! இதனால், இன்றுவரை இடம், வலம் கண்டுபிடிப்பதற்கு சிறிது நேரம் எனக்குத் தேவைப்படும்.

எமது உடலின் அமைப்பே இறைவனின் அருளால் அமைந்தது தான். நாம் வெளியில் பார்ப்பது போல்  உள்ளேயும் இருக்கவேண்டிய அவசியம் கிடையாது. பலசாலியாக உடலைவைத்து நினைக்கும் பல மனிதர்கள் மிகவும் மென்மையானவர்கள் என்பதை அவர்களுடன் பழகினால் தான் புரியும்.

அதேபோல் மென்மையானவர்கள் தோல் தோற்றம்கொண்டவர்கள், மிகவும் இறுக்கமான, கொடூரமான எண்ணங்களுடனும் இருக்கின்றார்கள்..!

உருவத்தைப் போலவே உள்ளத்தைக்கொண்டவர்களும் இருக்கின்றார்கள்..!

பல கட்டுப்பாடுகளுடன் வாழ்பவர்கள், உண்மையில் அவற்றையெல்லாம் உடைத்து, நினைத்த வழியில் செல்ல விரும்புபவர்கள் தான்..! அவ்வாறு வாழ்வது பலருக்கு தீமையையும், துன்பத்தையும் ஏற்படுத்தும் என்பதற்காக, முதலில் தமக்குக் கட்டுப்பாடு போட்டு, அதனூடாக மற்றவர்களுக்கும் கட்டுப்பாடுபோட்டு மிகவும் பிடிவாதமான மனிதர்களாக மாறி நாடமாடுகின்றார்கள்..! உண்மையில், அவர்கள் தாம் விரும்பியபடி வாழ்வை வாழமுடியாமல், குடும்பத்திற்காகவும், சமூகத்திற்காகவும், நாட்டுக்காகவும், உலகிற்காகவும் தம்மைத் தொலைத்து, நடித்து வாழ்கின்றார்கள்..!

இவ்வாறாக மிகக்கட்டுப்பாட்டுடன் வாழ்பவர்கள் நீண்டகாலம் வாழவேண்டிய துர்பாக்கிய நிலையை இறைவன் ஏற்படுத்துகின்றான்..! இன்னொரு வழியில் சொல்வதென்றால், அவர்களுக்கு, நன்மை அளிப்பதுபோல் தண்டிக்கின்றான்..!

எனக்கொரு மாமா இருக்கின்றார். மிகவும் பிடிவாதமாகத் தனது கொள்கைகளைப் பின்பற்றி, தனது வாழ்க்கையே தவவாழ்க்கையாக மாற்றியுள்ளார்..! என்னுடைய குருவாக அவரைப் பலமுறை நினைத்தாலும், சிலவேளை ஏன் இப்படி எம்மை வருத்தி மற்றோருக்கு நன்மைசெய்வதற்காக வாழவேண்டும் என்று எண்ணத்தோன்றும்..! அடுத்தநொடி, இறைவன் எம்மை நிறைவாகவே வைத்திருக்கும்போது, ஏன் பாதையை மாற்றவேண்டும் என்ற எண்ணமும் கூடவரும்..! அத்துடன்  நாம் போகும் பாதை சரி என்ற நினைப்பு வர, இந்த வாழ்க்கை தொடர்கின்றது..!

இடையிடையே இவ்வாறான எண்ணங்களும் வந்து, மனத்தை கலைப்பதுண்டு.

இன்று காலை,  தம்பிக்கும், பிள்ளைகளுக்கும் மச்சச் சாப்பாடு வழங்க முடிவுசெய்து, அதற்காகக் கோழி இறைச்சி வாங்க கடைக்கு வெளிக்கிட்டேன். அப்போது வோசிங்மெசினில் சில துணிகளைப்போட்டதால், நீர்த்தொட்டியில் தண்ணீர் குறைந்திருக்கலாம் என்ற எண்ணத்தில் நீர் ஏற்றும் மோட்டரைப்போட்டுவிட்டு, சிலவேளை, அதுபற்றிய எண்ணம் மறந்துவிடாமல் தவிர்க்க, என்னுடைய வழமையான நுட்பமான கதிரை ஒன்றை வாசலில் வைத்துவிட்டு, ஏதோவோர் நினைப்பில், வைத்த கதிரையையும் கவனிக்காமல் கடைக்குச்சென்று இறைச்சி வாங்கி வெட்டிக்கொண்டுவரும்வரை மோட்டர் போட்ட எண்ணமே இல்லாமல் இருந்துவிட்டேன்..! வீடுவரும்போது தான், மனைவி நடந்ததைச் சொன்னார். ஒவ்வொரு சிந்தனைகளும் மாறும்போது சில விடயங்கள் நினைவைவிட்டு அழிகின்றன அல்லது மறைகின்றன. எனது வீட்டுத்தண்ணீர் அடுத்தவீட்டிற்குச் சென்று அவர்களுக்கே இடையூறாக அமைந்துவிட்டது..!  வழமையாக மறதிக்கு மரியாதை செய்யும் நான் அதனால் வரும் விளைவுகளுக்கு நட்ட ஈட்டையும் கட்டித்தான் ஆகவேண்டும்.  மறதியே ஒரு வருத்தமா என்று எண்ணும் அளவுக்கு இன்றைய சூழல் என்னைக்கொண்டுவந்து விட்டுவிட்டது. மனைவி கூட சொன்னார்..! "என்ன உங்களுடைய Technique கூட இன்று work  பண்ணவில்லையோ என்று..?"

 

ஆ.கெ.கோகிலன்

27-08-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!