குன்றில் ஏற்பட்ட பதட்டம்..!

 


இன்று இரவு ஒரு வெளிநாட்டு அழைப்பு வந்தது. அது வழமையாக வரும் அழைப்பு அல்ல. கதைக்கும்போது “என்னை தெரிகின்றதா..?“ என போனை எடுத்தவர் கேட்டார். சிறு குழப்பம் இருக்கும் நிலையில், போனில் நாட்டின் பெயர் விழுந்ததால் கண்டுபிடித்துவிட்டேன். அவரும் சந்தோசப்பட்டார். ஏன் கதைப்பதில்லை எனக்கேட்டார்..? எல்லாவற்றிற்கும் நேரமே சிக்கலாக இருக்கின்றது என்று சொன்னேன். அவர் அதை ஏற்றுக்கொண்டாரோ இல்லையோ தெரியாது, உண்மையான காரணம் கடந்த சில வருடங்கள் எனக்கு யாருடனும் கதைக்கத் தோன்றவில்லை..! உலகே கஷ்டத்தில் இருக்கும்போது நமக்கு வரும் கஷ்டங்களை மற்றவர்களிடம் சொல்லி அவர்களையும் ஏன் கஷ்டப்படுத்த வேண்டும். அதனால் பல நெருங்கிய உறவுகளுடன் கூடக்கதைப்பதில்லை..!

இந்த நிலையில், இணைப்பைத் துண்டித்து, என்னுடைய வாட்சப் எண்ணை எடுத்து, பின்னர் அதனூடாக இணைப்பில் வந்தார் அந்த வயதில் அண்ணன்  போன்ற நண்பர்.

பல விடயங்களை கதைத்து மகிழ்ந்தோம். அதில் முக்கியமானது, நான் இந்தியா சென்று மதுரையிலுள்ள ஒரு அகதிமுகாமில் அவருடனும், மேலும் பல இளைஞர்களுடனும் இருந்த காலத்தில்,  ஒரு  நாள் ஆழமான குன்றில் நீந்தும்போது நடுவில் களைத்துத் தடுமாறினேன். எனக்கே பயமும் வந்துவிட்டது..! எனக்கு நீச்சல் ஓரளவிற்குத் தெரியும். அது நல்ல தண்ணீர் குன்று என்பதும், அதன் ஆழமும் தெரியாது என்பதாலும், அதில் பலர் இறந்துள்ளது பற்றியும் முதலே அறிந்துள்ளேன். இருந்தாலும் ஏதோ ஒரு வீம்பில் அதில் குதித்து கடக்க முற்பட, இவ்வாறான பதட்டம் ஏற்பட்டுவிட்டது..! கரையில் வேடிக்கைபார்த்தவர்கள் பயந்துவிட்டார்கள். நான் அவசர அவசரமாகக் கையை அடித்துத் தத்தளிப்பதை அவதானித்த எனது போன் நண்பர் நீச்சல் தெரிந்த ஒருவரிடம் கேட்டுள்ளார் “அவரை காப்பாற்றும் படி..”  அவரும் ”இப்போது போனால் இருவரும் போகவேண்டியது தான். கொஞ்சம் மயக்கம் போட்டால் தான் இருவரும் தப்ப முடியும்..!” என்றுள்ளார்.

இறைவன் புண்ணியத்தில்,  ஏறக்குறைய 40 அடிக்கு மேலான அகலமும், மிக அழமுமான அந்தக்குன்றை நீந்திக்கடந்து தப்பிவிட்டேன். நாங்கள் குளித்த நேரம் சரி மதியம் என்பதோடு, அந்தக்குன்றோடு ஒரு பெரிய மரமுள்ளது..! அதன் கீழ் ஒரு இறைவனின் சிலையுமுள்ளது. அங்கு  பலர் பொங்கல் செய்து படைத்ததற்கான தடையங்கள் இருக்கின்றன..! மதிய நேரம் அந்த இடத்திற்கு ஆட்கள் வருவதில்லை என்றும், முனியடிக்கும் என்றும் சிலர் சொல்வார்கள்..! நான் அந்த வயதில் இவற்றை நம்புவதில்லை. ஆனால் குன்றில் குதித்து, இடையில் நீந்தமுடியாமல் தவித்தபோது, ஏதோ ஒன்று இழுப்பதை உணர்ந்தேன். முன்பு செய்த புண்ணியமோ என்னவோ அந்த அபாயத்தில் இருந்து தப்பிவிட்டேன்.  அதன் பிறகு அப்படி ஒன்று நடந்ததை துண்டாக மறந்துவிட்டேன். எனது  வெளிநாட்டு நண்பர்  இன்று சொன்னபோது தான் பல விடயங்கள் ஞாபகத்திற்கு வந்தன.

மறதி என்பதை நான் இறைவனின் பரிசாகவே பார்ப்பது வழக்கம். இல்லை என்றால் என்னால் நிம்மதியாக ஒரு அடி கூட முன்வைக்க முடியாது. அவ்வளவு சிக்கல்கள் என் வாழ்க்கையில் வந்து சென்றன..! பல கஷ்டங்கள் வந்து இருந்தாலும், இறைவன் தந்த மறதியால் அவற்றில் இருந்து இலகுவாகக் கடந்துவிட்டேன். அவை எனக்குப் பாடங்களாகவும், நன்மைகளாகவும் மாறிவிட்டன..!

யார் அந்த மறதியைத் தந்தது..? கஷ்டத்தை யார் தந்தது..?  எல்லாம் பிரபஞ்சத்திற்கே வெளிச்சம். நோயும் தந்தார், மருந்தும் தந்தார் என்பது போலவே எல்லாம் வல்ல இறைவன் எனக்கு அளிக்கும் அருள்..!

 

ஆ.கெ.கோகிலன்

05-07-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!