சுமை தாங்கி..!

 


இன்றைய விடுமுறை நாளிலும் செயற்படுத்தப் பல திட்டங்கள் போட்டு வைத்திருந்தேன். ஆனால் அவை ஒன்றையும் செய்ய முடியவில்லை..! இருந்தாலும் இந்நாளை எப்படியாவது பயனுறுதிமிக்க வகையில் பயன்படுத்த நினைத்தேன். அதனைச் செயற்படுத்த அம்மா வீட்டிற்கும், எனது நண்பரின் குடும்பம் வெளிநாட்டில் இருந்து வந்ததால், அவர்களைப் பார்க்கவும் சென்றேன்.

 கிட்டத்தட்ட ஆறு அல்லது ஏழு வருடங்களுக்குப் பின்னர் பார்க்கும் போது மாற்றங்கள் தெரிந்தன. குறிப்பாகப் பிள்ளைகள் வளர்ந்து இருந்தார்கள். இருந்தாலும் அவர்கள் தமிழ் பேசவும், புரியவும் கூடியதாக இருப்பது மிகவும் சந்தோசமாகவும், நாமும் அவர்களுடன் கதைக்கக்கூடியதாகவும் இருந்தது. அவர்கள் பிரெஞ்சு மொழியில் படிப்பதால், அவர்களால் நன்றாக அந்தமொழி பேசமுடியும். ஆனால் நமக்கு அது சுத்தமாகத் தெரியாது.

அந்த சமயத்தில், அங்கிருந்த பல நடுத்தரக் குடும்பத் தலைவிகளுடன் கதைக்க முடிந்தது. ஒருவர் தானும் அரச வேலைசெய்து குடும்பத்தைக்கவனிக்கின்றார். இன்னொருவர், கணவருக்குத் துணையாகத் தனது சேவையைச் செய்வதுடன், பிள்ளைகளையும்  பார்த்து, அவரது தொழிலையும் கவனிக்கின்றார். இன்னொரு பெண், தன்னந்தனியாக, கணவரின் தொடர்பே இல்லாமல், தனது ஆண்மகனை ஆங்கில மொழிவாயிலாக கற்பிக்க கடுமையாக உழைத்து, அதற்குப் பணம்கட்டி இப்போது, அவரை ஆங்கில மொழிவாயிலாக ஒரு பட்டம் படிக்கும் நிலைக்கு கூட்டிவந்துள்ளார்..!

தாயாகவும், தந்தையாகவும் தனியாக ஒரு பெண், ஒரு பிள்ளையை வளர்த்து எடுப்பது என்பது எவ்வளவு சவாலான விடயம் என்பது அனைத்துப்பெற்றோருக்கும் புரியும்.

இந்த மூன்று பெண்களும் ஒவ்வொரு விதத்தில் தமது பங்களிப்பை, அவர்களது குடும்பத்திற்கு கொடுத்து, குடும்பத்தின் கௌரவத்தைத் தாங்கும் சுமைதாங்கிகளாகப் பார்க்க சிறிது கடினமாக இருந்தாலும், அவர்களுக்கு இருக்கும் தாய்மையின் மகிமைக்கு யாரும் மதிப்பு வழங்க முடியாது. மூன்றாவதாகச் சொன்ன பெண்ணிற்கு, தாய்மையுடன், தந்தையியல்பையும் கூடக்கொண்டிருப்பதால் இன்னும் உயர்வாகப் பார்க்கத்தோன்றுகின்றது..!

ஒரு பெண், எந்தச் சூழலிலும், என்ன கஷ்டம் வந்தாலும் அதைத்தாங்கி, தாண்டிச் செல்லும் தைரியத்தை என்றும் வளர்க்க வேண்டும். எனது தாயாரும் இந்த வகையைச் சார்ந்தவரே..! எனது மனைவியும் இவ்வாறு செயற்படும் தைரியம் கொண்டவர் என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. எனது பிள்ளைகளும், எதனையும் எதிர்கொண்டு, முயலும் பெண்களாக இருக்கவேண்டும் என்பது எனது ஆசை.

 

ஆ.கெ.கோகிலன்

03-07-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!