வாழ்வை அர்த்தமாக்குபவர்..!
இன்று ஒரு பதட்டத்துடன் வேலைக்கு போகவேண்டி வந்துவிட்டது.
வழமையாக ஏறக்குறைய 8 அல்லது 9 மணி நேரங்களுக்கு மேல் எனது நிறுவனத்தில் நிற்பதில்லை.
மாலை ஒரு வெளிநாட்டு இலங்கையர் ஸ்தாபித்து நிர்வாகிக்கும், ஒரு கணினி மென்பொருள் தயாரிப்பு
நிறுவனத்திற்கு ஒரு சிறப்பு அதிதியாக போகச் சம்மதித்துவிட்டேன். இன்று மாலை
தொடங்கி, முடியும் வரை அங்கேயே நிற்பது என்றும் முடிவெடுத்ததால் ஏறக்குறைய
15 மணிகள் வீட்டைவிட்டு வெளியே நிற்கவேண்டிய சூழல். அத்துடன் இப்படியான சந்தர்ப்பங்களில்
காரில் போவது தான் வழக்கம். இன்றும் அவ்வாறே நினைத்து எல்லா வேலைகளையும் நேரத்தோடு
முடித்துக்கொண்டு, விரைவில் நேரத்தோடு செல்லக் காரை ஸ்டாட் செய்தேன். அது இயங்க மறுத்தது.
பல வழிகளில் முயன்றேன். முடியவில்லை. மகளும் முனைந்தார் முடியவில்லை. பின்னர் வழமைபோல்
மோட்டார் சைக்கிளில் சென்றேன். அங்கு பல வேலைகள் இருந்தன. அவற்றை முடித்துக்கொண்டு,
காரின் பிரச்சனை பற்றித்தேடினேன். அப்போது,
திருட்டுக்களில் இருந்து காரைத்தடுத்து வைக்கும் நுட்பம் (Immobilizer) தொடர்பாக இணையத்தில்
அறிந்தேன். பின்னர் புரிந்தது.. ”காரில் ஒரு பிழையும் இல்லை. சாவியிலுள்ள பற்றரியின்
தன்மை குறைந்ததால் தான் இந்தப் பிரச்சனை வந்துள்ளது. என்பதை..!”
அத்துடன் நான் நினைத்ததற்கு மாறாக வேளைக்கே வேலை முடிந்தது..!
பின்னர், வீடு வந்து, கார் சாவியின் பற்றரியை மாற்றிக்கொண்டு, மாலை நிகழ்வில் கலந்துகொண்டேன்.
மிகவும் சிறப்பாக நிகழ்வுகள் ஒழுங்கு படுத்தப்பட்டு இருந்தன. பல அறிமுகங்கள் கிடைத்தன.
லண்டனிலே 3வது நிலையில் பெற்றோல் செட் மூலம் அதிக வருமானம் பெறும் எமது பிரதேசத்தைச்
சேர்ந்த மனிதரின் சாதனையைப் பார்த்துப் பிரமித்தேன். அவரைப்போல் பலர் உருவாக வேண்டும்.
பல பிரமுகர்கள் மத்தியில் என்னையும் சிறு உரையாற்ற அழைக்க, நானும் தயார்படுத்தல் இல்லாமல்
குழப்பத்துடனேயே இருந்ததால், சொதப்பல் இல்லாமல் தப்பித்தேன்..! ஒருவாறு சமாளித்தேன்..!
ஒரு சிறப்பான பேச்சை முன்னெடுக்க, தயார்படுத்தல் இருந்தால், பொதுமக்களுக்கு மிகநன்மையானதாக
இருக்கும். ஆனால் அப்படியான பேச்சைச் செய்யவில்லை என்று ஒரு சங்கடமும் இருந்தது. இருந்தாலும்
எம்மைக் கௌரவித்து, பரிசு தந்து, சிற்றூண்டிகளுடன் இரவு உணவும் தந்து அனுப்பி வைத்தார்கள்.
அந்தச்சமயத்தில் மெய்வெளி என்ற ஒரு இணையத்தொலைக்காட்சிக்கான மென்பொருளான செயலி ஒன்றை
உருவாக்கி, வெளியிட்டார்கள். அதன் ஸ்தாபகர்களும், வழிநடத்திச் செல்பவர்களும் வந்து
சிறப்பாக அதனைச் செய்தார்கள். விருதுகள் வழங்கினார்கள். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்
வந்து, தனது வளர்ச்சியையும், மென்பொருள் நிறுவனரின் வளர்ச்சியையும் கூறினார். நான்
கூட எனது பேச்சில், நாட்டைவிட்டு ஓடுவதை விடுத்து, நின்று சாதிக்க கேட்டுக்கொண்டேன்.
இன்னும் இருவருடங்களில் தற்போது காணப்படும் பிரச்சனையின் தன்மை குறைந்துவிடும். சுருக்கமாக,
சிக்கனமாக வாழப் பழகவேண்டும். நன்றாக முயற்சி செய்ய வேண்டும். எம்மிடம் நிறைய வளம்
இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்த வேண்டும். இலங்கை அழகான ஒரு நாடு. எல்லா வளமும் உண்டு.
நாம் தான் நாட்டைக்காக்க வேண்டும். ஓடக்கூடாது..! என்று சொன்னதுடன் எனது சாதனைகளையும்
குறிப்பாக முதல் தமிழ் மூலம் தகவல் தொழில்நுட்பம்
என்ற ஒரு புத்தகத்தை எழுதியது பற்றியும், திருகோணமலையில் தகவல்தொழில்நுட்ப கற்கைநெறியை
தனியாகத் தொடங்கியது பற்றியும் கூறினேன். அதேபோல் இந்த மென்பொருள் நிறுவனருக்கும் திருகோணமலைக்கும் தொடர்பு உண்டு. அவரும் முதலில்
அங்கேதான் நிறுவனத்தை தொடங்கினார். அதுவும் நான் வாழ்ந்த உவர்மலைப்பகுதியில் என்பதால்
அவருடன் நிறைய என்னை இணைக்க முடிந்தது..! அவரது மனைவியின் இடமும் திருகோணமலை என்பது
மேலும் ஒரு சிறப்பு.
நான், பொதுவாக இப்படியான வெளி நிகழ்வுகளில் கலந்துகொள்வதைத்
தவிர்ப்பதே வழக்கம். ஆனால் சில காலம் மட்டுமே இங்கு இருக்க முடியும் என்ற நிலையில்,
வரும் வாய்ப்புக்களை பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கத் தொடங்கியுள்ளேன். அதன் விளைவே,
இந்த அனுபவம் பெற உதவியது..!
ஆ.கெ.கோகிலன்
19-08-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக