மறதிக்கு மருந்து..!

 



பொதுவாக மறதியை கடவுள் எனக்குத் தந்த கொடை என்று தான் நான் நினைப்பது வழக்கம்..! பல விடயங்களை மறக்க முடியாமல் தவித்த காலங்களும் உண்டு. அதிலிருந்து மீளக் கடவுள் கொடுத்த ஒரு மருந்தே மறதி..!

பின்னர் விரிவுரையாளராக வந்தபிறகு, ஒரு விடயத்தை நினைவுபடுத்தி வைக்க நான் எடுத்துக்கொண்ட முயற்சி சொல்லிமாளாது.

நடுச்சாமங்களில் இருந்து, ஒவ்வொரு விடயமாக மூளைக்கு ஏற்றுவது என்பது  கிட்டத்தட்ட ஒரு தரவுக்களஞ்சியத்தில் இருந்து இன்னோர் நினைவகத்திற்கு அல்லது தரவுக்களஞ்சியத்திற்கு தரவு அனுப்பும் செயலை ஒத்தது. ஏறக்குறைய இந்தவாழ்க்கை முறையில் 25 வருடங்கள் கடந்திருப்பேன். ஒவ்வொரு நாளும் ஒரு புதிய ஒரு விடயத்திற்காகக் காத்திருப்பேன். பழையதை மறந்துவிடுவேன். இப்படி நீண்டகாலமாக எனது மூளையைப் பயன்படுத்தியதால், ஒரு விடயத்தை மறப்பது என்பது மிக இலகுவான காரியமாகிவிட்டது..! இன்னோர் புதிய விடயத்தில் அதிக கவனம் எடுக்கும் போது முன்னையது மறந்துவிடுகின்றது..!

இப்படிப்பழக்கப்பட்ட மூளையை வைத்துக்கொண்டு, சில வேலைகள் செய்வது கடினம் என்பதை பின்னர் தான் உணர்ந்து கொண்டேன்.

ஊதாரணத்திற்கு அப்படியான  அண்மையில் நடந்த சம்பவம், தன்னியக்க ஆழி பொருத்தப்பட்ட எனது  மோட்டரில் ஏதோ சிறுபிரச்சனை காரணமாகவும், அதனை உடனே திருத்த முடியாது என்பதாலும், அந்தத் தன்னியக்க ஆழியை அகற்றிவிட்டேன்.

இந்த நிலையில், தாங்கியில் தண்ணீர் இல்லாததால், முகம் கழுவக் குளியல் அறைக்குச் செல்லும்போது மோட்டர் ஆழியைப் போட்டுவிட்டுச் சென்றேன்.

மோட்டர், கிணறு, தாங்கி மூன்று அதிக இடைவெளியில் இருப்பதாலும், தாங்கியிலிருந்து மேலதிகமாக வரும் தண்ணீர் யாருக்கும் தெரியாதபடி கால்வாயினூடாக வெளியேறும், என்பதாலும் மோட்டர் வேலை செய்வதோ அல்லது தண்ணீர் முட்டி வழிவதோ கண்டுபிடிப்பது கடினம். அத்துடன் பெரிய சத்தமும் கேட்காது.

இந்த சூழலில், ஆழி போட்டதை மறந்து பல வேலைகள் செய்து ஏறக்குறைய ஒரு மணித்தியாலத்திற்குப் பிறகு மோட்டர் வேலை செய்வதையும், அயல்வீடுகளுக்குத் தண்ணீர் போயுள்ளதையும் அறிந்தேன்.

மனிதனின் வேலைகளை இலகுபடுத்தவென்று அறிமுகப்படுத்தப்பட்ட பல விடயங்கள் மனிதனுக்கு நன்மையைக் கொடுத்தாலும், தீமைகளையும் கொடுக்கின்றது என்பதை அனுபவம் மூலம் அறிந்துவருகின்றேன்.

தன்னியக்க ஆழியைப் பயன்படுத்தி இவ்வளவு நாட்களும் இலகுவாக இருந்துவிட்டு, திடீரென ஆழியை அகற்றிவிட்டதால் ஏற்படும் கஷ்டம் இன்னும் சிக்கலானது.  மின்சாரத்தால் பல நன்மைகளைப் பெற்றுவிட்டு, மின்சாரம் இல்லை என்ற சூழல்வரும்போது வாழ்வே வேண்டாம் என்று ஆகிவிடுகின்றது..!

கீழ்வீட்டில் இருக்கும் மகளுக்கும் இதேநிலை தான். அவரும் சில சமயங்களில் மோட்டரின் ஆழி போட்டதை  மறந்து, பின்னர் எல்லாம் விரயமாகிய பின்னர் கவலைப்படுவார்.

இறுதியாக நான் ஒரு நுட்பத்தை மகளுக்குச் சொன்னேன். மோட்டர் ஆழியைப் போடும் போது,  குளியலறை வாசலில், இலகுவாகத்தூக்கவும், தெரியக்கூடிய வகையிலும்,  ஒரு பிளாஸ்டிக் கதிரையை வைக்க வேண்டும்.  ஆழியை நிறுத்தினால் அந்தக்கதிரையை எடுத்துவிட வேண்டும்.

அவளும் வெறுப்புடன் சரி என்று சொல்லி, அந்த முறையைச்செய்து பார்க்கின்றார்.  நானும் அதே தான் செய்கின்றேன். பார்ப்போம் இனி என்ன மாதிரி பிரச்சனை வருகின்றது என்று..!

 

ஆ.கெ.கோகிலன்

06-07-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!