37வது பட்டமளிப்பு விழா

 


சிலருக்கு இது கிடைக்கும் என்றும் இது கிடைக்காது என்றும் முதலிலேயே எழுதப்பட்டதோ தெரியவில்லை.

எனக்கு அப்படித் தோன்றுகின்றது. அருகில் இருக்கும் யாழ் பல்கலைக்கழகத்தில் பௌதீக விஞ்ஞானம் படிக்க வாய்ப்பு  வரமுதலே, எனது கனவு முயற்சியைத் தொலைத்து, இந்தியா சென்று, அகதி முகாமில் பல முயற்சிகள் செய்து இறுதியில் கணிதத்தில் பட்டம் கிடைத்தது.  அதுவும் தபால் மூலம் ஒருவரின் உதவியினால் பெற்றுக்கொண்டேன். இருந்தாலும் வரும்போது தற்காலிக பட்டச் சான்றிதழ்  (Provisional Certificate) ஒன்றை வைத்தே இங்கு வேலை தேடினேன்.  கல்வியலில் பட்டப்பின் டிப்ளோமாவைப் படிக்க கொழும்புக்கு அலைந்தேன்.  அதேபோல் கணினி விஞ்ஞானத்தில் பட்டப்பின்படிப்புப் படிக்கப்  பெரதேனியா சென்றேன். மேலும் சில தகவல் தொழில்நுட்பப் பாடங்கள் படிக்க கொழும்பு சென்றேன். கல்வி என்பது எனக்கு நீண்ட தூரப் பிரயாணங்களுடாகவும், கடல் கடந்து சென்றும் படிக்கவேண்டியும் இருந்ததால், அவற்றை வைத்து, வினைத்திறனாக வாழ வேண்டும் என்று உறுதிபூண்டேன்.

எனக்கு, அருகில் இருக்கும் யாழ் பல்கலைக்கழகத்தில் ஒரு சாதாரன சான்றிதழ் கற்கைநெறிகூடப் படிக்க இறைவன் வாய்ப்பை வழங்கவில்லை..! ஆனால் அங்கு கற்பிப்பவர்களில் பலரை எனக்குத் தெரியும்.  வவுனியா பல்கலைக்கழகத்தில் கற்பிப்பதற்கும் எனக்கு வாய்ப்பு வந்துள்ளது. அந்நேரம், வவுனியா பல்கலைக்கழகம் யாழ் பல்கலைக்கழகத்தின் கீழ் இருந்தது.

நான் தற்போது இருக்கும் நிலைக்கு வர, மறைமுகமாக உதவியவர் யாழ் பல்கலைக்கழகத்தின் ஒரு கல்வியாளர் தான்..!  ஆனால் அவரை நான் இதுவரை சந்தித்தது இல்லை. ஆனால் அது ஒரு விசேடமான என்றும் மறக்க முடியாத ஆச்சரியமான நிகழ்வாக மாறிவிட்டது என்பது மட்டும் உண்மை.

நான் பணிப்பாளராக வந்து ஏறக்குறைய 6 வருடங்கள் ஆகின்றது. அதற்கு இடையில் இரு துணைவேந்தர்கள் வந்தார்கள். ஆனால் ஒரே வேந்தர் தான் இன்றும் இருக்கின்றார். இரு துணைவேந்தர்கள் நடாத்திய இரு பட்டமளிப்பு விழாக்களில் மாத்திரம் கலந்து கொண்டுள்ளேன். ஒன்று கைலாசபதி அரங்கில் கொரோனாவிற்கு முதல் நடந்தது. இரண்டு, மருத்துவபீடத்திற்குப் பின்னாலுள்ள உள்ளகவிளையாட்டரங்கில் நடந்தது.

இந்த இரண்டு துணைவேந்தர்களுடனும் கதைக்கவும், புகைப்படம் எடுக்கவும் வாய்ப்பு அமைந்ததை இறைவனின் அருளாகவே பார்க்கின்றேன்.  ஒருவர் அயலூர்காரர். இன்னொருவர் தூரத்து உறவினர்.

இரண்டாவது துணைவேந்தரின் காலமும் முடிகின்றது. அவர் திரும்பவும் வரலாம். வராமலும் போகலாம். அதேபோல் எனது காலமும்  நெருங்குகின்றது. நான் நிரந்தரப் பணிப்பாளர் என்றாலும், இடமாற்றமும், இளைப்பாறலும்  எமக்கு வேண்டியதே.  சில விடயங்கள், பழகியதால் எனக்கும், சிலருக்கும் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் அந்த கஷ்டத்தைக்கடந்தால் நிம்மதியான நிறைவான ஒரு நல்வாழ்க்கை  கிடைக்கும் என்பது எனது நம்பிக்கை.

 

ஆ.கெ.கோகிலன்

19-07-2023.

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!