2025 பிறந்தது..!
அண்மைய காலங்களில் ஊடகங்கள் இயற்கை அழிவுகளையும், இலங்கை அழிவையும் பற்றிக்கதைத்ததால், பொதுவாக பலருக்கு 2025 ஐப் பார்க்க முடியுமா என்ற சந்தேகமே இருந்தது..! கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணப்பகுதிகளில் மழைவேறு தொடர்ந்து வந்ததால், சிலவேளை குறித்த சோதிடர் சொன்னது பலித்துவிடுமோ என்ற ஒரு சந்தேகமும் இருந்தது..! என்ன தான் இந்த இயற்கையினையும், உலகினையும் அறிந்திருந்தாலும், அதையும் தாண்டி அறியாத பல விடயங்களை தர, இறைவன் எப்போதும் காத்திருக்கின்றார்..! யாரும் எல்லாம் தெரிந்துவிட்டது என்று மார்தட்ட முடியாது..! “வல்லவனுக்கும் வல்லவன் வையகத்தில் வந்துகொண்டே இருப்பான்..! ” என்ற உண்மையைப்போல், பலர் பயந்தாலும், இறைவன் 2025ஐ பார்க்க எமக்கு வழிவிட்டுள்ளான்..!
இம்முறை 2025ஐ, நான் திருகோணமலையில் இருந்து பார்க்க விரும்பினேன்..! 31ம் திகதி 2024 ஆண்டு, செவ்வாய்க்கிழமை மாலை 4.15 மணி பஸ்ஸில் திருகோணமலைக்கு வந்தேன். வழமைபோல், வரும்போது, இம்முறை உயர்தரம் வர்த்தகம் படிக்கும் ஒரு மாணவருடன் கதைக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவரும், நீண்ட நேரம் போனுடன் இருந்தாலும், என்னுடன் நிறைய விடயங்களைப் பகிர்ந்தார்..! வர்த்தகம் படிக்கும் போதே சமாந்தரமாக AAT இனையும் படிக்கின்றார்..! அதில் 3 நிலைகள் இருப்பதாகவும், தான் நிலை 3 ஐ உயர்தரப்பரீட்சை முடிந்த பிறகு படிக்க இருப்பதாகவும், அதற்குள் இரண்டு நிலைகளையும் முடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருப்பதாகவும் சொன்னார்..! அவரது அக்கா தான் 2023இல் திருகோணமலையில் வர்த்தகத்தில் முதலாவது நிலையில் இருப்பதாகவும், ஸ்ரீஜெயவர்த்தனாபுர பல்கலைகழகத்திற்கு முகாமைத்துவப்பட்டம் படிக்க தெரிவாகி இருப்பதாகவும் 2025 ஆரம்பத்திலே தான் அவர் போக இருப்பதாகவும் கூறினார். தந்தை சிங்களவர் என்றும், தாய் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் என்றும், சாதாரண நிலையிலுள்ள குடும்பம் என்றும், மூன்று மொழிகளிலும் புலமை இருப்பதாகவும் கூறினார்..! அவரது திறமையைப் பாராட்டியதுடன், பிடித்த துறையில் சாதிக்க வாழ்த்துக்கூறிவிட்டு, எனது அறைக்கு வந்தேன்.
சரியாக இரவு 12.00 மணிக்கு 2024 மறைந்து 2025 பிறந்தது..! அந்த நேரம், வீட்டில் இருந்து அழைப்பு வந்தது..! மனைவியும், மூத்த மகளும் வாழ்த்துக் கூறினார்கள். நானும் பதிலுக்குக் கூறத்தொடங்கினேன்..! முடியவில்லை. தொடர்கின்றது..! இரவு மழை பெய்ததால், காலை உடற்பயிற்சி வெளியில் இல்லை. வழமைபோல் அறைக்குள் செய்தேன். அப்போது தான் மணிக்கூட்டைப் பார்த்தேன். மணிக்கூடு ஓடவில்லை. அப்பவே புரிந்தது. இன்று நேரம் எனது கட்டுப்பாட்டில் இல்லை என்பது..! நினைத்த மாதிரியே நேரமும் நானும் முரண்பட்டுக்கொண்டே வந்தோம்..! இருந்தாலும் நினைத்த அனைத்தையும் செய்து முடித்தோம்.
காலையில் இருந்து உணவுக்கு பஞ்சமே வரவில்லை. பல உணவுகள் வந்தன..! விரயப்படுத்த விருப்பமில்லை என்பதால் பலருக்கு கொடுக்கச் சொன்னேன்.
நானும் கொடுப்பதற்கு வைத்திருந்தேன். அது மாத்திரமன்றி, அரசு சொன்ன அனைத்து அறிவுரைகளையும் பின்பற்றினோம். காலையிலே கொடியேற்றித் தேசிய கீதம் பாடி, இரு நிமிட அக வணக்கத்துடன், "Clean Sri Lanka" என்ற பொருளில் அரச துறைகளில் தூய தன்மையைக் கொண்டுவர உறுதிபூண்டோம். அழகான எமது நாட்டை, தொடர்ந்து அழகாக்க வேண்டியது எமது கடமையே..! அதனைச் சரியாக செய்து, நாட்டை முன்னேற்றப் பாடுபடுவோம் எனக்கூறி, பின்னர் முதலே தீர்மானித்த முறையில் ஏனைய அனைத்து நிகழ்வுகளையும் செய்து முடித்தோம். பல சுவை உணவுகளை உண்டு மகிழ்ந்தோம்.
எமது நிறுவன பெண் ஊழியர் ஒருவரின் கணவர் சங்கிலிய மன்னரின் பல தலைமுறைகள் தாண்டிய வாரிசு என்றும், நீண்டகாலமாக வவுனியாவில் இருப்பதாகவும், தமது உறவுகளின் விபரங்கள் https://www.jaffnaroyalfamily.org/familytree2.html என்ற இணையத்தில் இருப்பதாகவும், வீடுகளில் நந்திக்கொடி இருந்தால் அவர்கள் தமது உறவினர்களாகத்தான் இருப்பார்கள் எனவும்கூறினார்..! அவரது சகலர் எனது மாணவர், மூதூரில் படித்தவர். இந்த சந்திப்பு, ஒரு வரலாற்று ஆய்வுக்கு என்னைத் தூண்டுகின்றது..!
வருட முதல் நாளில் எமக்கு வாழ்த்துக்கள் வந்தன..! பணமும் வந்தது..! உணவுகளும் வந்தன..! மகிழ்ச்சியும் வந்தது..! நேரம் என்ற ஒன்றுமட்டும் சற்று சொதப்பினாலும், நினைத்த அனைத்தையும் செய்து முடித்தோம்..!
நின்ற கடிகாரத்தையும் திருத்தக் கொடுத்துவிட்டேன். நாளை மணிக்கூடு சரியாகும். எனது நேர கட்டுப்பாடுகளும் அதற்கு ஏற்ப சரியாகும்.
2025 இல் எமது நிறுவனம், 25 ஆண்டுகள் வழங்கிய சேவைகளை நினைவுபடுத்தி, வெள்ளிவிழா நிகழ்வு வர இருப்பது, எமக்கு மிகுந்த மகிழ்ச்சி..!
ஆ.கெ.கோகிலன்
01-01-2025.
கருத்துகள்
கருத்துரையிடுக