மத ஒழுங்குகள்..!

 


பொதுவாக எல்லாப் பெரிய மதங்களைச் சேர்ந்தவர்களும் அந்த அந்த மதங்களைப் பின்பற்றுவதில் அதித பற்று காண்பிப்பதை நான் அவதானித்து இருக்கின்றேன். மதக்கடமைகள் செய்வது என்றால் அதற்கு அவ்வளவு முன்னுரிமை கொடுப்பார்கள்..! ஆனால் சில சமயங்களில் அவ்வாறான செயற்பாடுகளில் மக்கள் அதிக அக்கறை காட்டுவதில்லை..!

சீனாவில் அதிக மக்கள் சமயங்களைப் பின்பற்றுவதில்லை என்ற ஒரு ஆச்சரிய உண்மையை அண்மையில் தெரிந்துகொண்டேன். அதற்கு காரணம் மதங்கள் மூலம், சில தவறான விடயங்களும் மக்களிடம் சென்றடைகின்றன.

சில மதங்கள் தங்களுடைய மதம் தான் உலகின் தலைசிறந்த உண்மையான மதம் என்றும் மற்றவர்களின் மதங்கள் அவ்வாறு அல்ல என்றும், அவர்கள் போகின்ற பாதை என்பது தவறானது என்றும் தமது நிலைப்பாட்டை ஆணித்தரமாகப் பேசுகின்றார்கள். அதேபோல் சில சமயத்தைச் சேர்ந்தவர்கள், பிரச்சாரங்கள் மூலம் ஆட்களைத் திரட்டுவது உண்மையான மதங்களுக்கு அழகு அல்ல என்றும் சொல்கின்றார்கள். இன்னும் சிலர், இப்படி இருந்தால் தான், கடவுளுக்குப் பிடிக்கும். இந்த உணவை மாத்திரமே சாப்பிட வேண்டும். இந்த வகுப்பில் பிறந்தால் கடவுளுக்கு கிட்டவே போக முடியும். குறிப்பாக இந்த மொழி தெரிந்தால் தான், கடவுளுடனே கதைக்க முடியும். ஆகவே இந்த மொழி தெரியாமல் யாரும் இறைவனை நெருங்க முடியாது. அப்படி செய்பவர்களை ஒருநாளும் ஏற்க முடியாது என்று தமது கருத்தை சொல்லி, எதிர்ப்பவர்களை அடியோடு அகற்றி விடுகின்றார்கள்..!

இன்னோரு மதத்தில், எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும். உயிர்களை அழிக்கக்கூடாது. இந்த வாழ்க்கையின் நோக்கமே அனைவரும் விட்டுக்கொடுப்போடு இந்த பூமியின் வளங்களைப்பகிர்ந்து அனைவரும் நிறைவாக இருந்துவிட்டுப் போவது தான். இங்கு யாரும் நீண்ட காலத்திற்கு தங்க முடியாது. அதற்கான அனுமதியும் கிடையாது. அது கடவுளின் உறவினர் என்றால் என்ன..? கடவுளுக்கு கிட்ட இருந்தால் என்ன..? கடவுளின் மொழி தெரிந்தால் என்ன..? முடியாது என்றால் முடியாது தான். இந்த நிலையாமை என்ற முடிவை இறைவன் நினைத்தாலும் மாற்ற முடியாது. அது தான் பிரபஞ்ச விதி அல்லது நிலை..!

இன்று ஒரு மேல்மட்ட சபைக்கூட்டம் நடந்தது. அங்கே என்னைப்போல் பலர் வந்திருந்தார்கள். அதில் ஒருவர்  தனது மதக்கடமைக்காக சில அனுமதிகளை அந்த மேல்சபைக் கூட்டத்தில் கோரி, பணிப்பாளர் நாயகத்தின் அதற்கான அனுமதியையும் பெற்றர். சில சமயங்களில் இருக்கும் மத ரீதியிலான கட்டுப்பாடுகளை, அந்த அந்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் பய பக்தியுடன் பின்பற்றுகின்றார்கள். அதேவேளை இந்துசமயத்தில் இருப்பவர்கள் அவ்வாறாக நடப்பதில்லை..! குறிப்பாக மதத்தில் எவ்வளவோ நல்ல விடயங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் அதனை பின்பற்ற அவ்வளவு முக்கியத்துவம் காட்டுவதில்லை. அவ்வளவு சுதந்திரம் இந்த மதத்தில் கொடுக்கப்பட்டுள்ளது..! யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் இறைவனைத் தொழலாம்..! அதற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. அப்படி இருந்தும், இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை உலக சனத்தொகையில் 15 வீதத்திற்கு உட்பட்டவர்களே..! அதனை அதிகரிக்க முடியாது இருக்கின்றது..! இதனை மாற்ற ஏதாவது வழியிருக்கா என்று கேட்டால், என்னைப்பொறுத்தவரை வழி இருக்கின்றது. அது உடல், உள்ளம்,  பொருள் சார்ந்தது..! குறிப்பாக  மனம் சார்ந்து, அடிப்படை அறிவு ரீதியாக இறைவனின் படைப்பை நன்கு புரிய வேண்டும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோக்கத்திற்கு ஏற்பவே உருவாக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தையும் மதித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். மாறாக எல்லாம் தமக்குத் தான் என்ற ஆணவப்போக்கில் இருந்தால், பலர் இந்து மதத்தை ஏற்க மாட்டார்கள்..! சந்தர்ப்பங்கள் வரும்போது மாற்று வழிகளில் பயணிப்பார்கள்..! பல புதிய வழிபாட்டு முறைகளும், மத வழிகாட்டிகளும் இதனாலேயே ஏற்படுகின்றன..!

குறிப்பாக, எல்லா மதங்களைப்போல் இந்து மதத்திலும் மதத்தலைவர்கள் எல்லா சமூகங்களில் இருந்தும் உருவாக வேண்டும். சரியான  முறையில் மதசார் கடமைகளைச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத்தவறினால், அவர்களை அந்த மதத்திற்கான தலைவராக ஏற்கக்கூடாது. இவ்வாறான கட்டுப்பாடுகளை வைத்தால், எல்லாரும் மதத்தை மதிக்கும் நிலை ஏற்படும் என்பது எனது கணிப்பு.  மாறாக ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் மதத்தலைவர்களாக வரமுடியும் என்றால், மற்றவர்கள் அவர்களது கருத்துக்களை ஏற்றுக்கொண்டு கீழ்படிந்து நடக்க வேண்டும் என்றால், சிலர் அதற்கு ஒத்து வந்து செயற்படலாம். சிலர் அதற்கு ஒத்துவராமல், தமது வழியில் செல்லலாம்..! வேறு சிலர் மத மாற்றங்களில் ஈடுபடலாம்..! ஆக, மத வளர்ச்சிக்கு ஒரு சமூகத்திடம் மட்டும் அந்தப்பொறுப்பு இருந்தால், அதிகபட்சம் அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் அக்கொள்கைகளைப் பின்பற்றலாம். ஆனால் மற்றைய சமூகத்தவர்கள், அந்த அளவிற்கு அக்கறை காட்டாது விடலாம்..!

ஆகவே மதத்தலைவர்கள் எல்லா சமூக மட்டங்களில் இருந்தும் வரவேண்டும்..! அவர்களுக்கு அதற்கான அங்கீகாரங்கள் கிடைக்க வேண்டும்..! சமத்துவம் மலர, இடம் கொடுக்கும் மதங்கள் மேன்மையடைவதற்கான வாய்ப்புக்கள்  உலகில் அதிகம் இருக்கின்றன..! அடக்கு முறைகளும் திணிப்புக்களும் இருக்கும் மதங்கள் காலப்போக்கில், காணாமல் போகவே வாய்ப்புக்கள் உண்டு. மதங்களைக் காக்க சரியான பாதைகளைக் காட்ட வேண்டும். அதற்கு அனைவரையும் உள்வாங்கக்கூடிய மாற்றுத்திட்டங்கள் இருக்க வேண்டும்..! இந்து சமயத்தில், யாரும் ஆசாரங்களைப் பின்பற்றி,  இறை கடமைகளைச் செய்யமுடியும் என்றால், இந்த சமயம் பெரும் வளர்ச்சி காண வாய்ப்புண்டு..! எல்லாவற்றிற்கும் மேன்மையாக மாற வழியுண்டு.

இந்த விடயங்கள் நடைமுறைக்கு  வந்தால், மற்றைய மதங்களைப்போல் எமது மதக்கட்டளைகளை நிறைவேற்ற அனைத்து சமூகத்தினரும் ஆர்வம் காட்டுவர். மதமாற்றங்கள் காலப் போக்கில் குறையும். சமயமும் வளர்ச்சிப்பாதையில் செல்லும்.

இது எனது மனதில் தோன்றிய எண்ணம் மட்டுமே..!

 

ஆ.கெ.கோகிலன்

14-12-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!