ஆயுள்வேதம்..!
மருத்துவம் என்பது ஆரோக்கியக் கேட்டிற்கு தீர்வு வழங்கும் வழிமுறை. பல விதமான மருத்துவங்கள்
உலகில் இருக்கின்றன..! இவற்றில் ஆங்கில மருத்துவம் என்பது இறுக்கமான பொறிமுறைகளூடாக
உலகெங்கும் வியாபித்துள்ளது..! அதற்கான கல்வியும், ஆய்வு கூடங்களும் தொடர்ந்து விருத்திசெய்ய
நிறையப் பணமுதலீட்டாளர்கள் உலகெங்கிலும் உதவுகின்றார்கள்..! அதனால், இந்த மருத்துவம்
தற்போது, மிகப்பெரிய அளவில் இலாபம் தரும் வியாபாரம்
என்ற அளவிற்குத் தள்ளப்பட்டுள்ளது மிகப்பெரியவேதனை..!
அதேபோல் மற்றைய மருத்துவங்களும் வியாபாரம் என்ற அளவில் வந்தாலும்,
அங்கே கோடிக்கணக்கான பணப்புழக்கங்கள் பொதுவாக
இல்லை என்றே நினைக்கின்றேன்..!
இந்த மருத்துவ உலகில், கடந்த சில தினங்களாக எனது தாயார் உடலெங்கும்
கடிப்பதாகவும், எல்லா இடங்களிலும் சொறிய வேண்டும் போல் இருப்பதாகவும் சொன்னார்..! ஏற்கனவே
எக்ஸிமாவிற்கு மருத்துவம் செய்து கால் புண்கள் ஓரளவு காய்ந்துள்ள நிலையில் இவ்வாறு
சொல்ல, நான் சொன்னேன் “உணவுகளைச் சரியாகவும், நேரத்திற்கும் சாப்பிடுங்கள் அத்துடன்
எண்ணங்களை மாற்றுங்கள். குறிப்பாக வேறொன்றில் பிசியாக இருக்க முயற்சி செய்யுங்கள்”
என்று..! இருந்தாலும், அவரால் அதைத் தாங்க முடியவில்லை..!
பின்னர் ஊரிலுள்ள ஆங்கில மருத்துவரிடம் சென்று, காட்டி மருந்துகள்
எடுத்தாலும் குறைவதாக நம்பிக்கை வரவில்லை. உடனே தனது அண்ணரிடம் இவற்றைப் பற்றிச்சொல்லியுள்ளார்.
அவர் கனடாவில் இருந்தாலும், எமது ஆயுள்வேத மருத்துவத்திலும் நம்பிக்கையுள்ளவர். எனக்கு சில அறிவுரைகளைச் சொல்லி, அவர் சொன்ன ஆயுள்
வேத வைத்தியரிடம் மருந்தையும், தரும் எண்ணையையும் பெற்று, அந்த இடங்களில் பூசச்சொன்னார்.
அவர் சொன்னதிற்கு ஏற்ப, இன்று காலை எனது இரண்டாவது மகளையும்
கூட்டிச்சென்று அம்மாவீட்டில் அவளை விட்டுவிட்டு, அம்மாவையும் தம்பியின் மகனையும் கூட்டிக்கொண்டு,
எமது உறவுக்கார ஆயுள்வேத மருத்துவரிடம் சென்றோம். மாமாவும் காலை 10 மணிக்குப் போகச் சொன்னார். சரியாக
10 மணிக்கு மருத்துவ நிலையத்தில் நின்றோம். அங்கு சில நோயாளிகள் இருந்தார்கள்.
இடையில் ஒருவர் வந்து, தான் காலையும், நேற்றும் வந்து திரும்பினான். தான் இன்று கொழும்பு
செல்ல வேண்டும் என்றும், மகளின் குழந்தைக்கு எண்ணை வாங்க வேண்டும் என்றும் சொல்லி எம்மிடம்
அனுமதிபெற்று, எமக்கு முன்னே செல்லவிரும்பினார். நாமும் சம்மதித்தோம். ஏறக்குறைய
11.00 மணியளவில், அவர் எமக்கு நன்றி சொல்லிப் புறப்பட்டார். அவருக்கு தற்போது 77 வயது
ஆகின்றது. களுத்துறையிலுள்ள ஒரு ஹொட்டலில் கணக்காளராக வேலை செய்கின்றார். அரைக்கால்
சட்டையும், சேட்டுடனும் வந்தவர். பார்க்க இளைஞர்களை விட சுறு சுறுப்பாக இயங்குகின்றார்..!
நன்றாகச் சிங்களம் கதைக்கின்றார். தான் புக்கீப்பராக இணைந்து, இந்த நிலைக்கு வந்துள்ளதாகவும்,
தனது தந்தையார் பிரபலமானவர் என்றும் சொல்லி, ஆயுள்வேத மருத்துவத்தின் மகத்துவம் பற்றியும்
சொல்லி, தனக்கு நடந்த உண்மைச் சம்பவத்தை விளக்கினார். நடக்க முடியாமல் இருந்த அவர்,
இவ்வளவு சுறு சுறுப்பாக இயங்கக்காரணம் ஒரு சுதேச வைத்தியம் என்று சொல்லி, ஆங்கில மருத்துவத்தில்
செய்ய முடியாததை இங்கு செய்ததாகச் சொல்லி என்னை ஆச்சரியப்படுத்தினார்.
பின்னர், வைத்தியரது அறைக்குச் சென்றால், அவர் எனது தாயாருக்கு
அறிமுகமானவர்..! அத்துடன் உறவினர். மிகவும் வயது மூத்தவர் என்பதால் அனுபவம் மிக்கவர்.
நன்றாகத் தண்ணீர் குடிக்கச் சொன்னார். ஒழுங்காக ஒன்று, இரண்டு வரவேண்டும் என்றார்.
அத்துடன் இனிப்புக்களைக் குறைக்கவும், ஆரோக்கியமான சாப்பாட்டை உண்ணவும் வலியுறுத்தினார்.
பூக்கள் ஆயும்போதும், மாட்டில் பால் கறக்கும்போதும் பால் படுவதாலும் சில அரிப்புக்கள்
வருவதாகச் சொல்லி அம்மாவிடம் கேட்டார். அம்மாவும் நித்திய கல்யாணிப் பூக்கள் ஆய்ந்து
சாமிப்படத்திற்கு வைப்பதாகச் சொன்னார். அந்தப்பாலும் இந்த கடிகளுக்கும், தோலுரிவுக்கும்
காரணமாகலாம் என்றும் சொல்லி, நான்கு மருந்துகள் கொடுத்தார்..! ஒன்று குளிசை. சாப்பாட்டிற்கு
முன் மதியம் மற்றும் இரவு போடச்சொன்னார். இரண்டு சில பைகளில் மருந்துத்தூளைத் தந்தார்.
அவற்றில் சிறிதை எடுத்து உருட்டி காலை மற்றும் மாலை விழுங்கச் சொன்னார். மூன்று ஒரு
களியைத் தந்தார். அதனை கையிலுள்ள தோலுரிந்த பகுதிகளில் பூசச் சொன்னார். நான்கு ஒரு
எண்ணையைத் தந்தார். அதனை இயர்பட்டால் (Ear buds cotton) தொட்டு எக்சிமாவுள்ள ஒரு பகுதிக்குப்
பூசியும், மிகுதிக்கு இயர்பட்டின் அடுத்த பகுதியைப் பயன்படுத்திப் பூசவும் சொன்னார்.
சுத்தத்தையும் சுகாதாரத்தையும் இயன்றவரை பேணச்சொன்னார். அங்கே இன்னொரு இளம் ஆயுள்வேதம் படிக்கும் மாணவ வைத்தியரும்
இருந்தார்..! அவர் யாழ்ப்பாண கைதடி ஆயுள்வேத பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிப்பதாகவும்,
ஒரு வருடப்பயிற்சிக்காலத்தில் மரபியல் மருத்துவத்தில், மூன்று மாதப் பயிற்சியை இங்கு பெறுவதாகவும், ஏனையவற்றை
வேறு இடங்களில் பெற்றதாகவும் சொன்னார்..! நியாயமான கூலியைப் பெற்றார்கள். எனது வீட்டிற்கு
அருகே வசிப்பவரும் எமது உறவினருமான ஒருவர், அந்த மருத்துவ நிலையத்தில் மருந்துகள் தயாரிப்பவராக
இருக்கின்றார். சொந்தமாக இவற்றைச் செய்வதால் செலவு சற்று கூடவாக இருக்கின்றன..! இருந்தாலும்
எமது மரபியல் மருத்துவத்தை விட முடியாது.
பின்னர், அவர்களிடம் விடைபெற்று, பூட்சிற்றியில் இயர்பட்
மற்றும் சில பொருட்களை அம்மாவிற்கு வாங்கிக்கொண்டு, அவர்களை வீட்டில் இறக்கிவிட்டு,
அங்கு நின்ற மகளை ஏற்றிக்கொண்டு, திரும்பவும் பூட்சிற்றியில் எமக்கான சில பொருட்களை
வாங்கிக்கொண்டு வீடுவர, காரை வழமையான வழியில் உள்ளே கொண்டுவர சிரமம் இருந்ததால், வேறுவழியில்
முனைய சிறு விபத்து ஏற்பட்டு, காரும் சிறிய
சேதம் அடைந்தது..! பட்ட இடத்திலே திரும்பத் திரும்பப்படுவதால் என்னவென்று சொல்லத் தெரியவில்லை..!
முழு இன்சூரன்ஸ் கட்டுவதால், கிளைம் பண்ணலாம். ஆனாலும் இன்னும் செய்ய மனமும் இல்லை.
நேரமும் இல்லை.
ஆறு ஏழு வருடங்களில் ஏறக்குறைய 5இலட்சங்களுக்கு கிட்ட காசு
கட்டியிருப்பேன். ஆனால் ஒரு முறை ஏறக்குறைய ரூபா.30000 மாத்திரம் பெற்றுக்கொண்டேன்.
இவர்களிடம் கொடுத்து வாங்குவதை விட, நாமே நேரடியாகச் செய்யலாம் என்றும் தோன்றுகின்றது.
உயிருக்கும், உடைமைக்கும் முழு காப்புறுதி செய்தால், அது செய்தவர்களுக்கு பெரிய பலனைத்
தராது..! ஆனால், சிலருக்கு நல்ல பலனைத் தரும்..!
ஆ.கெ.கோகிலன்
21-12-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக