சொதப்பல்..!

 

                                    Molded Case Circuit Breaker (MCCB)


அண்மையில் எமது தலைமையகத்திற்கு புதிதாக வந்த கட்டடத்துறைப் பேராசிரியர், நிறுவனத்தில் ஏற்படும் ஒவ்வொரு சிக்கல்களுக்கும் தீர்வைப் பெறக்கூடிய குழுக்களை எங்களுக்குள்ளே அமைத்தார்..! சில  ஆலோசனைத் தேவைகளுக்கு மட்டும் பல்கலைக்கழக  பேராசிரியர்களை அல்லது கலாநிதிகளை இணைத்துள்ளார்.

அந்தவகையில் பொறியியல் துறை தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வைப் பெறமுயற்சிக்கும் குழுவிற்கு தலைவராக என்னை நியமித்துவிட்டார். நான் சொன்னேன் ”பொறியியல் துறை தொடர்பான அறிவு என்னிடம் இல்லை என்பதையும்  பொறியல் துறையைச் சேர்ந்த நபரைப்போடச்சொல்லி..”  அவர் சொன்னார் 3 நிறுவனங்கள் மட்டும் பொறியியல் துறையை நடத்துகின்றீர்கள். அதில் ஒன்றை நீர் நிர்வாகிக்கின்றீர். அப்படியானால், உமக்கு அந்தத் தகுதி உண்டு.  நீர் தலைமைதாங்கி நடத்தலாம். அதனால்  பல நன்மைகளை உமது நிறுவனத்திற்கும் பெற்றுக்கொள்ள முடியும். உம்மால் இயன்றவரை முயன்று, ஒவ்வொரு விடயத்தையும் நடைமுறைப்படுத்துவதை  உறுதிப்படுத்த வேண்டும். அது உமது நிறுவனத்திற்கு மாத்திரமல்ல, நாட்டுக்கானதும், எமது மக்களுக்கானதுமான கடமை என்றார். அதன் பிறகு, அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, அவர் தந்த  பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.  அத்துடன் துணைப்பணிப்பாளர் நாயகமும் கூட உதவுவதாகச் சொன்னார். மற்றைய இரு நிறுவனப்பணிப்பாளர்களும் தங்களால் இயன்ற ஒத்துழைப்பை வழங்குவதாகச் சொன்னார்கள். எனது நிறுவனத்திலும் இது தொடர்பான ஒரு கூட்டத்தைக்கூட்டி சில முடிவுகளை முற்கூட்டியே எடுத்து வைத்திருந்தேன்.

இந்த சமயத்தில், இவ்வாறான தேவைகளை கையாள வேண்டுகோள் வைத்த பொறியியல் பழைய மற்றும் புதிய மாணவர்கள் அமைப்பின் கோரிக்கையும் ஒரு காரணம் என்பதையும் நான் சொல்லியாக  வேண்டும்..! மாணவர்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றார்கள். மாணவர் சக்தி, மகா சக்தி. இதுவரை அந்த சக்தியை நாம் பயன்படுத்தவில்லை.

அவர்களும் நாட்டினது நிலை உணர்ந்து, இலவசமாகப்படிப்பித்துத் தந்த, தமது நிறுவனத்திற்கு, தங்களால் இயன்ற உதவிகளைச் செய்யவேண்டும் என்ற உந்துதலால்  இப்படியான சேவைகளைச் செய்ய விரும்புகின்றார்கள். எமது பணிப்பாளர் நாயகமும் அதனை சரியான முறையில் வழிப்படுத்திப் பயன்படுத்த விரும்புகின்றார். அதற்கு நானும், எமது நிறுவன பொறியியல் துறையைச் சேர்ந்தவர்களும் எங்களால் இயன்ற உதவியைச் செய்யவேண்டும்.

இன்று அதற்கான முதலாவது கூட்டம், நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டு, அதற்குரிய ஏற்பாடுகள் செய்தாகிவிட்டன. நான் கூட  என்ன கதைக்க வேண்டும்.. என்ன கதைக்கக்கூடாது என்று ஒருவரையறை கொண்ட திட்டத்தைத் தயார்படுத்தி மொபைலில் வைத்திருந்தேன். மடிக்கணினியிலும் அதற்கான  தகவல்களைச் சேகரித்து ஒரு Folderஇல் வைத்திருந்தேன். வன்பிரதிகளாகவும் ஒரு கோவையில் வைத்திருந்தேன்.

இந்தச்சூழ்நிலையில் மின்சாரம் நின்றுவிட்டது.  அந்தப்பிரச்சனையைத் தீர்க்க முயற்சி செய்து பார்க்கும்போது அது ஒரு பெரிய செலவை ஏற்படுத்தும் விடயமாக மாறுகின்றது..!

அத்தியாவசியத் தேவைகருதி, அதைச் செய்ய முயற்சிக்க பலரின் உதவிகள் தேவைப்பட்டன. உடல் சரியில்லாமல் இருந்த எமது போதனாசிரியர் முதற்கொண்டு, எமது நிறுவனத்தில் படித்துமுடித்த ஒரு மாணவர் வரை உதவி தேவைப்பட்டது. பலரின் கடின முயற்சியால், மதியம் 12.30 மணியளவில் தான் மின்சாரம் வந்தது.

அதற்கு இடையில் நான் நடாத்தும் கூட்டம், ஏதோ மோபைல் போன் துணைகொண்டு பேருக்கு நடாத்தி முடிக்கப்பட்டது..! எமது நிறுவன எல்லா ஊழியர்களும் அவர்களது கணினியைப் பயன்படுத்த மின்சாரமும் இல்லை..! இணைய வசதியும் இல்லை..! அந்தச்சூழல், எனக்கும் மிகக்கடினமாக இருந்தது.

அத்துடன் இன்று  தகவல் தொழில்நுட்பத் துறை மாணவர்கள் தமது  பிரியாவிடை நிகழ்வையும் ஒழுங்குபடுத்தியிருந்தார்கள். காலை 11.30இற்கு தொடங்கத் திட்டமிட்டிருந்தார்கள். மின்சாரப் பிரச்சனையால் அவர்களது

நிகழ்வும் தாமதமாகிவிட்டது.

சோதனைக்குரிய நாள் என்பதை வீட்டில் இருந்து வெளிக்கிடும் போது ஒரு முக்கிய பொருளை வீட்டில் வைத்துவிட்டேன் என்பதை  உணர்ந்தபோதே வந்துவிட்டேன்.  மழை வருவது போல் வானிலை இருந்ததால், அதற்கான தயார்படுத்தலில் கவனம் சென்றதால் இவ்வாறு நடந்துவிட்டது..! ஆனால் மழையும் வரவில்லை..! திட்டமிட்ட ஒன்றும், திட்டமிட்டபடி நடாத்த முடியவில்லை..!

மின்சார இன்மை எவ்வளவு பிரச்சனைகளைத் தருகின்றது என எண்ணும்போது, நாம் எவ்வளவு தூரம் மனிதர் உருவாக்கிய தேவைகளில் சிக்குண்டுள்ளோம் என்பது புரிந்தது.  இதனை தவிர்த்தும் வாழ முடியாது. ஆனால் குறைதாவது வாழப்பழக வேண்டும் என்ற எண்ணத்துடன், எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் தாங்கப் பழகவேண்டும் என்ற  எனது வழமையான கோட்பாட்டையும் உறுதிப்படுத்திக்கொண்டேன்.

 

ஆ.கெ.கோகிலன்

11-07-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!