இடம் சார் செயல்..!




மனிதர்கள் எவ்வளவு அறிவு இருந்தாலும் அவர்கள் இயல்பாய் விலங்குகளே..! அந்த அறிவால் விலங்குக் குணங்கள் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றதே தவிர, சூழல்களைப் பொறுத்து அந்தக்குணங்கள் இடையிடையே எட்டிப்பார்க்கும்..! சில சமயங்களில் கோபமாகவோ அல்லது அழுகைாயகவே அல்லது வெறுப்பாகவோ அவை வெளிவரும்.  இவ்வாறான நிலை  வயதுகள் போனாலும் வரலாம்.  பல மனிதர்கள் வயதுகள் போகப் போக கற்ற அறிவுகள் மங்கி, மீண்டும் இயல்புக்குணமான விலங்குக்குணங்களே வெளிவருகின்றன..! நானும் அவ்வாறே தான்..!  எவ்வளவு எழுதினாலும், புரிந்தாலும், அன்பாக அடக்கிக்கொண்டு இருந்தாலும், எல்லாவற்றையும் தாண்டி பீறிட்டுக்கொண்டு அந்தக் குணங்கள் வருகின்றன..! 

ஏறக்குறைய ஒரு தசாப்தத்திற்கு முன்னர், எனது தாயாரின் வளவிற்குச் சென்றேன். அங்கே நிறையத் தென்னை மரங்கள், பனை மரங்கள், கொய்யா மரங்கள், மாமரங்கள், நாவல் மரங்கள் எனப் பலவகையான மரங்கள் இருக்கின்றன. அங்கு சென்றால் ஒரு காட்டில் இருந்த உணர்வு ஏற்படும். பறவைகளைப் பார்க்கலாம். பாம்பு, முயல், கீரி போன்ற விலங்குகளைப் பார்க்கலாம்.  இவற்றோடு களவுக்காக வரும் மனித விலங்குகளையும் பார்க்கலாம்..!  

அப்படியான சூழலில், ஒருவர் நாயுடனும், ஒரு தடியுடனும் எமது வளவிற்குள் வந்தார்..! அவருடன் மேலும் பலர் வந்திருக்கின்றார்கள். ஆனால் எமது வளவிற்குள் வரவில்லை. நன்றாக குடித்திருக்க வேண்டும். அவர் வளவிற்குள் வர, நான் கேட்டேன் “நீங்கள் ஏன் இங்கே வருகின்றீர்கள்..?” என்று.  உடனே அவர், “நீ யாருடா என்னிடம் கேள்வி கேக்கிறது..?”  என்றார்.  நான் சொன்னேன் “நான் தான் இந்த வளவின் உரிமையாளன் என்று..!” அவருக்குக் கோபம் வந்துவிட்டது..! பொய் சொல்லாதே..! எனக்கு வளவுக்காரனை தெரியும். “சும்மா கதவிடாத..!” என்று சொல்லியபடி அடிக்க வந்தான்..! நானும், அமைதியாக  அவரிடம் தம்பி இது எங்களுடைய வளவு தான். எனக்கும் பங்குண்டு. என்னைப்போல் பலருக்கு இங்கே பங்குண்டு, என்ற உண்மையைச் சொன்னேன். அவன் என்னிடம் “கிழவா..! சுத்துறியா..!” என்று சொல்லிப்பாய்ந்து,  கொண்டுவந்த தடியால் அடிக்க வர,  நான் ஹெல்மெட் போட்டிருந்ததாலும், பலம் இருந்ததாலும் அவரது அடியைத் தடுத்து அவரைத் தடியுடன் தூக்கித் தூரப்போட்டேன்..!  எனக்கும், முன்பு நடப்பது மாதிரி கோபம் அந்த நேரத்தில் அதிகமாக வந்துவிட்டது..! உடம்பு துடிக்கத்தொடங்கிவிட்டது..!  தொடர்ந்து, அவனைத் துரத்தி அடித்தேன். அவன் ஆட்களைக் கூட்டிவர ஓட, அங்கு வந்த சிலர் “ஏன்  அந்தக்காவாலிகளுடன் சண்டை பிடிக்கிறியள்..?”  “அவங்கள் கொசப்புகள்..!”  அந்த இடத்தைவிட்டு என்னைப் போகச்சொன்னார்கள். நானும், சரி தேவையில்லாமல்  அடிபடக்கூடாது என்ற நினைப்பில் வீடு வந்தேன். வரும்போதே இதயமும், உடலும் அதிகமாகத் துடித்தது..! அந்த நேரங்களில் அவன் கையில் மாட்டியிருந்தால் கொலை கூட நடந்திருக்கலாம்..! அந்த அளவிற்கு என்னில் மிருகக்குணம் தெரிந்தது..! வீடு வந்ததும்  தான்,  எனது உடலைப்பார்த்தேன். காயம் ஒன்றும் இல்லை. சட்டை மட்டும் சுக்குநூறாகக் கிழிந்து இருந்தது..! குறித்த வளவில் இருந்து எனது வீடு, ஏறக்குறைய 5 கிலோமீற்றர்  தூரம் இருக்கும். அதுவரை கோப உணர்வைத் தவிர, வேறு எந்த உணர்வும் இல்லாமல் மிருகமாக வீடுவந்து சேர்ந்தேன். 

அவ்வளவு அமைதியாகவும், சிரித்துக்கொண்டும் பிள்ளைகளுடன் கதைக்கின்ற  எனக்கு, கோபம் வருவது மிக மிகக் குறைவு..! அவ்வளவு தூரம்  இருந்தும், உள்ளுக்குள் மிருகங்கள் ஒளிந்துள்ளன..!  என்னைப் போலவே எல்லோருக்கும் இருக்கும் என்று நம்புகின்றேன். வெற்றி தோல்வி என்பதை விட கோபத்தில் என்ன நடக்கின்றது என்பதே தெரிவதில்லை..!

இன்று எனது  பணியாளர் ஒருவர் மிகவும் கவலையுடன் இனிமேல் நான் குறித்த பணியைச் செய்யமாட்டேன் என்று கலங்கினார்..! எனக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.  முதலில் அவரை ஒரு கதிரையில் அமர்த்தினேன்..! புலம்பி அழுதார்..! நினைத்து நினைத்து அழுதார்..! அவரைப் பரிவோடு பார்த்தேன்.  பின்னர் காரணத்தைக் கேட்டேன். அதற்கான நடவடிக்கைகள் எடுப்பதாகச் சொன்னேன். அவரது கவனத்தை மாற்ற,  நேற்றுக்கொடுத்த வேலையை நினைவுபடுத்தி அதனைச் செய்து முடிக்கச் சொன்னேன். அழுகைக்கான காரணத்தின் பின்புலங்களை ஆராய்ந்தேன்.  அதனோடு தொடர்புடையவர்களிடம் கதைத்து, இனிமேல் அவ்வாறு செய்யாமல், வேறு வழிகளில் அதனைச் செய்யலாம் எனக்கூறி, அவர்களது நியாயத்தையும் ஏற்றுக்கொண்டு, பிரச்சனைக்கு ஒரு தற்காலிகத் தீர்வை வழங்கினேன்.

 இறுதியாக ஒரு விடயம் அவர்களிடம் சொன்னேன்..! அது,  “நல்லது செய்தால் சபையில் பாராட்டுங்கள்..! ஆனால்  தவறுகள் செய்தால், ஏசும்போது தனிமையை நாடுங்கள்..!”


ஆ.கெ.கோகிலன்

04-01-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!