கூட்டுப் பிரயாணம்..!
திருகோணமலையில் இருந்து எனது வேலைகளை முடித்துக்கொண்டு மாலை
2.45 மணி பஸ்ஸில் வரும்போது வழமைபோல் கொஞ்ச நேரம் நின்று, பின்னர் சீற் கிடைத்ததும்
இருந்துகொண்டு வந்தேன். வவுனியா வந்ததும், இருந்த
சீற்று உடலுக்கு வேதனையைத் தர வேறு சீற்றுக்கு மாறினேன்.
இறுதியாகத் தனி சீற்றே எனக்குக் கிடைத்தது..! நிம்மதியாக
இருந்து கொண்டு, ஒரு கடலைப் பையையும் வாங்கி, உண்டுகொண்டிருக்க ஒரு அதட்டல் சத்தம்
கேட்டது..! பார்த்தேன் முன்சீற்றிலுள்ள நடுத்தரவயதுடைய வெளிநாட்டில் இருந்து வந்தவரா
அல்லது வேறு ஊரில் இருந்து வருகின்றாரா தெரியவில்லை, பஸ்ஸில் விளையாடிக்கொண்டிருந்த
சிறுவர்களை வெருட்டினார்..! பின்னர் தான் தெரிந்தது. அந்த பஸ்ஸில் ஏறக்குறைய அரைவாசிப்பேர்
அவர்களது குடும்ப உறவுகளாக இருக்க வேண்டும்.
அவரை, அந்த பஸ்ஸிலுள்ள சில பெண்கள் அண்ணா என அழைத்து, தமது பிள்ளைகளைக் குழப்படி
செய்யாமல் பார்க்கச் சொன்னார்கள். அவரையும், அவரது மனைவியையும், பஸ்ஸில் நான் ஏறிய
பொழுதில் இருந்தே பார்த்தேன். தமது மகளை தங்கள் இருவர் மடியிலும் கிடத்திவைத்து, அந்தச்
சிறுமி நிம்மதியாக நித்திரை கொள்ள, அங்கு அண்ணா என்று அழைக்கப்பட்ட ஆணும் அவரது மனைவியும் உதவினார்கள்.
மங்குளத்திற்கு கிட்டவாக பஸ்வரும்போது, அவரது உறவினர் ஒருவர்
நிறைய தின்பண்டங்கள் கொண்ட பையைக்கொடுக்க, பின்னர் கிளிநொச்சிவரை அவற்றை உண்டு, பஸ்ஸே
அவர்களது வீடுபோலவும், நாம் அவர்கள் வீட்டிற்குச் சென்று, அவர்களைப் பார்ப்பவர்கள்
போலவும் இருந்தோம்..! நடத்துனரும், சாரதியும் அனைத்தையும் பொறுத்துக்கொண்டு அமைதியாக
இருந்தார்கள். அவர்களைக் குறை சொல்லவில்லை. ஆனால் வந்தவர்களும்
பிழையொன்றும் செய்யவில்லை. பழக்க வழக்கங்கள் மட்டும் சற்று விநோதமாக இருந்தன..! கொக்குவில்
பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதை, அவர்களது கதைகளில் இருந்து தெரிந்துகொண்டேன்.
ஆனால், 50 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த வாழ்க்கை முறையை,
தற்போது அவர்கள் பின்பற்றுவது ஆச்சரியமாக இருந்தது..! நன்றாக வாய்விட்டுச் சிரித்தார்கள்..!
கதைத்தார்கள்..! சத்தம் போட்டார்கள்..! இடையில் அழுதார்கள்..! சகல உணர்வுகளையும் அவர்கள் சிந்தியபடியே இருக்க, பஸ் சென்றது..!
இடையில், இரவுச் சாப்பாடு தொடர்பாகவும் வழிப்படுத்தல்கள்
பஸ்ஸில் இருந்தே வழங்கப்பட்டன..! அந்த அண்ணா சொன்னார், “கோழிக்கறியும், வெள்ளையரிசிச்
சோறும் என்றால் உன்ர வீட்ட வந்து சாப்பிடுவேன் என்று..!” மறுபக்கமும் அதற்கு ஏற்ப பதில்கள் வந்தன..!
இடையில் இன்னோர் அண்ணா ஏதோவோர் நாட்டில் இருக்கின்றார் போலும்..!
அவரும் போனில் லைவில் வர, பஸ்ஸிற்குள் இருந்த அனைவரும் அவரது போனுக்குள் மாட்டியிருப்போம்..!
அவரும் தோளில் துண்டைப்போட்டுக்கொண்டு, எல்லாச் சகோதரங்களோடும் கதைத்துக்கொண்டிருந்தார்..!
எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை..? ஆனால் அவர்களின்
செய்கைகளை ரசித்துக்கொண்டு வந்தேன். இடையில் ஒரு முறை அங்குள்ள சிறுவன் குழப்படி செய்ய,
என்னைக்காட்டி “அந்த மாமா உன்னைப் பிடித்து பொலீசில் கொடுத்துவிடுவார்..!” என அந்த
அண்ணா சொல்ல, எனக்கும் சின்னப் புன்முறுவல் வந்தது. அப்போது, அந்தச் சிறுவனைப் பார்த்தேன்.
அவன் சிரித்தான்..!
எனக்குப்பின்னாலிலுள்ள சீற்றிலும் அவரது மருமக்கள் இருந்தார்கள்.
அதில் ஒரு வளர்ந்த, ஆனால் சின்ன வயதுடைய பெண் என்னிடம் இது எந்த இடம்..? அது எந்த இடம்
..? என்று அடிக்கடி கேட்டு, உறவு கொண்டாடினார்..! ஒரு முறை, நான் ஜன்னல் கண்ணாடியைத்
திறக்க அந்தப்பெண், எனக்கு திறக்க இடம்கொடுத்துக் கதைத்தாள். முதலில் பட்டிக்காடுகள்
மாதிரியே யோசித்தாலும், பின்னால் போகப் போக அவர்களது அன்பான வாழ்க்கை முறை, என்னை ஏக்கத்தோடு
அவர்களைப் பார்க்க வைத்தது..!
இறுதியாக, யாழில் இறங்கும்போது, அவர்களில் ஒருவர் “கில்மிஷா”
வீட்டிற்கு போகலாம். அவர் தமது உறவினர் என்றும்
ஆனால் தற்போது அவர்கள் பிசியாக இருப்பதால் இன்னொரு நாளைக்குப் போகலாம் என்றும்
கதைத்தபடி கொக்குவிலுக்கு ஓட்டோக்களில் செல்ல முடிவுகள் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.
வழமையாக நான் கதைப்பதே வழக்கம். இன்று, அந்த குடும்ப நபர்களே
அதிகம் கதைத்துக்கொண்டு வந்தார்கள்..! நான், அவர்களை அவதானித்துக்கொண்டே வந்தேன். இடையில், எனக்கு முன்னாலுள்ள ஒரு பெண், மாம்பழம்
சந்தி வந்தால் சொல்லச்சொல்ல, நானும் உதவ முயன்றேன். இருந்தாலும் தபாற்கட்டுச் சந்தியை
மாம்பழம் சந்தியென்று சொல்லிவிட்டேன். நல்லவேளை
சாரதிக்குத் தெரிந்ததால் சரியான இடத்தில் அந்தப்பெண் இறங்க, அவர் உதவினார். அந்தப்பெண்
எனக்கும் நன்றி சொல்லிச்சென்றார்.
எனது கதை குறைவு என்றாலும், பார்த்த காட்சிகள் அருமையாக இருந்தன..!
பயணம் தொடரும்..!
ஆ.கெ.கோகிலன்
21-12-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக