ஜெலிபிஷ் குஞ்சுகள்..!
Baby jellyfish stings
எனது தாயார் ஏறக்குறைய 80 ஐ நெருங்குபவர். கணவர் இறந்த பின்னரும் தனியாக எம்மை ஆளாக்கப்போராடியவர்..! முதுமையில் வழமையான உடல் உபாதைகள் இருந்தாலும் தன்னம்பிக்கையுடன், தனித்து இயங்கவே விரும்புவர். எப்படி இருந்தாலும், இயற்கை தனது கடமையைச் செய்துகொண்டே இருக்கும். தனது வங்கி அலுவல்கள் செய்ய, அவருக்கு இப்போது எனது உதவி தேவைப்படுகின்றது. பல நாட்களாகக் கேட்டுவிட்டார் ”வங்கிக்கு கூட்டிச்செல்லும் படி..!”. நானும் தலையாட்டிவிட்டு, எனது வேலைப்பளு காரணமாக இழுத்தடித்துவிட்டேன். நேற்று தான் எமது மாணவர்களுக்கு வைக்கும் பரீட்சைகள் முடிவடைந்தன. கடந்த ஒரு மாதமாக இணைப்பாளர் என்ற வகையில் முழுப்பொறுப்பையும் ஏற்றுச்சுமக்கவேண்டிய நிலையில் இருந்தேன். அதற்கிடையே சில முரண்பாடுகள் ஊழியர்களிடையே தோன்றியதால் அவற்றைத் தீர்ப்பதற்கும் முயன்றேன். ஒருவாறு, அவற்றில் இருந்து வெளிவர, வேறுவேலைகள் வந்துவிடும். பரீட்சைகள் நடக்கும் ஒருநாளில் லீவு எடுக்க திட்டம்போட அதுவும் முடியாமல் போய் இன்று தான் லீவு எடுக்கக்கூடியதாக இருந்தது.
இந்த சந்தர்ப்பத்தில் எனது கடைசித் தம்பியும், தனது பிள்ளைகளைக்
கூட்டிக்கொண்டு அம்மாவீட்டிற்கு வந்தபடியால் வங்கிவேலைகள் தள்ளிப்போகின. தம்பிக்கும்,
பிள்ளைகளுக்கும் சமையல் வேலைகளை அம்மா பார்க்க ஆசைப்பட்டதால், எனது லீவும் விரயமாக
இருந்தது. வழமையாகத் தம்பி காரில் தான் வருவது வழக்கம். இம்முறை குளிர்சாதன வசதியுள்ள
பஸ் வண்டியில் வந்ததால், அவருக்கு காரின் தேவை இருந்தது. இதனை உணர்ந்து, அவர்களை காங்கேசன்
துறைக் கடற்கரைக்கு கூட்டிச்சென்றேன். அவர்களுடன் எனது இரண்டாவது மகளும், எனக்கு அடுத்த
தம்பியின் மகளும் வந்ததால், பொழுது இலகுவாகக் கழிந்தது. நீண்ட நேரம் தண்ணியில் மிதந்தேன்.
வெயில் அதிகம் என்பதால் பலர் வந்திருந்தார்கள். இதேவேளை கடல் நீரும் சிறிது வித்தியசமாக
இருந்தது. கடலிற்குள் நிறைய மீன்குஞ்சுகள் இருக்கின்றன எனநினைத்து, கைகளால் பிடித்தேன்.
ஒன்றும் மாட்டவில்லை. ஆனால் உடலின் பாகங்களில் ஏதோ பல இடங்களில் தட்டுப்பட்டுக்கொண்டே
இருந்தது..! மீன்கள் கடிக்கின்றன எனநினைத்து, என்பாட்டிற்கு நீந்த முயற்சித்துக்கொண்டு,
தண்ணீரில் கிடந்தேன். கொஞ்சம் நடுக்கடல் பக்கம் உள்ளே சென்றதும் தண்ணீர் குளிர்ந்தது.
இருந்தாலும் ஏதோ உயிர்கள் உடலில் தட்டுப்படுவது
குறையவில்லை..! கையால் துலாவித்துலாவிப் பிடித்தேன். தண்ணீர் வண்ணத்தில் ஒரு சிறு உயிரினம்
பிடிபட்டது. கண், காது, மூக்கு ஒன்றும் தெரியவில்லை. ஆனால் ஒரு உயிரினம் என்பது மட்டும்
புரிந்தது. தம்பி மற்றும் பிள்ளைகளுக்கு காட்டினேன். அவர்கள், அது ஜெலி பிஷ் குஞ்சுகள்
எனச்சொன்னார்கள்..! கடற்கரையில் கைகளில் நிறையப்பிடிபட்டன. வெயில் கூட என்பதால் இவை
கரைக்கு வந்ததா அல்லது இப்படித்தான் வழமையாகவே இருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால்
ஒரு புதுமையான அனுபவமும், ஒரு வித பயமும் வந்தது..! சிறுவயதில், பாடசாலைக்கு கள்ளம்போட்டு,
நான் காரைநகரிலுள்ள கஜூரினா கடற்கரைக்கு சென்று குளிக்கும்போது, நீலநிற ஏதோ ஒன்று உடலில்
பட்டு, பொக்குளங்கள் ஏற்பட்டு, தெல்லிப்பளை வைத்தியசாலையில் சில நாட்கள் தங்கியிருந்து,
அவற்றை மாற்றியது நினைவிற்கு வந்தது..! பிள்ளைகளும் சொன்னார்கள், இவை உடலில் படுவது
நல்லதல்ல என்று..! பழைய நினைவுகளும் வந்ததால்,
மற்றவர்களைப் பயப்படுத்தாமல் நான் வெளியேறினேன். அவர்களையும் கொஞ்ச நேரத்தில் வெளியேறத்தூண்டினேன்.
இருந்தும் இதைப்பற்றி ஒன்றும் பிள்ளைகளுக்குச்
சொல்லவில்லை. ஏனென்றால் அங்கே பலர் குளித்துக்கொண்டு இருக்கின்றார்கள். எனது அனுபவம் ஒரு தவறான முன்னுதாரணமாக இருக்கலாம்
என்பதுடன், சின்ன வயதுப்பிரச்சனைக்கு அது தான் காரணம் என்று இன்றுவரை என்னால் அடித்துக்கூற
முடியாது. அப்படியிருக்க ஏன், அவர்களைக் குழப்ப
வேண்டும்..?
ஏறக்குறைய மதியம்
வரை குளித்துவிட்டுத்தான் வெளிக்கிட்டோம். பின்னர் அவர்களை அம்மாவீட்டில் இறக்கிவிட்டு,
எனது வீடு வர நேரம் பிற்பகல் ஒன்றாகிவிட்டது.
வீணாகப்போக இருந்த
லீவைப் பயன்படுத்தியதில் திருப்தி. தமபிகளின் பிள்ளைகள் மகிழ்ந்து இருப்பார்கள் என
நம்புகின்றேன்.
மற்றவர்களை மகிழ்விப்பதே நமக்கும் மகிழ்ச்சியைத் தரும்.
ஆ.கெ.கோகிலன்
25-08-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக