அல்சர் (Ulcer)..!

 


அண்மைக்காலமாக எனது உணவு பழக்க வழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் பல வித உடல் உபாதைகளுக்கு வழி வகுக்கின்றன..! இருந்தபோதிலும் எனது உடற்பயிற்சியும், ஓரளவிற்கு நேரம் கட்டிய உணவு முறையும் இந்நாள் வரை காப்பாற்றிவந்தது..! கடந்த மாதமும் உணவு சரியாக உடலில் சேமிக்காததால் பல இன்னல்களை அனுபவித்தேன்..!

அந்நேரம் யாழ்ப்பாணத்தில் இருந்த படியால் வீட்டுச்சாப்பாட்டில் சில மாற்றங்களைச் செய்து அதிலிருந்து ஓரளவிற்கு தப்பித்னேன்..! அது மாத்திரமன்றி, எனது மருத்துவ நண்பரும் சில அறிவுரைகளை வழங்கியதுடன், “கூல்ஜெல்” என்ற பாணியையும் குடிக்கச் சொன்னார். அவர் சொன்னது போல் செய்தேன். இரண்டு மூன்று நாட்களில் உடல் வழமைக்கு வந்தது. 

“எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்..!  உடலில் வரும் எந்த நோய்கும் உணவே மருந்தாகும்..!” என்று யாரோ ஒரு சித்தர் சொன்ன வாக்கை நம்புபவன் நான்..!

குடற்புண் என்பதால் தயிரை நன்றாக எடுக்கும் படியும், கொதுமை மா உணவுகளை இயன்றவரை தவிர்க்கவும் குறிப்பாக கடை உணவுகளை முற்றாகத் தவிர்க்கவும் சொன்னார்கள். இதனை நடைமுறைப்படுத்துவது, தற்போதைய எனது வேலைச்சூழலில் சற்றுக்கடினமாக இருந்ததால், அப்படியே விட்டுவிட்டேன்.

கடந்த ஆண்டுக்கடைசியில் திருகோணமலை வந்து, இந்த ஆண்டில் காலடி எடுத்து வைத்த தருணத்தில், உணவுகளுக்கு குறைவில்லாத சூழல் அமைந்தது..!

வருட முதல் நாள் விருந்துபோல் உணவு வந்ததால் சற்று கஷ்டப்பட்டாலும் அடுத்த அடுத்த நாட்களில் உணவைக் கடுமையாகக் குறைத்தேன். உடல் கட்டுப்பாட்டில் இருந்தது. உடற்பயிற்சியும் செய்தேன். நேற்றுவரை ஆரோக்கியமாக இருந்ததாக உணர்ந்தேன்.

நேற்று இரவு உணவு வாங்கச் செல்லும்போது பேக்கரி உணவுகள் விற்கும் ஓட்டோவைக் கண்டேன்..! உடனே மூன்று சோடி சிறிய கிறீம் பணிஸ்களை ரூபா.180 இற்கு வாங்கினேன். அத்துடன் இரவு உணவிற்கு சிவப்பு அரிசிப் பூட்டையும் வாங்கினேன்.  இரவு வழமைபோல் கழிந்தது..!

காலை அதிகாலை 4.00 மணிக்கு எழுந்து வழமைபோல் உடற்பயிற்சியும் செய்தேன். பின்னர் உள்ளாடைகளைத் தோய்த்துக் குளித்தேன். இரவு வாங்கிய கிறீம் பணிஸ் ஒன்றை காலை 7.00மணிக்கு உண்டேன்.  காலை 8.00மணிக்கு மீண்டும் பசித்தது..! அதையும் உண்டேன். 

இன்று எமது ஊழியர்களை வேலைக்கு வரச்சொன்னேன். முடிக்காத வேலைகளை இன்று முடிக்க வலியுறுத்தினேன். அவர்களும் சொன்ன மாதிரி நேரத்திற்கு வந்து தமது வேலைகளைத் தொடர்ந்தார்கள். நானும் எனது வேலையில் மூழ்க ஆரம்பிக்க, மின்சாரம் தடைப்பட்டது..!

கடந்த சில நாட்களாக எமது மாணவர்களுக்கு பரீட்சை நடப்பதால், மின்தடையை மின்சார சபைக்கு அறிவித்து தவிர்த்தோம்..! இன்று ஞாயிறுக் கிழமை என்பதாலும், பரீட்சைகள் இல்லாததாலும்  அவ்வாறு கோரமுடியவில்லை. பின்னர் மின்தடையில் மாட்டினோம்..!

நானும், மின்சாரம் இல்லை என்றால் ஒருவேலையும் செய்ய முடியாது என்ற நிலையில், அருகிலுள்ள தங்கை வீட்டிற்குச் சென்றேன். அவரும் தேநீரும், கேக்கும் தந்தார்..! மறுத்தேன்..! “வருசம் பிறந்து முதல் முதல் இவ்வாறு தவிர்க்க வேண்டாம்” என்றாள். சாப்பிட்டேன். பின்னர் திருகோணமலையைச் சுற்றி ஒரு வட்டம் அடித்து, மதிய உணவை வாங்கச் சென்றேன். உணவு தயாரில்லை. சில மணிகள் தாமதிக்க வேண்டியிருந்தது.  அங்கே “வாய்ப்பன்” இருந்தது..! அதில் ஒன்றை உண்டேன். அங்கே  ரோல்ஸ்களும் இருந்தன. எமது பாதுகாப்பு ஊழியர்களுக்கு என்று அதனை வாங்கினேன். இறுதியில் ஒருவர் தான் அங்கே நின்றார்..! மற்றவர் மதிய உணவிற்காகச் சென்றுவிட்டார். நின்றவருக்கு ஒரு ரோல்ஸ்ஸைக் கொடுத்துவிட்டு மற்றதை நான் சாப்பிட்டேன்..!

சிறிது நேரத்தில் வயிறு வலிப்பது போல் இருந்தது..! கரண்டும் இல்லை. உடல் வியர்த்தது..! சரி, பாத்ரூம் போய் வருவோம் என்று செல்ல அங்கும் ஏமாற்றமே மிஞ்சியது.  எல்லாம் அடைத்துவிட்டது போல் ஒரு உணர்வு வந்தது..! அந்த நேரம்  பார்த்து, மதிய உணவும் வர, அதையுண்டால் அடைப்பு எடுபடும் என்று  நினைத்து, உணவை உண்டபின்னர் வயிறு இன்னும் அதிகமாக வலித்தது..!

ஒரு கட்டத்தில் அலுவலக அறையில் இருக்க முடியவில்லை. போய் எனது அறையில் படுத்தேன். அந்த அறையில் மின்சாரம் இல்லை என்றால் படுக்க முடியாது. தற்போது வயிற்று வலி வேறு வாட்டி எடுத்தது.

என்ன செய்வதென்றே புரியவில்லை..? என்னிடம் இருந்த வறுத்த ஓமத்தூளை வாயில் போட்டு தண்ணீரைக் குடித்தேன். பெரிய மாற்றம் தெரியவில்லை. மாலை 4.00 மணிவரை போராடிவிட்டு, ஒரு பனடோலைப் போட்டுக்கொண்டு, பாமசிக்குப் போய் “கூல்ஜெல்” வாங்கச்செல்ல, பாமசி பூட்டியிருந்தது..! அருகில் ஆயுள்வேத மருந்தகம்  ஒன்று இருந்தது. அங்கே ஓமவோட்டர் வாங்கி ஒரு முடறு குடித்தேன். பின்னர் அங்குள்ளவர்களுடன் கதைத்தேன். அதில் ஒருவர் ஆயுள்வேத வைத்தியர்.  அவரிடம் எனது நிலையைச் சொன்னேன். அவர் இது “அல்சர் ” தான் என்றும், சாப்பாட்டில் போதிய கவனம் எடுக்க வேண்டும் என்றும், கோதுமைமாச் சாப்பாட்டு, பேக்கரி உணவு, எண்ணை உணவு மற்றும் உறைப்பு உணவு என்பவற்றைத் தவிர்க்கச் சொன்னார். நான் எனது நிலையைச் சொன்னேன். உணவை சரியாக எடுத்துக்கொள்ளுங்கள். சிவப்பு அரிசிமா உணவுகள், சிவப்பரிசிச் சோறு மற்றும் சிவப்பரிசிப் பழஞ்சோறு போன்றவற்றை பால்கறிகளுடன் எடுக்கச் சொன்னார். பால், தயிர் மற்றும் பழங்களையும் எடுக்கச்சொன்னார். திரும்ப, வரும் செவ்வாய் கிழமை வரச்சொன்னார். ஓம வோட்டர், வில்வம்பூ தேநீர்ப்பொடி மற்றும் மருத்துவ ஆலோசனைக்காக ரூபா.700 ஐ பெற்றுக்கொண்டார்.

எனக்கு இனி இங்கு இருப்பது கடினம் என்பது போல் தோன்றியது..! சாப்பாடு சரியாக எடுக்க வேண்டும் என்றால் ஒன்றில் வீட்டில் இருக்க வேண்டும். அல்லது யாராவது வீட்டில், சமைப்பவர்களிடம் கேட்கவேண்டும் என்ற நினைப்போடு  மீண்டும் அலுவலகம் வந்து, எமது பெண் பணியாளர்  ஒருவரைக் கேட்டேன். அவரும் சம்மதித்தார்..! நாளையில் இருந்து எனது உணவில் மாற்றம் இருக்கும் என்று நம்புகின்றேன். நான் நினைக்கவில்லை, சிவப்பரிசி சாப்பிடுபவர்கள் இங்கே இருப்பார்கள் என்று..!  கடவுளுக்கு நன்றி.

என்ன செய்வது 50 வயதுகளுக்குப் பிறகு தூர இடங்களில் வேலைசெய்ய வேண்டிய சூழல் வந்தால்,  இவ்வாறான நிலைமைகள் ஏற்படும் என்று முதலே தெரிந்தாலும் முயன்று பார்ப்போம் என்ற எண்ணத்திலே  தான், நான்  இடமாற்றத்தை ஏற்றுக்கொண்டேன். ஒரு வருடத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டேன்.

இனி நடப்பது இறைவனின் கையிலும், இயற்கையில் கையிலும் தான் இருக்கின்றது..!  பார்ப்போம் ஆரோக்கியமாய் இருந்தால், வேலையில் தொடர்வோம். இல்லையேல் மாற்றுவழிகளைப் பற்றி யோசிக்க வேண்டியது தான்..!

நானும் இயற்கையும் இறைவனும் ஒரே நேர்கோட்டில் இருந்தால், எனது எண்ணம் சாத்தியப்படும். இல்லையேல் வழமைபோல் நடப்பதை ஏற்பது தான்.

 


ஆ.கெ.கோகிலன்

05-01-2025.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!