வழக்குகள்..!

 


நான் பணிப்பாளராக வந்த பிறகு நீதி மன்றம், சட்டத்தரணி எனத்திரியவேண்டிய ஒரு சூழல் இயல்பாக வந்தது. எனது அறிவுக்கு எட்டியவரை, கட்டிளமைப்பருவம் கடந்த பிறகு நான் அறிந்து பிழைகள் செய்தது இல்லை எனலாம். அதற்கு முதல் தவறுகள் நடந்துள்ளன. இன்றுவரை அப்படியான தவறுகள் மேலும் நடக்காமல் இருக்க, ஒவ்வொரு நாளும் இறைவனிடம்  வேண்டுகின்றேன். மனிதன் என்பவன் விலங்குக்குணம் கொண்டவன் தான். கற்ற மற்றும் பட்ட அறிவால் தன்னைச் செதுக்கி, நல்ல மனிதநேயம் படைத்த மனிதனாக மாறுகின்றான். இந்தமாற்றம் ஒவ்வொருவரிடமும் நடந்தால், நாடு நலமாகவும், முன்னேற்றம் பெறக்கூடிய வகையிலும் இருக்கும்.  ஆனால் யதார்த்தம் படிப்பவர்கள் இன்னும் சாணக்கியத்துடன் தவறுகள் செய்து வயிற்றை வளர்ப்பதும், ஏழைகளைச் சுரண்டுவதையும் பார்க்கும்போது நான் சரியான கல்வியை வழங்குகின்றோமா என்ற கேள்வியே வருகின்றது.

அறிவு வர வர அடக்கமும், அமைதியும் வரவேண்டும். பேரவாவும், ஆணவமும், வந்தால், அவர்களைக் காப்பாற்றுவதே கடினம். காலமே அதற்கான படிப்பினையை வழங்கும்.

பிழை செய்த காலம் அறியாப்பருவம் என்பதால் மன்னித்துவிட்டு, பிழையே செய்யாத முதிர்ந்த காலத்தில் வழக்குகளுடன் என்னைச் சிக்க வைத்த இறைவனின் செயலைப்பார்த்து ஆச்சரியப்படுகின்றேன்.  எமது நிறுவனம் தொடர்பான ஒரு காணிப்பிரச்சனைக்கு  யாழ்நீதிமன்றம் முதல் கொழும்பு உச்ச நீதிமன்றம் வரை செல்லவேண்டிய சூழல் இருந்தது.

அதேபோல், வயது முதிர்ந்த ஒருவர் எமது நிறுவனத்தில் நடாத்திய சிற்றூண்டிச்சாலை காரணமாக மனித உரிமைகள் ஆணைக்குழு முதல், பொலிஸ் நிலையம், யாழ் மாவட்ட அலுவலகம், ஆளுனர் அலுவலகம், முதலமைச்சர் அலுவலகம் மற்றும் எமது நிறுவனத் தலைமையகம் என அனைவருக்கும் பதிலளிக்க வேண்டிய கடமையும், குறைகேட்க வேண்டிய சூழலும் இயற்கையாலே தரப்பட்டது.

கடந்த சில வாரங்களாக இவற்றைத்தீர்க்க அலைந்தேன். அரச அதிபர், ஆளுனர், மாவட்டச் செயலாளர் மற்றும் காணி ஆணையாளர் போன்றோரைச் சந்தித்து, இப்பிரச்சனைகளை முடிக்க இயன்ற உதவிகளைக் கேட்டேன். இன்று யாழ் மாவட்டச் செயலாளர், காணிப்பிரச்சனைக்கு காரணமான பகுதியில் இருந்து, இனி எந்தப்பிரச்சனையும் வராது. சட்டமும் விரைவில் முடிவுக்கு வரும். அந்தப் பிரச்சனையுள்ள காணியைப் பயன்படுத்த முடியும்  எனப்பல இனிப்பான செய்திகளை வழங்கினார்.

வலிய வந்தவை வலியவே போகும்..! நாமறியோம் பராபரமே..!

விதிகளையும், நியதிகளையும் மதித்தும், புரிந்தும் நடப்போம் என்றால், நிறைவான வாழ்வு எமது நாட்டுக்கு வெகுசீக்கிரம் கிடைக்கும் என்பது எனது நம்பிக்கை.

 

ஆ.கெ.கோகிலன்

16-08-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!