விடுதலை -1
தமிழ் சினிமாவில் சில இயக்குனர்களின் படங்கள் யதார்த்தங்களோடு ஒட்டிப்பயணிக்கும். அந்த வகையில் கதையின் நாயகனாக பரோட்டா சூரி நடித்திருக்கும் இந்தப்படத்தின் கதையும் அமைந்துள்ளது.
ஒரு இனத்தின் போராட்டத்தை சமகாலத்தில் இருந்து அவதானித்த
எமக்கு இதைவிடப் பெரிய அனுபவங்கள் இருக்கின்றன..!
ஒரு மலைக்கிராமத்தில் இருக்கும் சிறு காவல் படையை வைத்து,
இந்தக்கதை பின்னப்பட்டுள்ளது.
எமது ஊரில் நடந்தது நான்கு அரச படைகளின் தாக்குதல்களில் இருந்தும்,
போராட்ட இயக்கங்களின் தாக்கங்களில் இருந்தும், தப்பித்தே ஈழத்தமிழர்களாகிய எமது வாழ்க்கையும்
நகர்கின்றது..!
படைகள் பெரிதாக இருந்தால் என்ன சிறிதாக இருந்தால் என்ன சில
உணர்வுகள், பொதுவாகப் படையினர் மேல் கோபத்தைக் கொண்டுவருகின்றன. மக்களுக்குள் பதுங்கி இருந்து, மக்கள் போராட்டத்தை
மேற்கொண்டால், கேடயங்களான மக்களே பலிகடா ஆவர்கள் என்பதை இக்கதை கண்முன்னே கொண்டுவருகின்றது.
போராட்டங்கள், சண்டைகள் என்பவற்றில் நீதி நியாயங்களை விட,
அந்தந்தக் கணத்தீர்மானங்களே வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கின்றன. அன்பால், அநியாயம் என்று தெரிந்தும், வழியின்றி,
நன்மைக்காக நிற்கும் வாத்தியார் எனப்படும் விஜய்சேதுபதியை, பொலீஸ் காவலரான சூரி துப்பாக்கி முனையில் கைதுசெய்து, தனது
காதலியையும், அந்த ஊர் அப்பாவிகளையும் காப்பாற்றும் முயற்சி வெற்றி பெற்றதா என்பதை
விடுதலை 2 வந்து தான் சொல்லவேண்டும். இப்படியான கதைகளை எவ்வளவிற்கும் நீட்டி முழக்க
முடியும். அதற்கான காலமும், தயாரிப்புச் செலவும், மக்கள் ஆதரவும் இருந்தால் மாத்திரமே
அது சாத்தியம்.
பார்ப்போம் “அடுத்த பகுதியோடு கதை முடிகின்றதா அல்லது இன்னும்
நீட்ட வேண்டியுள்ளதா என்பதை..!”
படத்தில் தொழில்நுட்பங்கள் குறிப்பாக ஒளிப்பதிவு, இசை மிகச்சிறப்பாக
இருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இளையராஜாவின் இசை மனதை வருடியது. குறிப்பாக “வழி நெடுக காட்டுமல்லி..” என்ற பாடல் வாய்க்குள் வந்தபடியே இருக்கின்றது..! சூரியின் தலையில் பெரும்பாரம் வைக்கப்பட்டுள்ளது.
மிக இலகுவாகக் அதைக் கொண்டுசெல்கின்றார். விஜய் சேதுபதி வழமைபோல் சிறப்பாகச் செய்துள்ளார்.
ஜீ.வி.பிரகாஷின் தங்கை, சூரியின் காதலியாக நன்றாக நடித்துள்ளார். கௌதம் வாசுதேவ் மேனன்,
ராஜீவ் மேனன், சுபரமணியம்சிவா போன்ற பல இயக்குனர்கள்
பாத்திரங்களாக வாழ்ந்துள்ளார்கள். சேத்தனின் நடிப்பும் மிக நன்றாக இருந்தது. அவ்வளவு
தூரத்திற்கு அந்தப் பாத்திரம் மேல் வேறுப்பு வந்தது..!
என்றும் தரமான படங்களையே தரும் வெற்றிமாறனின் இந்தப்படத்திற்கான
கற்பனையில் இலங்கைப்பிரச்சனையின் சாயல் தெரிவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால் படம்
போரடிக்காமல் சிறப்பாக இருக்கின்றது.
ஆ.கெ.கோகிலன்
03-07-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக