ஆட்டு இறைச்சி

 

 

அண்மைக்காலமாக மரக்கறிச்சாப்பாடுகளே அதிகம் கிடைக்கின்றன..!  அசைவம் சாப்பிட முடியாத வகையில் சனி, ஞாயிறுகளிலும் திருமணம் மற்றும் பூப்புனித நீராட்டுவிழா அல்லது அந்தியேட்டி என்று வந்து, சைவம் உண்ணவே இயற்கை வலியுறுத்துகின்றது..! எத்தனை நாட்களுக்குத் தான் சைவத்தைச் சாப்பிடுவது..?

எமது வீட்டிலும் சாமத்தியச்சடங்கு நடந்தது. அடுத்த நாள் மச்சம் சாப்பிடலாம் என்று எதிர்பார்க்க, அன்றும் தம்பியின் மகள் சாமத்தியப்பட்டதால் சைவத்திற்கு போகவேண்டியேற்பட்டது.

சின்ன வயதில் பொருளாதாரக்கஷ்டம் எனது வீட்டில் நிலவியது. அதனால் அசைவச்சாப்பாடுகள் வாரத்தில் ஓரிரு நாட்களில் தான் கிடைக்கும். கோழி இறைச்சி  சில மாதங்களுக்கு ஒரு முறை  கிடைக்கலாம். ஆட்டு இறைச்சி ஆண்டுக்கு இருமுறை..! அதுவும் தீபாவளி மற்றும் தமிழ் புதுவருடத்திற்கு கிடைக்கும்.

பின்னர் கால வேகத்தில் கலாசாரத்தில் மாற்றங்கள் வந்தன. புதுவருடம், தீபாவழிக்கு மச்சமே இப்போது எடுப்பதில்லை.  முன்பு ஊரிலே ஆட்டு இறைச்சி பங்குகளாகக் கிடைக்கும். ஆனால் அடிக்கடி சாப்பிட பொருளாதாரம் இடம் கொடுக்காது. தற்போது ஆடு அடிப்பதே தடை என்று சொல்லப்படுகின்றது..!

வேள்விகள் கூட தடைபண்ணப்பட்டுள்ளது. புலால் உண்ணல் கூடாது என்று ஒரு சாரார் முழங்கி வருகின்றனர்.  இயற்கை சூழல் சமநிலையைப் பேண ஒரு வழிமுறையை அமைத்துள்ளது. மனித அறிவு, அதனை மாற்ற முனைகின்றது. விளைவு இயற்கைச்சமநிலையே பாதிக்கின்றது. அதன் பாதிப்பை உலகமே உணர முடிகின்றது..!

மனிதனே விலங்கு தான். ஆனால் அனுபவத்தாலும், விரும்பி கற்றதாலும், சூழலால் திணிக்கப்பட்டதாலும் ஏற்பட்ட அறிவு, மனித வாழ்வியலை மிகச்சிக்கலுக்குள் தள்ளியுள்ளது..! அவரவர் விருப்பப்படி பாதைகள் போகின்றன. சில நல்ல பாதைகளாகவும், மற்றவர்களுக்கு பாதிப்பை அளிக்காத பாதைகளாகவும் அமைகின்றன. அதேவேளை  மற்றப்பாதைகள் தவறானதாகவும், பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அமைகின்றன.

இதுவே மதங்களின் உருவாக்கங்களுக்கு அடிப்படை.  தற்போது உலகில் 4000இற்கு மேற்பட்ட மதங்கள் இருப்பதாகச் சொல்கின்றார்கள். ஆனால்  நான்கு மதங்களும், மதமில்லை என்று சொல்பவர்களையும் சேர்க்கும் போது உலகின் ஏறக்குறைய 90 சதவீத மக்களும் வந்துவிடுகின்றனர்..!

உலகில் பெரும்பாண்மையினர் மாமிசமே உண்கின்றார்கள். நானும் அந்த வகையை சேர்ந்த மனிதனே..! எனக்கும் மாமிசம் தேவை.

சாமத்தியவீட்டுக்கு அடுத்த நாள் கவுனாவத்தை வேள்விப் பங்கு ஒன்று வந்தது. சைவம் சாப்பிடவேண்டிய சூழல் வந்ததால் விட்டுவிட்டேன்.

கோரோனாவிற்கு முன்பு கோழி இறைச்சியும் அடிக்கடி சாப்பிடுவதுண்டு. தற்போது, அதுவும் குறைந்துவிட்டது.

எனது வீட்டில் என்னைத்தவிர ஒருவரும் ஆட்டு இறைச்சி சாப்பிடுவதில்லை..! எனது ஆசையை மனைவியிடம் சொன்னேன். அவர் சம்மதிக்க, இணுவிலிலுள்ள கடையில் ஆட்டு இறைச்சி வாங்கி, மனைவியின் கையால் சமைத்து, நான் மாத்திரமே சாப்பிட்டு அந்த ஆசையை நிறைவு செய்துகொண்டேன்.  ஆட்டு இறைச்சியும், கத்தரிக்காய் பால்கறியும் குத்தரிசிச் சோறும் மீண்டும் பழைய காலத்திற்குப் போனமாதிரியும், அதனால் புத்துணர்ச்சி ஏற்பட்டதாகவும் உணர்ந்தேன்.

 

ஆ.கெ.கோகிலன்

01-07-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!