ஆளுனர் சந்திப்பு..!

 

பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கித்தவிக்க, அதற்குள் இருக்கும் அரச நிறுவனங்களும்  வேலைச்சுமைகளுக்குள் மாட்ட, மக்கள் வேறுவழியின்றி புலம்பெயர்ந்து ஓட காரணம் என்று நாம் கைகாட்டுவது ஊழல் வாதிகளை..!

ஒவ்வொருவரும் தாம் தமது கடமைகளை நிறைவாகச் செய்தோமா என்று பார்த்தால் எத்தனை தடவை அரசையும், அரச அதிகாரிகளையும் ஏமாற்றியிருப்போம். ஒரு சாதாரண போக்குவரத்து வீதியில் கூட எம்மால் விதிகளைப் பின்பற்றி நடக்க முடியவில்லை. ஆனால் அனைவரையும் குறை கூறுகின்றோம்.

நாடு இந்த நிலைக்கு வந்ததற்கு காரணம் நாமே..! பிறநாடுகளில் போய் 8 மணிநேரம் தாண்டி வேலைசெய்து, பிள்ளைகளையும், மனைவியையும் பார்க்காமலே காலத்தை ஓட்டி, எப்போது விடுமுறை வருகின்றதோ அப்போது, இலங்கை வந்து, இங்குள்ளவர்களுக்கும் ஆசைகளைத்தூண்டி, எல்லோருமாக அவதிப்படுகின்றார்கள்..!

நிறைவும், வெற்றியும் பிறரிடம் இல்லை. எம்மிடமே உண்டு. ஆனால் காலம் கண்ணை மறைப்பதால் புரியாமல் செல்கின்றோம்.

தற்போது, தொழில்வாய்ப்புகள் குறைந்ததால் பலர் வாழ முடியாமல் தவிக்கின்றார்கள். சிலர், பலரின் வேலைகளைக்கூடப்பறித்து, அரசிற்கு வரிகட்டி, மற்றவர்களின் வயிற்றெரிச்சலுக்கு உட்படுகின்றார்கள்.

நாம் நல்லாக இருக்க நாம் மட்டும் இருந்தால் போதாது. சுற்றியுள்ளவர்களும் இருக்க வேண்டும். அவர்களும் வாழ வேண்டும். ஒன்று பட்டால் தான், உண்டு வாழ்வு. பறித்து, மறைத்து தனியே வாழ்வதால் என்ன பயன்..? வாழ்வதும் சாவதும் ஒன்று தான்.

எமது நிறுவனத்தில் பல குறைகள் உண்டு. நிதிப்பிரச்சனைகள் தொடங்கி, இடம், ஆளனி மற்றும்  ஏனைய கட்டிட தளபாட வசதிகள் என்று பல தேவைகள் இருக்கின்றன. அதனைத் தெளிவுறத் தெரியப்படுத்த, குழு அமைத்தும் பலனில்லாமல், நானே எனது எண்ணத்தில் செயற்படவேண்டிய சூழலுக்குள் மாட்டியுள்ளேன்.

முரண்பாடுகள், ஆசைகள், ஆவணம் போன்றவற்றின் தாக்கங்களால், பிளவுபட்ட மனநிலையில், தாமும் கலங்கி, எம்மையும் கலக்கி திணறடிக்கின்றார்கள்..!

கலங்கக் கலக்குவதால் தெளிவு வருவதுபோல் எனக்கும் பல தெளிவுகள் வந்தன. யாரையும் நம்பத்தேவையில்லை.  பலன் இல்லாவிட்டாலும், கடமை தவறக்கூடாது என்ற நிலைப்பாட்டில் நிற்கக் கடும் சட்டதிட்டங்களைப் போடவேண்டிய நிலை ஏற்படுகின்றது.

பல நாட்களாகப் போடப்பட்ட ஆளுனர் சந்திப்பு இன்று எதிர்பாராமலே நடந்தேறியது. எனது நோக்கங்களையும், தேவைகளையும் தெரியப்படுத்தினேன். அந்த அளவில் தான், நான் திருப்திப்பட முடியும். உண்மையான திருப்தி, பிரச்சனைகள் குறைந்து நிறுவனம், போதிய சேவையை மக்களுக்கு வழங்கினால் தான்,  எனக்கும் வரும். மக்களும் மகிழ்வார்கள்.

ஆளுனரைச் சந்திக்கப் போட்ட திட்டம் நடந்தேறியது. ஆனால் அந்தப்பாதையில் பயணித்த பலர், செய்வதற்கு ஒன்றும் இன்றித் திரும்பலாம்.

சரியான பயணம் தடைகள் வந்தாலும் போய்சேரும். தவறான பயணம் விரைவாகச் சென்றாலும் விதியின் வலையில் சிக்காமல் செல்வது, நிச்சயம் கடினம்.

 


ஆ.கெ.கோகிலன்

10-08-2023.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!