மௌனத்தின் மவுசு..

 



நான் இளம் வயதில் அதிலும் குறிப்பாக க.பொ.த உயர்தரம் எடுக்கும் சந்தர்ப்பத்திலே யாழ்ப்பாணத்தை விட்டு வெளியே செல்லவேண்டிய சூழல் வந்தது. அந்நேரம், தலைநகரில் எனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தேன். அப்போது தான் புரிந்தது நாம் பண்பாடுகளில் எவ்வளவு வேறுபட்டு இருக்கின்றோம் என்பது..!  நான் வழமையாக வீட்டில் போது மேற்சட்டை போடுவதில்லை. எங்காவது வெளியே செல்வது என்றால் மாத்திரம் சட்டை போட்டுச் செல்வேன். ஆனால் அங்கே வீட்டில் இருக்கும் போதே உறவினர்கள் மேல் சட்டை போட்டு இருப்பார்கள். அங்கும் நான் போடுவதில்லை. அது ஒரு குறையாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒரு சமயம் எனது மாமா, இங்கு இப்படி இருப்பது தான் நல்லது. எல்லோருக்கும் பிடிக்கும் என்றார். அத்தோடு,  எனக்குத் தலைநகர் பிடிக்காமல் போய்விட்டது. ஊருக்காகவும், உலகத்திற்காகவும் நடித்து வாழ்கின்றார்கள் என்று புரிந்தது. இருந்தாலும் சூழலை ஒருவாறு சமாளித்து, எனது போக்கிலே நான் வளர்ந்தேன்.  எனது பாதையும் பொதுவான எல்லோரும் பயணிக்கும் பாதையல்ல..! அது பல மேடுபள்ளங்களைக் கொண்டு இருந்தது. இருந்தாலும் விழுவதும், எழுவதுமாகவே பயணம் இருந்ததால் பயம் என்பது இடையில் காணாமல் போய்விட்டது. இறைவனைத் தவிர அல்லது இயற்கையைத் தவிர யார் மேலும் பயம் வருவதில்லை..!  மாறாக  எனது கடமையைச் சரியாகச் செய்வதற்கு நிறைய முயற்சி செய்வேன்.

தமது கடமையை, இறைவனுக்குரிய பூஜை போல் செய்பவர்கள் யாரையாவது கண்டால் மாத்திரம், அவர்கள்  மேல் அதிக மதிப்பு வருகின்றது..! 

பெரும்பாலானவர்கள், தமது திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்பதற்காக, சிறுவர்கள் கவனத்தை ஈர்ப்பதற்கு செய்யும் முயற்சிகள் போலவே, அவர்களும் செய்கின்றார்கள்..!

ஒரு குழந்தை தான், காலப்போக்கில் முதியவர் ஆகின்றது. ஆனால் அனுபவங்கள் அவர்களைப் பதப்படுத்த சிலசமயம் தவறிவிடுகின்றதோ என்ற எண்ணம் மட்டும், அடிக்கடி எமது நிறுவனத்தில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது ஏற்படுவது தவிர்க்கமுடியாததாக மாறிவருகின்றன.

நீயா நானா என்பது உண்மையில் அறியாமையின் வெளிபாடு..! அறிவாளி அமைதியாக இருப்பான். நிறைய விடயங்களைச் செயலில் காட்டுவான்.

அண்மையில் ஒரு மனிதரைப் பார்த்தேன். அவர் தனது ஒவ்வொரு நாள் திட்டமிடலுக்கும் என்று, புள்ளடி போடும் பட்டியலைத் (Tick list) தயாரித்து வைத்துள்ளார்..!  ஒவ்வொரு நாளும் புள்ளடி போடுகின்றார். தான் நினைத்ததில் அல்லது திட்டமிட்டதில் எவ்வளவு விடயங்களை நிறைவு செய்தார் என்பதை பொறுத்து குறித்த நாளின் தன்மையை தீர்மானிக்கின்றார். பல நாட்கள் வினைத்திறனற்றுச் செல்லுமாயின்  ஒரு கிழமை விரயமாகும். அதேபோல் கிழமைகள் விரயமானால், மாதங்கள் விரயமாகும். மாதங்கள் விரயமானால் வருடங்கள் விரயமாகும். இறுதியில் வாழ்க்கையே விரயமாகும்..! எல்லாவற்றிற்கும் ஒரு அளவை வைத்து முன்னேற வேண்டும். முன்னேற்றம் என்பது பல பட்டங்கள் பெறுவதிலோ அல்லது பல பதவிகளை அடைவதிலோ அல்லது பணம் சம்பாதிப்பதிலோ அல்லது உறவுகளைப் பெருக்குவதிலே இல்லை. மாறாக அது எமக்குள்ளே தான் இருக்கின்றது. சின்ன வேலை என்றாலும், எவ்வளவு நிறைவாகத் திருப்தியாக அந்த வேலைக்கான கோட்பாடுகளுக்கு உட்பட்டு செய்கின்றோம் என்பதில் தொடங்கி, தானும் நிறைவாக இருந்து, மற்றவர்களையும் அவரவர் பாதைகளில்  நிறைவை நோக்கி வழிநடத்துவதிலேயே அதன் சிறப்பு இருக்கின்றது. மாறாக, தானும் குழம்பி மற்றோரையும் குழப்புவது என்பது அழிவைநோக்கிய பயணமாகவே எனக்குத் தெரிகின்றது. அந்தப் பாதையில்  உண்மையான வெற்றியை அடைவது என்பது சாத்தியமில்லை. இது சத்தியம்..! எமக்கு வரும் துன்பங்களுக்குக் காரணம் என்று யாரையும் குறை கூறுவதைவிட, அந்தத் துன்பங்களை குறைக்க, என்ன செய்தால் முடியுமோ அதனைச் செய்யவேண்டியது தான். சண்டையிடுவதால் அல்லது ஒருவரை ஒருவர் மண்ணைவாரித்தூவுவதால் என்ன பலன் வந்துவிடப்போகின்றது. வேண்டும் என்றால் பார்வையாளர்களுக்கு, மெல்லத் தீனி கிடைத்தது என்று எடுத்துக்கொள்ளலாம்.

நன்மையும் தீமையும் பிறரால் வராது..!

இந்தப்பாடத்தைப் படிப்பதற்கு நான் செலவழித்த காலங்கள் ஏறக்குறைய 30 வருடங்களுக்கு மேல்..!  உண்மையான புத்திசாலிகள்,  இந்தப்பாடத்தை எவ்வளவு குறைவான காலத்தில் கற்றுக்கொள்கின்றார்கள் என்பதைப் பொறுத்து, அவர்களது வாழ்க்கையில் வெற்றிகளை அறுவடை செய்யமுடியும்.

மௌனம் என்பது மிகப்பெரிய ஆயுதம். முன்பு இதனை நான் பயன்படுத்துவது குறைவு.  தற்போது, அதனைக் கூடப்பயன்படுத்த விரும்புகின்றேன்.

சில சமயம் மூளையும், வாயும் ஒத்திசைவோடு வேலைசெய்வதில்லை. பின்னர் வாயால் வந்த வினையைப் போக்க நிறைய மூளையைப் பயன்படுத்த வேண்டும்.

இவற்றை எல்லாம் தவிர்க்க, மௌனமே தீர்வு..!

 

ஆ.கெ.கோகிலன்

15-07-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!