பேப்பர் ராக்கெட்(Paper Rocket)

 



எனது வாழ்வில் நடந்த பல சம்பவங்கள் இந்தப்படத்தில் இருக்கின்றன..! மிக ஆச்சரியமான விடயம் என்னவென்றால் நான் சில படங்களை தேர்வு செய்து பார்க்கும்போது, அதனூடாக ஏதோ ஒர் செய்தியை இயற்கை உணர்த்துவதாகக் தோன்றுகின்றது. இது உண்மையில் நடக்கின்றதா..? அல்லது அப்படியான எண்ணத்தை இயற்கை  உருவாக்குகின்றதா..? என்பது தெரியவில்லை.  இத்திரைப்படம் மனதைப் பல முறை கலங்க வைத்துவிட்டது. இயக்குனர் தமிழக முதல்வரின் மருமகள்,  பல் முகம் கொண்ட உதயநிதியின் மனைவியான கிருத்திக்கா என்பவர் தான். சாதாரண இயக்குனர்களை விட தான் ஒரு வித்தியாசமான பார்வை கொண்டவர் என்பதை இந்தப்படத்தினூடாகக் காட்டியுள்ளார்.

பல நபர்களின் உளவியல் அடிப்படையிலான பிரச்சனைகளும், அதற்கு டொக்டர் சொன்ன அறிவுரையும், Group Session என்பதன் ஊடாக ஏற்படும் அறிமுகங்களும், அவர்களுக்கான தீர்வுகளும் எனப்படம் பிரச்சனைகளும், தீர்வுகளும் என்ற வடிவில் செல்வதால் எல்லோருக்கும் ரசிக்க முடிகின்றதா என்பது ஒரு கேள்விக்குறி தான். ஆனால் படத்தில் இருக்கும் பல உளவியல் பாடங்கள் எனக்கு வேண்டியதாக உணர்கின்றேன்.

மரணம் என்பது  பற்றி அதிகம் அலசப்பட்டது இந்தப்படத்தில் தான் என்பது எனது அபிப்பிராயம். ஒரு பிடிப்பு அல்லது பற்றுப் போதும் உயிரைப்பிடித்துக்கொண்டு வாழ என்ற உன்னத கருத்தையும் படத்தில் வைத்துள்ளார் இயக்குனர் கிருத்திக்கா. பெண் இயக்குனர் என்பதால் அவரின் பார்வையில் ஆண், பெண் சமம் என்ற ரீதியில் படத்திலுள்ள கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன..!

சாவு வண்டியில் போகும் சுற்றுலாவும், அதனூடாகத் தந்தையின் ஆசையை போக்கும் தனயனும், இறுதிப்பயணத்தை மேற்கொள்ளும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வயோதிபப்பெண்ணும், சின்னவயதுக்காதலியிடம் மன்னிப்புக்கேட்கச் செல்லும் மூளையில் கட்டி இருப்பதால் மரணத்தை எதிர்பார்க்கும் ஒரு காதலனும், கண்டிப்பான வளர்ப்பாலும், நட்புக்களையே வைக்கமுடியாத சூழலில் PhD வரை படித்து, உலக வாழ்க்கையே மாயம் என்பதை உணர்ந்து, அதில் இருந்து விலத்த மரணத்தை தேடும்  புத்தக அறிவுள்ள நபரும், நீச்சலில் சாதிக்க நினைத்து, விதியின் வலிமையால் நடக்க முடியாமல் தவிப்பதுடன், பாசத்திற்காக தாத்தா, பாட்டியை  நாடும்  இளம் பெண்ணும், சிறுவயதுப் பாலியல் துஷ்பிரயோகத்தால், கோபத்துடன் கொந்தளிக்கும் குமர்பெண்ணும்,  பணம் பணம் என்று ஓடிக்கடைசியில் ஒன்றும் கிடையாது என்ற உண்மையை உணர்ந்த நாயகனையும் சுற்றிக்கதை பின்னப்பட்டுள்ளது.

காளிதாஸ் ஜெயராம், தன்யா எஸ் ரவிச்சந்திரன், கருனாகரன், மற்றும் 96 படப்புகழ் கௌரி ஜி. கிசான் எனப்பலர்  நடித்துள்ளனர்.  எல்லாருடைய நடிப்பும் கலங்க வைக்கின்றன. படத்தின் ஒளிப்பதிவு, பின்னணி இசை போன்ற தொழில்நுட்ப விடயங்களும் ரசிக்க வைக்கின்றன.

வாழ்வின் நோக்கமே பிறருக்காக வாழ்வதே..! மகிழ்ச்சியாக இருப்பதே..!

உறவுகளை அன்புடன் கூட அழைத்துச்செல்வதே..!  பணத்தின் தேடலை ஒரு நிலையில், குறைத்து உறவுகளைத் தேடுவதே..! போன்ற பல நல்ல கருத்துக்களை இப்படம் விதைத்துள்ளது.

போற  போக்கில் நுளம்பு, கரப்பான்பூச்சி, மசுக்குட்டி, எலி, தேள், மட்டத்தேள், பூரான், பாம்பு, கோழி, ஆடு, மாடு, பன்றி, கடல்வாழ் உயிர்கள், தாவரங்கள் என எத்தனை  உயிர்களைக் கொலை செய்துவிட்டு, இயல்பாக உத்தமர்கள் போல் வாழ்வது,  எவ்வளவு வேடிக்கையானது..!

இந்தப்படத்தை ஒரு உளவியல் பாடமாக உசாத்துணைப்படுத்தலாம்..! அந்தப்பாடத்தை எடுத்த  கிருத்திக்காவிற்கு எமது பாராட்டைத் தெரிவிக்கலாம்.

 


ஆ.கெ.கோகிலன்

08-07-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!