தர்ப்பை போடுதல்..!
அம்மாவின் வயது மூப்புக்காரணமாக தனது கடமைகளை எமது கைகளில் தரத்தொடங்கியுள்ளார்..! அதில் ஒன்று, எமது ஊரிலுள்ள கோவில் பூஜைகளை எம்மைச் செய்ய தூண்டியுள்ளார்..! நான், கோவிலுக்கு கொஞ்சம் தூரமாக இருப்பது வழக்கம். அதற்கு ஒரு காரணம் உண்டு. எனது தாயின் தந்தையார் மற்றும் தாயின் இரண்டாவது அண்ணன்..! இவர்கள் இருவரும் கோவில் பக்தி அதிகமானவர்கள். அதேபோல் பல ஆச்சாரங்களைக் கடைப்பிடித்தவர்கள். அதுமாத்திரமன்றி, பூலோகப்பார்வையில் எல்லாம் இருந்தும், அனைத்தையும் துறந்தவர்கள்..! அம்மாவின் தந்தையார் இறந்துவிட்டார். இப்பவும் எமது ஊரில், வயதான மனிதர்களிடம் கேட்டால், அவரைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள்..! கோவில் என்றால் கொலையும் செய்யக்கூடியவர்..!
அதேபோல் எனது மாமா, தற்போதும் கொழும்பில் இருக்கின்றார்..! வயது மூப்புக்காரணமாக வெளியே செல்வது மிகக்குறைவு. ஒரு ஐயரைவிட அதிக ஆச்சாரத்துடன் வீட்டில் இருந்தே, இறைவனைச் சிக்கெனப்பிடித்து வைத்துள்ளார்..! எந்த நேரமும் இந்தப்பூலோக வாழ்க்கையை திறக்கத் தயாராகவும், அதனை மாத்திரமே வேண்டியும் கொண்டிருக்கின்றார்..!
இந்த இருவரது வாழ்வும் எனக்குப் பயத்தையே தருகின்றது..! கோவிலுக்கு
கிட்டப்போகவே பல கேள்விகள் தான் முதலில் எழுகின்றன..?
அதனாலே சற்றுத் தூரவாகவே இருக்கின்றேன். சின்னவயதில் ஏறக்குறைய
16 வயதிற்குக் கீழ் அடிக்கடி போவது வழமை..! பக்தியை விட ஐயரின் பிரசாதம், அந்த ஆர்வத்திற்கு
காரணம்..!
தற்போது, முயலாமல் ஒன்றும் கிடைக்காது என்ற உண்மை தெரிந்ததால்,
அதிலேயே கவனம் செல்கின்றது..! 60 வயதிற்குப் பிறகு அல்லது எனது ஓய்விற்குப்பிறகு மீண்டும்
கோவில்களுக்குப் போக எண்ணியுள்ளேன்.
அதற்கு வழிகோலுவதாக, அம்மா என்னை இந்த முறை ஒரு கோவில் பூசைக்காவது
தர்ப்பைபோட்டு அந்தக்கோவிலின் பூசைக்குரிய
அனைத்தையும் குறிப்பாகச்செலவுகளையும், அதனால் வரும் பலாபலன்களையும் என்னை ஏற்கச் சொன்னார்.
ஏற்கனவே தம்பி அம்மாவுடன் இருப்பதால், இவை அனைத்தையும் அவரே பார்க்கின்றார்..!
செலவுகளை எல்லாரும் பங்கிட்டாலும், நின்று செய்வது அவரே..!
சரி என்று அம்மாவின் கோரிக்கையையும் நிறைவேற்றத் தீர்மானித்து, வியாழக்கிழமையே யாழ்
வந்துவிட்டேன்..! நேற்று, வெள்ளிக்கிழமை, அம்மா சொன்னபடி எமது கோவில் கடமைகளை முடித்தோம்.
அம்மாவிற்கு சற்று மகிழ்சியாக இருக்கும் என்று நம்புகின்றேன். இருந்தாலும் இம்முறை
நான் தர்ப்பை மட்டும் தான் போட்டேன். செலவுகளை அம்மா முற்கூட்டியே கொடுத்துவிட்டார்..!
அவர்களை கோவிலுக்கு எனது காரில் ஏற்றி இறக்கிய சாரதி வேலையையும் மட்டும் கூடச்செய்தேன்.
இந்தமுறை, திருகோணமலையில் இருந்து வரும்போது என்னிடம் படித்த
இரு மாணவர்களை சந்தித்தேன். அவர்களில் ஒருவர்
திருமணம் முடித்து, மனைவி பிள்ளைகளுடன் இருக்கின்றார். உப்புவெளிப் பிரதேச சபையில்
முக்கிய பொறுப்பில் இருக்கின்றார். மற்றையவர் யாழில் படித்தவர். ஏதோவோர் நிறுவனத்தில்
வேலைசெய்கின்றார். பஸ்ஸில் அவர்களுடன் கதைத்தது
மகிழ்ச்சியாக இருந்தது..!
2024 இல் திருகோணமலை போய் 2025இல் யாழ்ப்பாணம் வரும்போது
ஒரு திருப்தி ஏற்பட்டது..! ஒருவருடத்தை ஒருவாறு தாண்டிவிட்டேன் என்பதே அந்த திருப்திக்கு
காரணம்..! எனது மனநிலை மிகவும் விசித்திரமானது..! எதைப்பற்றியும் யோசிக்காமல், காலத்துடன்
கரைந்துவிடுவேன்..! ஒரு வருடம் முழுமையாகத் திருகோணமலையில் பணிப்பாளராக இருப்பேன் என்று
நான் கனவும் கண்டதில்லை..! அங்கே வேலை செய்த
காலத்தில் பணிப்பாளராக வர ஆசைப்பட்டதுண்டு. நாம் ஆசைப்படும் அனைத்தும் நடக்கும் என்று
சொல்லமுடியாது. சிலவேளைகளில் எனது முடிவும், இறவைனின் முடிவும் ஒன்றாகும்போது அது இயல்பாய்
அமைந்துவிடும். அது தான் நடந்தது..!
2025 பிறந்தபிறகு, அல்சரால் அவதிப்பட, எனக்கு வீட்டு உணவுகள்
தந்து ஓரளவிற்கு எனது கடமையைச் செய்ய உதவியவரும் எனது மனைவியின் பெயரைக் கொண்டவரே என்பதில்
ஆச்சரியம்..!
நான் நினைப்பது போல், அனைத்தும் ஏதோவோர் அட்டவணைப்படியே நடக்கின்றது
என்று உணர்கின்றேன்..! சிறப்பாக அது நடக்கட்டும்..! நானும் அதன் போக்கில் இணைந்து மகிழ்ந்து
பயணிக்கின்றேன். நல்லது வந்தாலும் சரி, கெட்டது வந்தாலும் சரி அனைத்தும் தற்காலிகமே
என்பதில் மட்டும் நூறுவீத நம்பிக்கையுண்டு..!
ஆ.கெ.கோகிலன்
11-01-2025.
கருத்துகள்
கருத்துரையிடுக