தமிழர் அரசியல்..!

 


இனங்களிலே ஆதிக்குடி தமிழ் இனம் என்று சிலர் சொல்கின்றார்கள்..! அது எவ்வளவிற்கு உண்மை என்று என்னால் சொல்லமுடியாது. ஆனால் ஒரு விடயம் சொல்லமுடியும். அது தமிழர்கள் என்றால் ஒற்றுமையில்லாதவர்கள்..!  சாதி, சமயம், இடம், பொருளாதாரம் என பல வழிகளில் பிளவுபட்டு இருக்கின்றார்கள்..! எவ்வளவு திறமையிருந்தாலும், தமிழர்கள் பொதுவாகத் தமிழர்களை மதிப்பது குறைவு..! அதற்கு உண்மையான காரணம் ஒருவர் எவ்வளவு பெருமையான காரியங்களை ஆற்றினாலும் அவரது இடம், சாதி, மதம், பொருளாதாரம் என்பதை வைத்து, தமக்கு நெருங்கியவராயின் ஏற்பார்கள்..! இல்லை என்றால் புறம்சொல்லி ஒதுக்குவார்கள். இது உலகத் தமிழர்கள் எல்லோருக்கும் பொருந்தும்.

உதாரணத்திற்கு, ஊரில் கழிவறை சுத்தம் செய்தால் அவனை வீட்டிற்கு கிட்ட அண்டவே விடமாட்டார்கள். அவனை அழுக்கு படிந்தவனாக, கீழ் சாதியாக, பொருளாதாரத்தில் தாழ்ந்தவனாகக் கருதுவார்கள்.  அதே சமயம் பொருளாதாரத்தில் வளர்ந்து இருக்கும் கீழ் சமூகத்தினரும், அதே தொழிலை  பணத்திற்காகச்  செய்யும் உயர் சமூகத்தினரும் வெளிநாடுகளில் இருந்தாலும், இரு சமூகத்தினர்களுக்கும் இடையில் திருமணத்

தொடர்பை ஏற்படுத்த முடியாது. அங்கும் சாதி தடையாக இருக்கும். காதல் திருமணங்கள் நடந்தால், அதனைத் தடுக்க முடியாது..! ஆனால் நிச்சயப்படுத்தி செய்யும் திருமணங்கள் மேற்கொள்ள முடியாது. அதற்கு, எங்களுடைய மனம் பிழையான அறிவுகளால் அழுக்காக்கப்பட்டுள்ளது..! அந்த அழுக்கைத் துடைப்பதற்கு பல கிருஷ்ண பரமாக்கள் அவதரிக்க வேண்டும்..! அம்பேத்கர்கள் மதம் மாறாத அளவிற்கு, சமூகத்திற்குத் தேவையான மாற்றங்களை, எமது மரபியல் மதங்களிலும் கொண்டுவரவேண்டும்..!

நான் பல முறை பலருக்குச் சொல்லியுள்ளேன். தமிழர்கள் தோற்பது தமிழர்களால் தான்..! அதற்குக் காரணம் எட்டப்பர்கள் என்று சொன்னாலும், அந்த எட்டப்பர்கள் யார்..? அவர்களும் தமிழர்கள் தானே..? அல்லது வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் தமிழர்கள் என்ற போர்வையில் நீண்ட காலம்  எம்முடன் வாழ்கின்றார்களா..? ஏன் அவர்கள் முரண்பாடான கொள்கைகளில் இருக்கின்றார்கள்..? அவ்வாறு போகாமல் தடுக்க ஏன் ஒருவரும் முனையவில்லை..? அப்படி ஒரு சாரார் பிரிந்து சென்றால், அவர்களை அழித்துவிட்டு தமிழர்களை ஒற்றுமைப்படுத்த முடியுமா..? வெறுப்புகள் பெருகாதா..?  ஏன் இரு சாராரும் ஒற்றுமையாக இருக்க முயல்வதில்லை..? ஏன் விட்டுக்கொடுக்கப் பாடுபடுவதில்லை..?  ஒரு சாரார் எடுக்கும்  “கடும்போக்கு” என்ற தவறான நிலையை ஏன் ஒருவரும்  கேள்விக்கு உட்படுத்துவதில்லை..?  எதிரானவர்களை அடக்கி, அவர்களின் வாய்களை மூடி, வெற்றிகளை அள்ள முடியுமா..? நாட்டிற்கு பெருமை சேர்க்க முடியுமா..? தமிழ் அன்னை சந்தோசப்படுவாளா..?

உயர் சாதிகளில் பிறந்தவர்கள் தான் ஆட்சி அதிகாரங்களில் இருக்க வேண்டுமா..? திறமைக்கு, உண்மைக்கு, நேர்மைக்கு மரியாதை இல்லையா..?

ஈழப்போரில்  பல போராட்டக்குழுக்கள் தோன்றக் காரணம் என்ன..? அவற்றில் ஒற்றுமை, ஏன் ஏற்படவில்லை..?  அப்போதே புரியவில்லையா இந்தப்போராட்டம் தோற்கப்போவதை..? ஏன் இவ்வளவு கால விரயமும், இழப்புக்களும், வந்தன..?

ஒரு நிறுவனம் முன்னேற வேண்டும் என்றால், அங்குள்ள அனைத்து ஊழியர்களும் நிறுவனத்தின் நோக்கத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டும். அப்போது தான் அந்த நோக்கம் அடைந்து, நிறுவனத்தினது இலக்கு எட்டப்படும்..! அதேபோல் தான்,  ஒரு குடும்பம் என்றாலும் என்ன..? அல்லது ஒரு நாடு என்றாலும் என்ன..? ஏன் முழு உலகம் என்றாலும் என்ன..? ஓரணியில் நின்றால் தான் உய்வு உண்டே ஒழிய பிரிந்து இருந்தால் பிரச்சனைகளே எஞ்சும்..!

நேருக்கு எதிர் இருப்பது போல், இரவுக்கு பகல் இருப்பது போல் தமிழர் என்றால் பிளவுகள் இருந்தே ஆகவேண்டுமா..? அதனை மாற்ற ஏன் எவரும் முயலக்கூடாது.?

இப்போது உண்மை பேசும் நல்ல மனிதர்களை மக்கள் தேடுகின்றார்கள். உண்மையானவர்கள் நிறையப்பேர் தானுண்டு..! தன் வேலையுண்டு என்று இருந்துவிட்டுப் போகின்றார்கள்..! பொய்யும், பித்தலாட்டமும் செய்பவனை வெல்ல, அதே வழி தான் முன்பு வேண்டும்..!  முள்ளை முள்ளால் எடுப்பது போல் தான் எடுக்க வேண்டும். இப்போது நவீன கருவிகள் உதவிக்கு இருப்பதால், அவற்றின் உதவியுடன் தவறுகளை அம்பலப்படுத்தி, உண்மைகள் வெல்ல, வழி அமைக்கலாம்..!

இந்தக்கருவிகளையும் தவறான வழிகளில் பயன்படுத்தும் வல்லுனர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்..!  இங்கும்  பிற்காலத்தில் போராட்டங்கள் செய்யவேண்டிய நிலை வரலாம்.

ஒரு உண்மை எனக்கு முதலே தெரியும். அது “இந்த உலகில் எதுவும் நிலையாக இருக்காது..!” ஒவ்வொரு நூறு வருடங்களிலும் பல பாரிய மாற்றங்கள் நடக்கும். நிலைகள் மாறும். நாடுகள், நகரங்களின் பொருளாதார நிலைகளில் பெரிய ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். அப்படியிருக்க நீண்ட காலத்திற்கு நீடித்து நிலைத்து இருக்கக்கூடிய கொள்கை என்பதே கிடையாது..! காலங்களின் போக்கிற்கு ஏற்ப அவற்றில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அப்படியிருந்தால் தான் அவை மேலும் பல காலங்களுக்கு நீடிக்கும்.  அப்படி இல்லை என்றால் கால மாற்றங்களில் அவை காணாமல் போய்விடும்..!

தமிழ் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரனால் கூடத் தமிழ் ஈழத்தைப்பெற முடியவில்லை. அதற்கு மறுக்க முடியாத  ஒரே காரணம் எம்மினத்திலுள்ள ஒற்றுமையின்மை..!

அதேபோல் தற்போது தம்பி அர்சுனாவும் பல நல்ல விடயங்களைக் கதைக்கின்றார்..! செய்கின்றார்..! ஆனால் ஒற்றுமையுடன் செய்யக்கூடிய விடயங்களை, அவரது பேச்சைப் பார்க்கும்போது, செய்வாரா என்ற கேள்விக்குறி தான்  எழுகின்றது.

நல்ல விடயங்களை யார்  செய்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம்  தலைவர்களுக்கு வரவேண்டும். அதைவிடுத்து, அனைத்தையும் தானே செய்ய நினைப்பது அறிவிலித்தனம். எனவே நல்ல விடயங்களை யார்  செய்கின்றார்கள் என்பதைப் பார்த்து, அவர்கள் உண்மையான அரசியல் தான் செய்கின்றார்களா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அவர்களுடன் சேர்ந்து செயற்படலாம். “நம்ப நட.. ஆனால் நம்பி நடவாதே..!” என்பதற்கு இனங்க நடக்கலாம்.

ஆனால் எம்முடன் உள்ளவர்கள் தவறுகள் செய்தால், அதனை வெளிப்படுத்தி, அவர்களை திருத்த அல்லது தண்டிக்க வேண்டும்.

இறுதியாகப் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்சுனாவின் வெற்றிக்கு நானும் காரணமான ஒருவர் என்ற வகையில், அவரது சாதியம் தொடர்பான நிலைப்பாட்டைப் பார்த்தேன். நல்லது. அனைத்து தமிழர்களையும் ஒன்றினைக்க வேண்டும்  என்ற குறிக்கோளுடன்  அலைகின்றார். எனவே பிரிவுகளாக இருப்போரின், பிரதிநிதித்துவத்தையும் கட்சிக்குள் கொண்டுவரவேண்டும். தேவை என்றால் கணக்கீடே எடுக்கலாம். முன்பு மேலேயுள்ளவர்கள் தான் அதிகாரங்களை எடுப்பார்கள். அதற்கு படிப்பும் பணமும் வேண்டும். ஆனால் தற்போது, இவை அனைத்தும், எல்லா சமூகத்தினரிடமும் வந்துவிட்டது..! படித்தவர்கள் எங்கும் இருக்கின்றார்கள். ஆகவே சமூகப் பிரதிநிதித்துவங்கள் இருந்தால் குறைந்த பட்சம் அந்த அந்த சமூகத்தின் தேவைகளுக்காகவேனும் குரல்கொடுக்க முடியும். அப்போது தான் கட்சியும் வளரும். தமிழ் கூட்டமைப்பு இந்த விடயத்தில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை என்பது வரலாற்றை ஆராயும்போது புரியும். அதே தவறுகளை நீங்களும் செய்தால், வேண்டும் என்றால், ஒரு சாராரின் வாக்குகள் கிடைக்கும். ஆனால் தமிழர்களின் ஏகோபித்த அபிமானத்தைப் பெற முடியாது. நாட்டின் ஜனாதிபதியாக ஒரு தமிழர் வரவேண்டும் என்று விரும்பினால் முதலில் தமிழர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெறவேண்டும். அதற்கான அடிப்படைத் தகுதிகள் அர்சுனாவிடம் இருக்கின்றன. இன்னும் சில விடயங்களில் கூடிய கவனம் எடுத்து,  தமிழர்களின் ஏகோபித்த அபிமானத்தைப் பெற்றால், பின்னர் மற்றைய இனங்களின் அபிமானத்தையும் பெறுவது சாத்தியமாகும்.

இல்லை என்றால் உங்களை வெறுக்கும் தமிழர் தரப்புகளே மற்றைய பகுதிகளில் பெரும் நெருப்பாக மாறி உங்களின் ஜனாதிபதிக்கனவை  பொசுக்கும்.

வரலாறு தெரியாவிட்டாலும், உண்மைகளை உணர வேண்டும்.  மேதகு பற்றிய உங்கள் பார்வை “இருந்தால் தலைவன், இறந்தால் இறைவன்” என்பதை விட “இருந்தாலும் தலைவன், மறைந்தாலும் தலைவன், எப்போதும் தலைவன்” என்ற வகையில் செயற்பட முனைய வேண்டும். நாம் இறந்தால் எமது மரபுப்படி,  நாம் எல்லோரும் இறைவன் தான்.  இந்து முறைப்படி நாமெல்லாம் இறந்த பின்னர் இறைவனடி தான், சேருகின்றோம்.  ஜீவாத்மா  போய், பரமாத்மாவில் இணைவது தான் எமது ஆன்மீகம்..! எப்போதும் தலைவராக இருக்க இன்னும் இன்னும் பெரிய மனது  ஒரு தலைவனுக்கு  இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் தயாராகுங்கள்..!

குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை என்பார்கள். குற்றம் இருந்தால் திருந்தச் சொல்லுங்கள். குற்றவாளிகள் எல்லோரையும் சுட்டால், நாமும் குற்றவாளி தான்..! சுடப்பட வேண்டியவர் தான்..!

 


ஆ.கெ.கோகிலன்

06-01-2025.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!