வெளிநாட்டு உறவுகள்..!

 



கடந்த சில வருடங்களாக இருந்த கொரோனா வைரஸ் நோய் பரவல் சூழலால் பலர் தமது நாடுகளைவிட்டு இடம்பெயர முடியாமல் இருந்தார்கள். இந்த வருடம் கொஞ்சம் மூச்சுவிடுவதற்கு உரிய வருடம் என்று நினைக்கின்றேன். அனைத்து துறைகளும் வேகம் பெறுகின்றன.  மூன்று வருடங்களில் விட்டதைப் பிடிக்க அனைவரும் ஓடுகின்றார்கள். சிலர் பறக்கின்றார்கள்..! இது தேவையானது தான்.

சுமூகமாகப் போகும் எனது பயணத்திலும் சில தடங்கல்கள் இந்தவருடம் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. பல நட்புகள் பிறநாடுகளில் இருந்து வந்து, என்னைப்பார்க்க முடியாமலும் சென்றுள்ளார்கள். சிலர் எப்படியாவது பார்த்துவிடுகின்றார்கள். இன்னும் சிலர் இங்கு வருவதற்கான சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தும் உள்ளனர். அதேபோல் பல நெருங்கிய உறவுகளும் வருகின்றார்கள். இம்முறை அவர்களுடன் கொஞ்ச நேரமாவது செலவழிக்க விரும்புகின்றேன். அலுவலகப் பணிகள் மற்றும் வீட்டுச்சூழல் என்பன சேர்ந்து, அவ்வாறானவற்றைச் செய்ய அனுமதிக்க மறுக்கின்றது.

இருந்தாலும், வரும்காலத்தையும், பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு உறவுகளை, அவர்களுக்குக் காட்டுவதும், அவர்களுடன் பழகுவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்துவதும் எமது கடமைகளில் ஒன்றே..!

அந்தவகையில் எனது மாமாவின் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் எனது வீட்டுக்கு வந்து சென்றார்கள். அவர்களுக்கும், எமக்கும் அந்த நேரம் ஒர் இனிமையான பழகுவதற்கு அருமையான வாய்ப்பாக இருந்தது.

நானும் எனது உறவுகள் அனைவரிடமும் கடமைப்பட்டுள்ளேன்..! குறைந்தபட்சம் அவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடாவது கொடுக்க நினைத்தேன். அதற்காக ஒரு வீட்டையே கட்டி வைத்துள்ளேன். கடந்த ஆறுவருடங்களில் இந்தவருடமே நால்வர் மாத்திரம் வந்து சென்றார்கள். அதில் ஒருவர் இன்று வந்து, மதிய உணவை முடித்த உடனேயே சென்றுவிட்டார்.

அவருக்காக இன்றைய விசேட வேலைக்கு லீவுபோட்டு, அவருடன் பல இடங்களுக்கு எனது காரிலே சென்றுவந்தேன். கடுமையான வெயில் என்பதாலும், கறுப்பு நிறக்கார் என்பதாலும் பிரயாணம் வெறுப்பாகவும், ஒருவித எரிச்சலாகவும் இருந்தது. சூழலில் இருந்த கடும் வெப்பத்தால் மகிழ்வுடன் பயணம் செய்ய முடியவில்லை. அதுமாத்திரமன்றி, போகும் போது ஒரு வீட்டில் சிறிய விபத்து ஏற்பட்டு காருக்கு சிறு சேதமும் வந்தது.  மழையில்லாததால் வெயிலின் கொடுமை எல்லோரையும் வருத்துகின்றது. அதற்கு நானும், உறவினரும் விதிவிலக்கு அல்ல.

பொதுவாக நான் யாருக்காவது உதவி செய்யச்சென்றால் ஏதாவது தவறுகள், சேதங்கள், இழப்புக்கள் வருவது வழக்கம். இருந்தாலும் உதவுவதை என்னால் நிறுத்த முடியவில்லை.  இறைவன் அல்லது இயற்கை சோதிப்பதாகவே நினைப்பேன். எப்படியாவது பாதிப்புக்களைத் தாண்டி நோக்கத்தை நிறைவு செய்ய முயல்வேன்.

பொதுவாக, வாழ்வே, தானும் நிம்மதியாக இருந்து மற்றோரையும் மகிழ்விக்கத் தான் இருக்கின்றது.

நாளை நாம் இருப்போமா என்பது தெரியாது. ஆனால் இருக்கும் போது உறவுகளையும், நட்புக்களையும் பேண எம்மால் இயன்ற அளவிற்கு முயலவேண்டும். அதற்கு முதலில் உண்மையாகவும், உதவக்கூடிய மனப்பாங்குடன் இருக்கவும் வேண்டும். அப்படியிருந்தால் தான், உதவியால் கிடைக்கும்  திருப்தி சாத்தியப்படும். இல்லை என்றால்  புலம்பல்களும், வேதனைகளும் மிஞ்சும் வழமையான பத்தோடு ஒன்றான வாழ்க்கையாகிவிடும்.

 

ஆ.கெ.கோகிலன்

05-08-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!