கொடூர ஞாயிறு..!
இவ்வாறு ஒரு கிழமை நாளை, நான் குறிப்பிட விரும்புவதில்லை..! ஆனால் ஏன் என்று தெரியவில்லை..? சில நாட்கள் எனக்கு
அப்படியாக அமைகின்றன..! அந்த வகையில் கடந்த ஞாயிறும் அமைந்து என்னைப் பயமுறுத்திவிட்டது..!
இந்த சூழல் உருவாவதற்கு யார் காரணம் என்று ஆராய்ந்தால் இயற்கையைத்
தவிர யாரையும் குறை கூறமுடியாது..! இப்படியாக எம்மைத்தாண்டிய சக்திகளின் உருவாக்கங்களைத்
தடுக்க நாம் இறைவனைத் தான் நாட வேண்டும்.
ஒரு வயலில் உழைப்பு, நேரம், பணம் என அனைத்தையும் மூலதனமாகப் போட்டுவிட்டு,
அந்த வயலின் விவசாயி இறுதியாக இயற்கையை அல்லது இறைவனைத் தான் வேண்ட வேண்டியுள்ளது..!
கடும் வெயில் வந்தாலும் பயிர்வாடும்..! கடும்
மழை வந்தாலும் பயிர் அழியும்..! ஆக, எல்லாம்
அளவாக இருக்கும் போது தான் சரியான அறுவடை அந்த விவசாயிக்குக் கிடைக்கும். அப்போது தான்
விவசாயியும் மகிழ்வான். அவனை நம்பிய மக்களும் மகிழ்வார்கள்.
உணவே அனைத்திற்கும் ஆதாரம். அதை உற்பத்தி பண்ணுபவனே போற்றுதலுக்குரிய
தொழிலாளியாவான்..! அவன் ஒரு விவசாயி என்றாலும் சரி, மீனவன் என்றாலும் சரி, வேடுவன்
என்றாலும் சரி அனைவரும் தமது முயற்சியை மற்றவர்களுக்கு உணவளிப்பதற்காகவே செலவழிக்கின்றார்கள்..!
உலகிலுள்ள ஏனைய தொழிலாளர்கள் அனைவரும் அவர்களுக்குப் பின் தான் வருவார்கள்..!
காற்றையும், நீரையும் நாம் உற்பத்தி பண்ண முடியாது. அதற்குக் காரணகர்த்தாவாக இயற்கையும்,
இறைவனும் இருக்கட்டும். அடுத்தது, உணவு..! அதற்கு மேற்சொன்னவர்களே பிரதானம். அதன் பிறகே,
ஏனைய அனைத்துத் தொழில்களும் வரும். ஆனால் மனித சமூதாயத்தில், குறிப்பாகக் கீழைத்தேய
நாடுகளில் இதற்குரிய மரியாதைகள் கிடைப்பதில்லை..! பணம் போட்டவனே பெரியவன் என்பது போல
காட்டிக்கொள்கின்றோம். வியாபாரம் என்பது பணத்தை
வைத்து, பணத்தைப் பெருக்குவது..! அதுமாத்திரமன்றி, மக்களின் தேவைகளை அதிகரிக்கச் செய்து,
அதனூடாகப் பணம் பார்ப்பது..! மேலும், அடிப்படைத்தேவைகளைத்
தாண்டி, வேறு தேவைகளை மேன்மைப்படுத்தி, இறுதியில்
அடிப்படைத் தேவைகளைத் தாமே அபகரித்து, அதனைப்
பெரும் வியாபாரமாக்குவது..! ஆக, வியாபாரிகளே தற்போது பெரும் உற்பத்தியாளர்கள்..! விவசாயிகள்,
மீனவர்கள், வேடுவர்கள் எல்லாம் அவர்களுக்கு கீழ் வேலைசெய்யும் அடிமைகள்..! இந்த வியாபாரிகளைக் கட்டுப்படுத்தும் வீரமும், விவேகமும் கொண்டவர்களே இன்றைய தலைவர்கள்..! அன்றைய அரசர்கள்..! இதிலும் வேடிக்கை என்னவென்றால்,
வீரத்தைக்கொண்டவர்கள் அரசர்களாகவும், விவேகத்தை அதாவது அறிவு உடையவர்கள் மந்திரிகளாகவும் வந்தார்கள்..! இவற்றினூடே சாதியமும்
தோற்றம் பெற்றது..! தொழிலை வைத்துக்கொண்டு மனிதர்களை வகைப்படுத்தினான் மனிதன்..!
அதை, இந்நாள் வரை தூக்கிப்பிடிக்கும் மனிதர்களும் இருக்கின்றார்கள்..!
உலக அல்லது பிரபஞ்ச உண்மை புரிந்தவர்கள் இவை எல்லாவற்றையும் மௌனமாகக் கடந்து சென்றார்கள்.
இங்கு யாரும் நீண்ட நாட்கள் வாழமுடியாது. ஆனால் நல்லது செய்தால், அன்பை அனைவருடனும்
பகிர்ந்தால், நாம் போனாலும் நமது நாமம் வாழும்..!
மனிதர்களைக் கோபிக்க நான் விரும்புவதில்லை..! அவர்களது அறிவின் அடிப்படையில்
அவர்கள் செயல்கள் இருக்கின்றன..! நல்ல அறிவை அவர்களுக்கு கொடுக்காமல், மறைத்ததற்கு
காரணமான இறைவனையும் இயற்கையையும் நான் கோபிப்பேன்..!
ஏன் இந்த அடிப்படைகளை பல மனிதர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..?
என்றும், ஏன் இதனை புரிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றார்கள்..? என்றும் வருந்துவேன்.
ஆரம்பத்தில் நான் ஒரு கணித ஆசிரியர். வகுப்பில் கணிதம் படிப்பித்தால்,
என்ன தான் விழுந்து விழுந்து கற்பித்தாலும், சொன்னதைப் புரியாத சில மாணவர்கள் இருக்கின்றார்கள்..!
ஏன் அவர்களுக்கு இது புரியவில்லை எனப்பலமுறை யோசித்தாலும் இறுதியில் எனக்குப் புரிவது அது படைப்பின் கோளாறு..! இறைவன்
சில பகுதிகளை இயங்காத வகையில் படைத்திருப்பான்..! அல்லது எம்மைவிட அதிகமாக இயங்கும்
பகுதிகளை வழங்கியிருப்பான்..! ஒரு அளவிற்கு மேலே சென்றாலும், கீழே சென்றாலும் அந்த
விடயம் நடக்காது..! அப்படி நடக்க வேண்டும் என்றால், குறித்த வீச்சத்திற்குள் இருக்க வேண்டும். ஒளி,
ஒலி எல்லைகளைப் போன்றது..!
நேரம், வாரம், மாதம், வருடம், யுகம் எல்லாம் சுழற்சி முறையில் வருவதுபோல்,
நல்லதுகளும், கெட்டதுகளும் சுழற்சி முறையில் தான் நமக்கு வருகின்றன..! ஆனால் நமக்கு
கிடைக்கும் அறிவாலும், வசதிகளாலும் அவற்றில் சிறிய தாமதிப்புகளை ஏற்படுத்த முனைகின்றோம்.
அவ்வளவு தான்..! ஆனால், நமக்கு வரவேண்டியது வந்தே ஆகும்..! அவ்வாறு வரும்போது, நாம்
எதிர்பார்க்காத விளைவுகளையும் தந்துவிட்டே செல்லும்.! அதேபோல் வரக்கூடாது என்றால், அது எப்படித் தலைகீழாக நின்றாலும் வராது..!
சாதாரண ஒரு அல்சர் பிரச்சனை,
ஒரு நாளை எனக்கு கொடூரமான நாளாக மாற்றிவிட்டது..! எனக்கு இருக்கும் புரிதலால், அது
ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது..! இல்லை என்றால், வைத்தியசாலைக் கட்டிலில்
தான், சில நாட்களைக் கழிக்க வேண்டியிருக்கும்.
அவ்வாறு செய்யாமல் காப்பாற்றிய, இதற்குக் காரணமான இறைவனுக்கும், இயற்கைக்கும் எனது
நன்றிகள்.
ஆ.கெ.கோகிலன்
06-01-2025.
கருத்துகள்
கருத்துரையிடுக