நுளம்பு ஆராய்ச்சி..!

 

 

என்ன மாயமோ மந்திரமோ தெரிவதில்லை..! எனது இரத்தம் நுளம்புகளுக்கெல்லாம் மிகவும் பிடிக்கின்றது..! எனது இரத்த வகை பி நேர்..! நானும் சிறுவயதில் இருந்தே பல இடங்களில் வாழவேண்டிய சூழல்களைச்  சந்தித்துள்ளேன். எங்கும் என்னுடன் நுளம்பு வலையும் கொண்டுசெல்வதே வழமை..! வலையில்லாமல் என்னால் நித்திரை கொள்ள முடியாது. அங்கே மின்விசிறி இருந்தால் என்ன..? குளிர்சாதன வசதி இருந்தால் என்ன..? எனக்குத் தேவையானது ஒரு நுளம்பு வலை மட்டுமே..!

கிறிஸ்மஷ் வாரம் என்பதால் யாழிலே நிற்கின்றேன். நேற்று கடலுணவு சாப்பிடப்பிரியப்பட்டு மகளையும் கூட்டிக்கொண்டு, காக்கை தீவுக்குச் சென்று, இறால், நண்டு, கணவாய் மற்றும் பொரியலுக்காக சில வகை மீன்களை வாங்கிக்கொண்டு வந்து சமைக்கச் சொன்னேன்.

மதியம், இரவு இரண்டு வேளையும் நல்ல ஒரு பிடி பிடித்தேன். போதாததற்கு, அம்மாவின் பிறந்த நாள் கேக் மற்றும் வீட்டில் இருந்த நொறுக்குத்தீனிகள், மற்றும் கொஞ்சம் சூடான பாணம்..! இதுமாத்திரமன்றி, மதியம் எலுமிச்சை ஜூஸ், பால் மற்றும் இரவு வாழைப்பழம்..! இவை எல்லாம் வயிற்றில் இருந்து ஒரு பெரிய வேலையைச் செய்தன..! அது இரவு முழுவதும் எனது நித்திரையைக் கெடுத்தன..!

வயிற்றிற்குள் போன சாப்பாடு உள்ளே இப்படி என்றால், நுளம்புகளும் வெளியில் இருக்கவிடவில்லை..! வழமையைவிட சற்று வேளைக்கு வலையைப்போட்டு படுக்கைக்குப் போக, ஏறக்குறைய நடுச்சாமம் 12.30 மணிக்கு, சரணவாயு காலைப் பிடித்துவிட்டது..!  அசைக்க முடியவில்லை..!  நான் பாயில் படுத்ததால், குளிரும் உடலுக்குள் போயிருக்கலாம். என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. வயிறு வீங்கியிருந்தது. சத்தி வரும்போல் தோன்றியது..! உடலில் ஏதாவது பித்தங்கள் சேர்ந்துவிட்டதா என்று தெரியவில்லை. அந்த வலியொடு எழுந்து  மெத்தைக் கட்டிலில் விழுந்தேன். ஏறக்குறைய ஒரு மணித்தியாலத்திற்கு அந்தப் பிடிப்பு இருந்தது..! ஏற்கனவே ஓமவோட்டர் வாங்கி வைத்திருந்தேன். அதில் ஒரு முடறு குடித்துவிட்டுப்படுத்தேன். பின்மூச்சுக்கள் வெளியேறின..! பின்னர் உடல் சாதாரண நிலைக்கு வந்தது. அதனால் தூங்கலாம் எனப்படுக்க நுளம்புகள் விடவில்லை..! கட்டிலில் வலைபோடவில்லை. வலை இருக்கின்றது என்றாலும் கொஞ்ச நேரம் பானைப்போட்டேன். திரும்பவும் குளிர்ந்தது..! ஆனால் நுளம்புகள் சற்று தடுமாறின. பானை நிறுத்தியதும் திரும்ப வந்தன. வந்து, பல இடங்களில் கடித்து வீக்கங்களை ஏற்படுத்தின. கண்ணாடி இல்லை என்றால் என்னால் நுளம்பைப் பார்க்க முடியாது..! கண்ணாடியைப்போட்டுக்கொண்டு தூங்க முயன்றேன்.

நீண்ட நேரமாக, ஒரேயொரு நுளம்பு என்னை நோக்கி வந்து “காதில் கடிக்கப்போகின்றேன்..!” எனத்தனது பாஷையில் சொல்லிவிட்டு தனது முயற்சியைத் தொடரும்..! அதன் உயிரை எடுக்க நான் பலமுறை முயல, தப்பிப் பறந்துவிடும்..! சற்று நேரம் கழிய திரும்ப இன்னோர் இடத்தில் இருந்து வரும். வழமைபோல் காதில் சொல்லிவிட்டு வேலையைத் தொடங்க, நானும் கையை ஓங்க தப்பிவிடும். ய பல மணி நேரம் இவ்வாறு அந்த நுளம்போடு மல்லுக்கட்டினேன்..!





நுளம்புகள் தொடர்பாக ஆய்வும், ஏதாவது புதிய நுட்பங்களைப் பயன்படுத்தி, அவற்றை அழிக்கவும் யோசித்தேன். சரி நுளம்பிற்கு பொறி வைப்போம் என்று உடலின் பெரும்பகுதியைப் போர்வையால் மூடிக்கொண்டு, தலையையும் கையையும் வெளியே வைத்துக்கொண்டு படுத்தேன். சுழன்றடித்துக்கொண்டு வந்து, காதில் சொன்னது “ ஏலும் என்றால் பிடித்துப்பார்..!” போர்வைக்கு வெளியே நீட்டிய கையை கடிக்க வந்தாலும், மற்றைய கையைத் தூக்க ஏற்படும் அசைவை உணர்ந்து பறந்துவிடும்..! இது ஒரு புத்திசாலி நுளம்பு..! நான் நுளம்பு தொடர்பாக ஆய்வு செய்ய நினைக்க, அது என்தொடர்பாக நன்றாக ஆய்வு செய்துவிட்டது..! எனது சின்ன அசைவும், அதற்குப் புரிகின்றது. ஒரு விடயம் உண்மை, அது, எப்போதும் என்னைக்கடிக்க வரும்போது அறிவித்துவிட்டே, கடிக்க முயற்சிக்கின்றது. நேர்மையான, அறம் சார்ந்த நுளம்பு..!

நான், சிலசமயம் வலைபோடாமல் படுத்தால், நிச்சயம் லைட்போடுவது வழமை..! என்னால் வெளிச்சத்தில் படுக்க முடியும்..! ஆனால் ஒரு சின்ன எறும்பு ஊர்ந்தாலும் எழுந்துவிடுவேன்..! அவ்வளவு உணர்ச்சிகரமான உடம்பும், உணர்வும்..இருப்பது இப்படியான சந்தர்ப்பங்களில் எனது நித்திரையை பறிக்கின்றது..!  எனது மனைவிக்கு பாம்பு ஊர்ந்தாலும் தெரியாமல் படுப்பார்..! எங்கள் இருவருக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் இது தான்..! இந்த இடத்தில் நான் பொதுவாக தேவகணத்தையும், இராட்சதகணத்தையும் நினைவுபடுத்துவது வழமை..!

இந்த வேறுபாடு தான் எமது பொருத்தமும் கூட..! நான் எவ்வளவு கோபமாக இருந்தாலும், பதட்டமடையாமல், ஒன்றுமே நடவாதது போல் இருப்பார்..!

நுளம்பு தொடர்பாக ஒரு ஆராட்சியை செய்ய வேண்டும் என்ற முடிவோடு, இருக்கும் நுளம்பு கொல்லிகளைப் பயன்படுத்திப் பார்த்தேன். பொதுவாக எல்லா வியாபார பொருட்களுக்கும் நுளம்புகள் பழக்கப்பட்டுவிட்டன..! அதுமாத்திரமன்றி, அந்த உற்பத்திகளும் நுளம்புகளை அழிக்காமல், அவர்களது வியாபாரத்திற்குக் காரணமாக இருக்கும் நுளம்புகளின் உற்பத்திகளுக்கும் பெரிதும் துணைபோகின்றன எனநினைக்கின்றேன்..!  முன்பு, இந்த உற்பத்திகளே வராத காலத்தில் இவ்வளவு நுளம்புகள் இருந்ததாக நான் உணரவில்லை.

தற்போது பெரிய அளவில் இலங்கை முழுவதும் பெருகியுள்ளது..! அனைவரும் சேர்ந்து இதனை ஒழிக்க வேண்டும். அதுவும் உயிர் தான்..! அதற்கும் இங்கு வாழ உரிமையுண்டு..! அதற்கும் நீதி நியாயங்கள் வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய முடியும்..? பொறுத்துத்தான் போக வேண்டும்.





சரி, நுளம்பு தின்னிகளைக்கண்டுபிடிக்க வேண்டும். அல்லது புதிய உயிரினங்களை உருவாக்க வேண்டும். நுளம்பிற்குப் பிடிக்காத திரவங்களை அல்லது வாயுக்களைப் பயன்படுத்தித் தப்ப வேண்டும். அல்லது கடிக்கும்போது அதன் உடல் எமது உடலுடன் ஒட்டி தப்ப முடியாதவாறு செய்யவேண்டும். இவ்வாறாக யோசித்துக்கொண்டிருக்க,

திரும்பவும் அந்த நுளம்பு இன்னோர் பக்கத்தில் இருந்து பறந்து வந்து காதில் சொன்னது “ நீ என்ன செய்தாலும், என்னை ஒன்றும் புடுங்க இயலாது என்று..!”

சரி பார்ப்போம் என்று நுளம்பிற்கான மோட்டின் ஸ்பிறேயை எடுத்து வழமைபோல் பொறி வைத்துப் பார்த்திருந்தேன். வந்தார்..! காதில் சொன்னார் ..! வெளியே வைத்திருந்த கையில் கடிக்க உட்கார்ந்தார்..! நான் ஸ்பிறேயை அழுத்த பறந்துவிட்டார்..! அதன் உடலில் மருந்து பட்டிருக்கலாம்.

சரி இனிவராது என்று கண்ணாடியைக்கழற்றி வைத்துவிட்டுப் படுக்க, திரும்பவும்  அந்த நுளம்பு வர, இனி ஏதாவது கண்டுபிடிப்பைச் செய்யத்தான் வேண்டும் என்ற முடிவோடு எழுந்தேன்.  இருக்கும் உற்பத்திகளில் நம்பிக்கை போய்விட்டது..! பொழுதும் விடிந்துவிட்டது..!

 


ஆ.கெ.கோகிலன்

24-12-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!