அப்பாவால் பெருமை..!

 



கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இதே நாளில் எனது மகளின் சாமத்தியவீடு நடந்தது. அதே நாளில் எனது நிறுவன விரிவுரையாளர் ஒருவரின் திருமணமும் நடந்தது. தவிர்க்க முடியாத சூழலில் இரு நிகழ்வுகளும் ஒரே நாளில் வந்ததால் எமது ஊழியர்கள் சங்கடப்பட்டார்கள். முதலில் விரிவுரையாளரின் திருமணத்திற்குச் சென்று அதனை முடித்துக்கொண்டு, எனது மகளின் சாமத்திய வீட்டுக்கு வந்தார்கள். இரண்டும் ஒன்றாக வந்ததால், அவர்களால் ஒரு இடத்தில் கூட நிம்மதியாக இருந்திருக்க முடியாது.

எமது ஊழியர்களுக்கு நடந்த அதே சூழல் இன்று எனக்கு வந்தது..! இரு திருமணங்களுக்கும்  போகவேண்டிய சூழல்..! இரண்டும் முக்கியமானவர்கள். ஒருவர் எனது மாணவரும், நிறுவன ஊழியரும் ஆவார்..! இன்னொருவர், எனது மாணவியும், உறவுக்காரப் பெண்ணும் ஆவார்.

என்ன செய்வது..? ஒடித்திரிந்து இருவரையும் சமாளிக்கும் வகையில்  நடந்தேன். இருந்தாலும் ஒரு இடத்தில் சாப்பிட்டேன். இன்னோர் இடத்தில் பலகாரப்பொதியைப் பெற்றுக்கொண்டேன்..!

இந்த சமயத்தில் ஒரு வயதான நபரை, உறவுக்கார பெண்ணின் திருமண மண்டபத்தில் சந்தித்தேன்..! என்னைப்பற்றிக் கேட்டார். நான் யார்..? என்பதை எனது உறவினர்  அவருக்குச் சொன்னார்.  அவர் உடனே மகிழ்ந்து எனது தந்தையாரின் பெருமைகளைச் சொன்னார். தந்தையாரின் ஊரில், கணிதத்தில் அவரை மிஞ்ச ஆளில்லை என்றார். அது மாத்திரமன்றி மூன்று மொழிகளிலும் நல்ல புலமைகொண்டவர் என்பதையும் சொல்லி, அவரை ஊரில் திருமணம் செய்து வைத்திருக்க வேண்டும். தவறிவிட்டது என்றார்.  அத்துடன், தான் கனடாவில் இருப்பதாகவும் பிள்ளைகள் எல்லோரும் நன்றாகப் படித்து டொக்டர்ஸ் ஆக இருப்பதாகவும், ஒரு மகளுக்கு கனடாவிலுள்ள படித்த மாப்பிளை தேடுவதாகவும் கேட்டுக்கொண்டார். எனக்குத் தெரிந்த ஒருவர் கனடாவில் இருக்கின்றார் என்றும், அவர்களது சம்மதம் கேட்டுச்சொல்வதாகவும் கூறினேன்.

இவையாவற்றையும் எனது மனைவியும் கேட்டுக்கொண்டிருந்தார்.

இளம் வயதில் அப்பாவிற்கு எதிராகவே நடந்து வந்துள்ளேன். பின்னர், அதனை நினைத்து வருந்தியும் உள்ளேன். அவரது குடிப்பழக்கமே,  அவரிடம் என்னைக் கிட்டப்போக விடவில்லை. அவரது மரணத்திலும் நான் கலந்துகொள்ளவில்லை. நானாக இதைச்செய்யவில்லை. இறைவனே மறுத்துவிட்டான். ஆனால் அந்தப்பாக்கியம் எனது மனைவிக்கு கிடைத்துள்ளது..! நான் திருமணம் செய்வதற்கு 3 வருடங்களுக்கு முன்பே அப்பா இறந்துவிட்டார். அந்தக்கால கட்டத்தில் அம்மாவுடன், மனைவியும் ஆசிரியர் பணியில் இருந்துள்ளார். அதனால் அவருக்கு மரணச்சடங்கில் பங்குபற்றும் வாய்ப்பு வந்துள்ளது..! நான் போகாவிட்டாலும், மனைவி போனதால், எனது குடும்பத்திலிருந்து ஒருவர், அப்பாவின் மரணச்சடங்கில் கலந்துகொண்டது, நான் கலந்துகொண்டது போன்றது தான் என்பதை இறைவன் இன்று புரியவைத்தார்..!

இறைவனின் கணக்கு, எனக்குத் தப்பாமலே அமைகின்றது..!  இறைவனுக்கு நன்றி தெரிவித்து வணங்குவதைத் தவிர நான் என்ன செய்ய முடியும்..?

 

ஆ.கெ.கோகிலன்

09-07-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!