தலைமையக முகாமைத்துவ குழு கூட்டம்

 


 

இன்று, காலை வேலைக்குப்போகும் போதே  எமது நிறுவனம் தொடர்பான பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டும். அதற்கு நீண்ட காலமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த  தலைமையக முகாமைத்துவ குழு கூட்டம் இன்று இணையவழியில் நடப்பதாக இருந்தது. நானும் சரியாக காலை 9.00இற்கே அலுவலகத்தில் நிற்கக்கூடிய வகையில் வந்தேன்.  கூட்டம் மதியத்திற்குப் பின்னர் என்பதால், என்ன என்ன விடயங்கள் எல்லாம் சேகரிக்கவேண்டுமோ அவற்றை எல்லாம் எடுத்து வைத்திருக்க வேண்டும்  என்ற  எண்ணத்துடன் வந்து, அதற்கான வேலைகளையும் செய்துமுடித்தேன். போனவாரமும் இதற்கான சில தயார்படுத்தல் வேலைகளைக் குழுக்கள் உதவியுடன் செய்தேன்.

வேலைப்பளுவால், போன வெள்ளிக்கிழமையே பல வேலைகளை முடிக்க முடியாமல் வைத்துவிட்டு வந்தேன். மூன்று நாட்களுக்குப் பிறகு, இன்று அவற்றையும் முடிக்க நினைத்தேன். அதற்கு இடையில் எனது நிறுவன விரிவுரையாளர்  ஒருவரின் தாயார்  மறைந்ததால் அவர்வீட்டுக்கும் சென்றுவர தீர்மானித்தேன்.

தீர்மானித்தபடி மரணவீட்டிற்குச் சென்றுவர, மேலும் பல வேலைகள் காத்திருந்தன.,! அவற்றைமுடித்து மணியைப் பார்க்க மதியம் 12.30 ஐ தாண்டியிருந்தது. நான் வழமையாக வீட்டில் இருந்து கொண்டுவரும் சாப்பாடு, மதியம் தாண்டினால் பழுதாகிவிடும்.  மனைவி, அதிகாலையில் எழுந்து தயார்படுத்துவதால், அதனை எறியவோ அல்லது  கொட்டவோ மனம்வருவதில்லை. அதிகாலை 3 அல்லது 4 மணிக்கு எழுந்து அனைத்து வேலைகளையும் செய்து எமக்கான உணவையும் தயாரிக்கும் அவருக்கு எந்தக்கைமாறு செய்யாவிட்டாலும், அதனை விரயப்படுத்தக்கூடாது என்பதில் மிகவுறுதியாகவே இருப்பேன்.

இன்றும் அவ்வாறே உணவு பழுதாக முன்னர் 12.40இற்கு மதியவுணவை எடுத்தேன். 1.00மணிக்கு கூட்டம் என்பதால், கணினியில் ஜூம் செயலிக்கான லிங்கை அழுத்திவிட்டு, கை, கால்களைக்கழுவிட்டு வந்தேன். மதிய  தாண்ட, நித்திரை வருவது போலிருப்பதால் தண்ணீரில் கழுவுவது எனது வழமை. இன்றும் அவ்வாறு செய்துவிட்டு, சரியாக 1.00மணிக்கு கணினிக்கு அருகில் அமர்ந்தேன். கூட்டம்  தொடர்பான எந்தத் தகவலும் வரவில்லை. ஜூம் செயலி வேலைசெய்யாததால், திரும்பத்திரும்ப அழுத்தினேன். சுற்றிக்கொண்டிருந்தது..! நேரம்  பட படவெனக் கூட, கூட்டம் இல்லையோ என்று இன்னோர் பணிப்பாளரிடம் கேட்டேன். அவர் “தொடங்கிவிட்டது..” என்றார். நான் எனது பிரச்சனையைச் சொல்லிவிட்டு, கணினியில் பிழைகள் வரும் வழிகள் எல்லாம் பார்த்தேன். ஒன்றும் பிடிபடவில்லை..!  இதேநேரம் எனது மோபைல் போனில் பார்க்கலாம் என்றால், அதுவும் மகள் பயன்படுத்தும்போது தனக்கு ஏற்றது போல் எல்லாம் மாற்றி வைத்திருந்தார். நேரம் போகின்றது. பட விடயங்கள் கதைக்க நினைத்து, கடைசியாக ஒன்றும் கதைக்க முடியாது  போகின்றதே என கவலைப்பட்டேன். உடனே நான் கதைக்காவிட்டாலும் பராவாயில்லை நிர்வாகம் மற்றும் நிதிக்கு பொறுப்பானவர்களை இணையக் கூட்டத்தில் கலந்துகொள்ளச்சொன்னேன்.  எனது கணினியும், போனும் கைவிரித்துவிட்டதே எனக்கவலைப்பட்டு, ஏதாவது ஒன்றையாவது சரிப்படுத்திக்கதைக்க முனைய முடியவில்லை. பின்னர் தகவல் தொழில்நுட்பப் போதனாசிரியரை அழைத்துப் பார்க்கச் சொன்னேன். அவராலும் பிரச்சனையை அறியமுடியவில்லை. ஆனால் மோபைல் போனில் ஒருவாறு இணைப்பை ஏற்படுத்தித் தந்தார். 45 நிமிடங்கள் கடந்துவிட்டன. இருந்தாலும், அதுவும்  தெளிவில்லாமல் பல பிரச்சனைகளைக் கொடுத்தது. சில சமயம் சத்தம் வரவில்லை. சில சமயம் எதை அமத்துவது என்றே புரியவில்லை.

இவ்வாறாக நேரம் கடந்தது. மணி 3.00 தாண்டியும் பிரச்சனை முடிவில்லை. திரும்பவும் அதே கணினி போதனாசிரியரை அழைத்து, எங்கு பிரச்சனை என அறியச் சொன்னேன். அவரும் திரும்ப முயன்றுவிட்டு, இங்கு பிரச்சனையில்லை. டெலிகோமில் தான் பிரச்சனை இருக்கு என்று சொல்லி அறிவிக்கச் சொன்னார். நானும் அறிவித்தேன். ஏறக்குறைய 3.30 மணியளவில் கூட்டம் நிறைவடைந்தது. நான் ஒன்றும் கதைக்க முடியவில்லை. ஓரிரு வார்த்தைகள், பணிப்பாளர் நாயகம் கேட்டதிற்கு இணங்க தெளிவற்ற நிலையில் சொன்னேன்.  அங்கு கதைக்கப்பட்டதும் ஒழுங்காகப் புரியவில்லை.

பின்னர் மாலை 4.30 தாண்டி டெலிகோமில் இருந்து ஒருவர் வந்தார்.

எல்லாவற்றையும் பார்த்தார். கணினியிலும் பிரச்சனையில்லை. டெலிகோமிலும் பிரச்சனையில்லை. ஆனால் IP Address இனை 198.168.1.1  என Browser இல் டைப்செய்து, User  Name மற்றும் Password என்பனவற்றைப் பார்த்தார். அது மாற்றப்பட்டிருந்தது  என்பதை எனக்குச் சொல்லியதுடன், புதிய User  Name மற்றும் Password என்பவற்றை டைப்செய்யச் சொன்னார். பின்னர் வேலை செய்தது. மாலை 4.45 ஆகிவிட்டது. இது யாருடைய பிழை என்றேன்.  தனக்குத் தெரியாது, இனிமேல் இப்படி வந்தால், இப்படிச் செய்யவும் என்று வழிமுறையைச் சொல்லி அந்த User  Name மற்றும் Password இனை எனக்கும் தந்தார்.

இவ்வளவிற்கு, நானும் ஒரு IT Senior Lecturer ஆக இருந்து தான் இந்தப்பதவிக்கு வந்தேன். ஆனால் என்ன பிழை என்பதை என்னால் உடனே கண்டுபிடிக்க முடியவில்லை.

இன்று, காலை வேலைசெய்த உலாவி எப்படி மதியம் வேலைசெய்யாமல் போனது..? யார் User  Name மற்றும் Passwordஜ மாற்றியது..? தானாகவும் இது நடைபெற  வாய்ப்பு உண்டு என்றால், எனது கணினி, வைரஸால் பீடிக்கப்பட்டுள்ளதா..?

எது எப்படியோ ஒரு விடயம் புரிந்தது. இன்று நிறைய கதைக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் கதைக்க வேண்டாம் என்று இயற்கையே தடுத்துவிட்டது. இனி என்ன செய்ய..? அடுத்த முறை பார்ப்போம்..? அல்லது வேறு வழிகளில் பார்ப்போம்.

 

ஆ.கெ.கோகிலன்

04-07-2023.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!