தகவல்களின் தரம்..!

 


இன்று காலை உடல் சற்று சோர்வாக இருந்தபோதிலும், உடற்பயிற்சி செய்ய முனைந்தேன்.

அப்போது, ஒரு பாதுகாப்பு உத்தியோகஸ்தர் போனுடன் இருந்தார். என்னைக் கவனித்தாலும் போனில் ஏதோ பார்த்துக் கேட்டுக்கொண்டு இருந்தார். இந்தத் தொலைபேசிகள் வந்து, மனிதர்களை எங்கும் படிக்கவும் மற்றும் பார்க்கவும் வைக்கின்றன..! உண்மையில் இனி கல்வி என்பது அனைவருக்கு உரித்தாகிய ஒன்று தான்.  யாரும் விருப்பம் இருந்தால் எதையும் படிக்கலாம். பணம் இருந்தால், இன்னும் பணம் சம்பாதிக்கக்கூடிய கல்வியை இணைய உதவியுடன் தொலைபேசி வாயிலாகப் படிக்கலாம்..!

அறிவை வளர்க்க வேண்டும் என்றால் தொலைபேசிகள் ஊடாக,  தொலைபேசிக்கும் மனிதனுக்கும் உயிர் இருக்கும் வரை, தொடர்ந்து படிக்கலாம்..! தொலைபேசிக்கு உயிர் என்பது அதற்கு வழங்கும் மின்கல மின்சாரம் தான்..! முந்தைய காலத்தில் படிப்பதற்கு வயது தடையாக இருந்தது..! மொழி தடையாக இருந்தது..!  வசதி வாய்ப்புகள், பொருளாதாரம் என்பன தடையாக இருந்தன..! தற்போது இவை எல்லாம்  பெரும்பாலும் நீக்கப்பட்டுள்ளன..!

பாடசாலைக்கல்வி, தொழில் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி, ஆய்வுகள் மற்றும் ஆக்கங்களுக்கான  பயிற்சிக் கல்வி என கல்வியைப் பல வடிவங்களில் பார்க்க முடியும். இந்தக்கல்வியை ஒரு சாராரே  செய்ய முடியும். உதாரணத்திற்கு ஒரு வைத்தியருக்கான அறிவை பெறுவதற்கு, முதலில் பாடசாலைக்கல்வியை சிறப்பாகச் செய்திருக்க வேண்டும். பின்னர் பல்கலைக்கழகக் கல்வியை முடிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து எவ்வாறு வைத்தியராகத் தொழில்பட வேண்டும் என்ற பயிற்சிக்கல்வியை முடிக்க வேண்டும். இந்த வழியில் அனைத்தையும் தெரிந்து வர, ஒருவருக்கு சுமார் 20 வருடங்களுக்கு மேல் தேவைபடும்..! ஆனால் ஒரு நோய் வருவதற்கான காரணத்தையும், அந்த நோய்கான மருத்துவத்தையும், தவறான மருந்துகளால் ஏற்படும் பாதிப்புக்களையும் இந்தத்துறையில் ஆர்வமுள்ள ஒருவரால் தற்போது எளிதாகத் தெரிந்துகொள்ள முடியும். அதற்கு நிறையத் தகவல்களை அள்ளி வழங்கும் தளங்கள் இருக்கின்றன..! அவை பல வடிவங்களில் தகவலை வழங்குகின்றன..!

உதாரணத்திற்கு, மேற்படி சொன்ன தகவலை எழுத்து, புகைப்படம், வரைபு, ஒலி, ஒளி மற்றும் அனிமேசன் அல்லது வீடியோ வடிவில் பெறமுடியும்..! தற்போது உலகமே கையடக்கத்தொலைபேசிக்குள் அடங்கியிருக்கின்றன..!  எல்லாவற்றையும்  யாரும் அறிய முடிகின்றது. பலர் எமக்கான தகவல்களை வழங்கிக்கொண்டிருக்கின்றார்கள்..! ஆகவே தகவலை தேடுபவர்களுக்கும், தகவலைப் பயன்படுத்த விரும்புபவர்களுக்கும்  அதிகரிப்பதால், தகவல் பற்றாக்குறை வருவதற்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகின்றன..! எல்லா விடயங்கள் தொடர்பாகவும் தகவல்கள் இருக்கின்றன..!

நீங்கள் தேடும் தகவல்கள் இந்த உலகத்தில் இல்லாதவையாகவும், கற்பனை உலகத்தில் காண்பவையாகவும் இருந்தால் கூட, அவற்றைத் தருவதற்கும் நிறைய நுண்ணறவு தொழில்நுட்பங்கள் இருக்கின்றன..! ஆக, தற்போது இருக்கும் மக்கள் தகவல் கடலுக்குள் நீந்துகின்றார்கள்..! தகவல் எங்கும் பரந்து விரிந்து  இருக்கின்றன..! அவற்றைப் பயன்படுத்தி, தீர்மானங்களை எடுக்க முடியுமா அல்லது இருக்கும் தகவல்களை நம்ப முடியுமா என்றால் மிகப்பெரிய கேள்விக்கூறி  தான் ஏற்படுகின்றது..!

தற்போது நீங்கள் எந்த ஊடகத்தின் வாயிலாகப் பெற்ற தகவல் என்றாலும், அவற்றை அப்படியே நம்ப வேண்டாம்..! சொல்லுபவர்கள் நம்பிக்கையானவர்களாக இருந்தாலும், நம்ப வேண்டாம்..! இணைய வெளியில் கண்ணுக்குத் தெரியாக எத்தனையோ சுத்துமாத்து வேலைகளைச் செய்ய முடியும்..! அதற்கு பல வழிகள் உண்டு. எவ்வளவு பெரிய அதிபுத்திசாலி என்றாலும், அதை விட அதை விட எனப்பல புத்திசாலிகள் வந்துகொண்டு தான் இருக்கின்றார்கள்..!  அதற்கேற்ப ஆபத்துக்களும், பாதிப்புக்களும் வந்துகொண்டே இருக்கின்றன..! கணினி உலகில் அனைத்தும் நொடிக்கு நொடி புதுப்பிக்கப்பட்டுக்கொண்டு தான் வருகின்றன..! அடுத்தடுத்த வெளியீடுகள் அல்லது வெர்சன் (Version) என்பன  மறைமுகமாகச்சொல்வது, முதல் வந்ததில் தவறுகள் இருப்பதாகவும், அவை காலத்திற்கு ஏற்றதாக இல்லை என்பதாகவும் அடுத்த அடுத்த இற்றைப்படுத்தல்களை (Updating) நடைமுறைப்படுத்துவதே ஏற்புடையது..! எனவே இணைய உதவியுடன் பெறப்படும் அனைத்துத் தகவல்களும், உண்மையில் தரவுகளே..! அவற்றின் உண்மைத்தன்மை தொடர்பாக நீங்கள், உங்கள் சூழலுக்கு ஏற்ப மீண்டும் மீண்டும் சரிபார்க்க வேண்டும். இன்னொரு வழியில் கூறுவதாயின் மீண்டும் நிரற்படுத்த (Processing) வேண்டும்.

ஒரு தொலைபேசியின் ஊடாக உலகத்தகவல்களை பெறும்போது, அதைத் தந்தவர்கள் யார்..? அவர்களின் நம்பகத்தன்மை எப்படியானது..?  அவர்களின் தவறான தகவலால் ஏமாற்றப்பட்டவர்கள் யார்..? எப்படியான பாதிப்புகள்  அவற்றால் ஏற்பட்டது..? அது எப்படியான மாற்றங்களை சமூகத்தில் செய்துள்ளது..! என்பன தொடர்பாக அனைவரும் பூரண அறிவை பெற்றிருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு ஒரு தகவலை உறுதிப்படுத்த பல தகவல் தளங்களை உசாத்துணைப்படுத்த (Reference) வேண்டும். சில  நேரங்களில் நாம் உசாத்துணைப்படுத்திய அனைத்தும் தவறான தகவல்களைத் தந்திருக்கலாம் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

தகவல் என்பது மிகப்பெரிய வளம்..! பெரும் மதிப்பு மிக்கது..! சில தகவல்கள் உலகின் தலையெழுத்தை மாற்ற வல்லன..! அதனால், வளங்களிலே மிகப் பிரதான வளமாகத் தகவலையே கருதுவதுண்டு..! எத்தனை கோடி டோலர்கள் கொடுத்தாலும் வாங்க முடியாத அல்லது கொடுக்க முடியாத தகவல்கள் இருக்கின்றன..! ஒரு சாதாரண  எழுத்தாளரின் தகவலை எடுத்து மீளப் பயன்படுத்தினாலே அது குற்றமாகக் கருதப்படுகின்றது..! அது தொடர்பாக தகவல் உரிமை பாதுகாப்பு அல்லது புலமைச்சொத்து உரிமைப்பாதுகாப்பு (Information/Intellectual Property Right) என்ற சட்டமே இருக்கின்றது..!

எனவே பொது வெளிகளில் குறிப்பாக இணைய வெளிகளில் வரும் அனைத்து தகவல்களையும் கேள்விகளுக்கு உட்படுத்தவும்..! அதனை அப்படியே நூறு சதவீதம் நம்ப வேண்டாம்..! ஒவ்வொரு தகவலின் தரம் குறித்தும் போதிய பரிசோதிப்பை செய்த பிறகு அதனைத் தகவலாக ஏற்றுக்கொள்ளுங்கள்..! அதுவரை அவை தகவலாகச்  சொல்லப்பட்டாலும், தரவுகளாகவே எடுத்துக்கொள்ளுங்கள். மீண்டும் மீண்டும் அவற்றை நிரற்படுத்தி, அவற்றில் இருந்து உண்மையான தகவலை எடுத்துக்கொள்ளுங்கள். அதுவே உங்களை சரியான திசையில் தீர்மானம் எடுக்க உதவும் அல்லது சரியான செயலை செய்யத் தூண்டும். அவசரப்படுவது அனைவருக்கும் ஆபத்து..!

“கண்களால்  பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய்” என்ற மூதோரின்  வாக்கைப்பின்பற்றி உண்மையான தகவலை எடுக்க முனையவும். இணையத்தில் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் மற்றும் யூரியூப்பில் கிடைப்பவை அனைத்தும் தரவுகளே..! அவற்றின் உண்மைத்தன்மையைச் சோதிப்பது என்பது அவற்றைப் பார்க்கும் அனைவரதும் கடமையே..!  எடுத்த எடுப்பில் அதிலுள்ளவற்றை நம்புவது, பெரும் முட்டாள் தனம் என்பதையும் உணர்ந்துகொள்க.

“நம்ப நட..! நம்பி நடவாதே..!”

 


ஆ.கெ.கோகிலன்

07-01-2025.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!