அம்மாவின் கோரிக்கை..!
பொதுவாக எனது தாயார், அவருடன் தொடர்புடைய சந்தோசமான காரியங்களை
செய்ய அனுமதிப்பது வழக்கம். அதுமாத்திரமன்றி, அவரும் தன்னால் இயன்ற ஒத்துழைப்பைத் தருவார்..!
ஆனால் அண்மைக்காலமாக அவரது உடலில் ஏற்படும் உபாதைகள் அவரை மிகவும் மாற்றியுள்ளது..!
உணவை மிகவும் குறைத்துள்ளார்..! மிகச் சிறிய தோற்றமுடைய வயதானவராக மாறிவிட்டார்..!
முன்பு அம்மாவை நான் “இடும்பி” என்று தான்
சொல்வேன். அந்த அளவிற்கு மிகவும் உறுதியாக இருப்பார்..! நாம் செய்யும் குழப்படிகளுக்கு
வெளுத்து வாங்கி விடுவார். இப்பவும் நினைவு இருக்கின்றது. 5ம் வகுப்பு படிப்பதற்கு
முன்னுள்ள காலத்தில், எமது வீடுகளுக்குப் பின்னாலுள்ள வயல்களில் அல்லது தோட்டங்களில்
விளையாட மற்றைய நண்பர்களுடன் சென்றுவிடுவேன். இதனைத் தாயாருக்குத் தெரியாமலே செய்வேன்.
ஆனால், தோட்டங்களுக்குள் மோப்பம் பிடித்துக்கொண்டு தேடிவந்துவிடுவார்..! வரும்போதே
கையில் கம்பு இருக்கும்.
வீட்டிலும் பல முறை அகப்பைக்காம்பால் அடிவாங்கிய அனுபவம்
எனக்கு நிறைய உண்டு..! அதற்கு ஒரே ஒரு காரணம், அப்பா சற்று மதுபாவிப்பதால் எம்மைக்
கண்டிப்பதில்லை..! அதனால், தானே தந்தையின் பொறுப்பைச் செய்ய, காளி மாதிரித் தாண்டவமாடுவார்..! அம்மாவின் அன்றைய செயற்பாடுகளை நினைத்தால், இன்றும்
பயமாக இருக்கும். அதேவேளை அனைத்தையும் எமது நன்மைக்காகவே செய்தார்..! நான் குழப்படிகள் ஒன்றும் இல்லாமல் ஒழுங்காக மாறவும்,
எங்கள் குடும்பம் மேலோங்கவும், அவர் பிடிக்காத
விரதங்களும் இல்லை, போகாத கோவில்களும் இல்லை..!
எனக்குத் தெரிய, 40 வயதிற்குக் கிட்டவாக வேலைக்குப்போய் தான்,
எம்மைக்காப்பாற்றினார்.
இன்று அவருக்கு 81ஆவது வயது..! நான் கேட்டேன் “உங்களுடைய
பிறந்த நாளை கொண்டாட விரும்புகின்றோம்.” “சம்மதமா..?” என்று. தனக்கு ஒன்றும் வேண்டாம் என்றார்..! பெரிதாக ஒன்றுமில்லை. குறைந்த பட்சம் ஒரு கேக்கையாவது
வெட்டுவோம் எனக்கேட்க, என்ன நினைத்தாரோ தெரியவில்லை. மௌனமானார்..! அவருக்கு தற்போது
கை மற்றும் கால்களில் தோல்வியாதிகள் வந்து, அண்மையில் எடுத்த மருந்தால், அவை மாறுகின்றன..!
அதனால் சற்று அசௌகரியமாக உணர்கின்றார் என நினைக்கின்றேன். இருந்தாலும் மாலை வருவதாகச் சொல்லி, ஒருவாறு அனுமதியைப்
பெற்றுக்கொண்டேன்.
அலுவலகத்திற்கும் லீவு சொல்லிவிட்டு, சில வீட்டுவேலைகளையும்
செய்துவிட்டுப் போகலாம் எனத்தீர்மானித்தேன். அவ்வாறாக வேலைசெய்யும்போது, தெரியாத்தனமாக
ஒரு கழிவறைக்கு பயன்படும் நீர்க்குழாயை உடைத்துவிட்டேன்..! பின்னர், சில மணிகள் அதனுடன்
செலவிட்டு, அந்தத்திருத்த வேலையை முடித்தேன்.
காலை உணவு எடுத்த பின், மச்ச உணவு சாப்பிட ஆசைப்பட்டு, இரண்டாவது
மகளையும் கூட்டிக்கொண்டு காக்கை தீவுக்குச் சென்று, விரும்பியதை எல்லாம் வாங்கிக்கொண்டு,
மகளுக்கும் வழிகளிலுள்ள ஊர்களை அறிமுகப்படுத்திக்கொண்டு வீடு வந்தேன்.
இவ்வாறு காலை மற்றும் மதிய வேலைகளோடு நேரம் முடிய, மணி 4.00ஐ
தாண்டிவிட்டது..! உடனேயே மனைவி பிள்ளைகளை அழைத்துக்கொண்டு மருதனார் மடத்தில் தேவையான கேக்குகளையும், ஏனைய கொழுத்தும் திரியையும் வாங்கிக்கொண்டு அம்மா வீடு
சென்றேன். அங்கே ஒருவரும் தயாராக இல்லை. ஒரு அரை மணி நேரத்தில் எல்லோரும் தயாராக, ஏறக்குறைய
மணி 5.15 இற்கு அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துப்பாடிக் கேக் வெட்டி, அதனை அனைவரும்
அவருக்கு ஊட்டி மகிழ்ந்தோம். கொஞ்சம் அந்த
நிகழ்வுகளை எனது போனிலும் கைப்பற்றி வைத்தேன். அம்மா எனக்காகப் பொறுத்துக்கொண்டு, அந்த
நிகழ்வில் கலந்துகொண்டார்..! இறுதியாக அவருக்கு ஒரு வாழ்த்தைச் சொல்லி புறப்பட்டோம்.
இரண்டாவது மகளுக்கு மாலை 6.00 மணிக்கு வகுப்பு இருப்பதால் மணி 5.45இற்கே வெளிக்கிட்டோம்.
சரியாக 6.00 மணிக்கு, இரண்டாவது மகளை வகுப்பில் விட்டுவிட்டு வீடுவந்து,
மேலும் நொறுக்குத் தீனிகளையும் சூடான பானத்தையும் அருந்தினேன்.
இரவும் போதிய கடலுணவுகளை உண்டு, விரைவாகவே உறங்கச்சென்றேன்.
அவ்வாறு உறங்கிக்கொண்டிருக்கும் போது, வயிறு வலித்தது..! கால்கள் பிடித்தன..! பல உணவுகளை
உண்டதாலும், தரையில் படுத்ததாலும் வந்த விளைவு என்று நினைத்தேன்..! பின்னர் கட்டிலுக்கு
மாறி, இரவு முழுக்க வலியுடன் போராடி, நுளம்புத்தொல்லைகளையும் சமாளித்து, சாதாரண நிலைக்கு வர அடுத்த நாளே வந்துவிட்டது..!
ஆ.கெ.கோகிலன்
23/24-12-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக