The Great Indian Kitchen
2021இல்
மலையாளத்தில் வெளிவந்த படத்தின் தமிழ் மீள் தயாரிப்பான இந்தப்படத்தை எதேட்சையாக
zee தொலைக்காட்சியில் சிறுவர்களுக்கான ச ரி க ம ப பாடல் நிகழ்ச்சியைப் பார்த்த பின்னர்
பார்த்தேன். முதலில் தொலைக்காட்சியை நிறுத்த முனைந்தேன். ஆனால் படத்தின் காட்சிகளைப்
பார்க்கும் போது, எமது வீட்டு சமயல் அறை போல் இருந்தது..! தொடர்ந்து பார்த்தேன், அப்போது
தான் புரிந்தது நாம் பெண்களை எவ்வளவு கேவலமான நிலையில் வைத்துள்ளோம் என்பதை..! இறைவன்
பெயரைச் சொல்லி, இறைவனே வெறுக்கும் அளவில் நீண்டகாலமாக பிழையான கோட்பாடுகளையும், கொள்கைகளையும்
பின்பற்றி வந்ததுடன், அது தான் சரி என்பதை நிறுவுவதற்கு எவ்வளவு காலம் மூளைச்சலவை நடந்தது
என்பதை எண்ணும் போது எமது முன்னோர்கள் மேல் அனுதாபமும், அதேவேளை இவ்வாறான பிழையான கோட்பாடுகளை
விதைத்த நபர்கள் மேல் கடும்கோபம் வருவதையும் தடுக்க முடியவில்லை.
கலாசாரங்களைப் பேணுவதாகக் கருதப்படும் ஒரு குடும்பத்தில்
திருமணம் முடித்துச் செல்லும் ஒரு பெண், அங்கு
ஒரு சமையல்காரியாகவும், வேலைக்காரியாகவும், படுக்கையில் விபச்சாரியாகவும், சுகயீனம்
ஏற்பட்ட அந்தக்காலங்களில் வேண்டத்தகாத, தீட்டுப்பிடித்தவளாகவும் கருதும் ஆண்கள் இருக்கும்
குடும்பத்தில், அவளைப் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு நபர் கூட கிடைக்கவில்லை..! மாமியாரும்,
படித்திருந்தும், அடிமை சாசனம் எழுதி, குடும்பத்தைத் தாங்கும் சுமைதாங்கியாகவே வாழப்பழக்கப்படுத்தப்பட்டுள்ளாள்..!
அதேபோல் அந்த வீட்டு ஆண்களுக்கு பல் தீட்டும் பிறஷ்ஷில் பசையே போடத்தெரியாத பேக்குஞ்சுகளாக
இருப்பது கடுப்பைத்தூண்டுகின்றது.
குசினியில் பிளம்பரின் வேலை இருப்பதைத் தெரிந்தும் அதை கண்டுக்காமல்
மனைவியை ஒரு கழிவுப்பண்டம்போல் பாவிப்பது சகிக்க முடியவில்லை. எனது வீட்டில், அப்படியான வேலைகளைக் கண்டால், நானே செய்துவிடுவேன்.
சமைப்பவர்கள் சுத்தமாக இருக்க வேண்டும். அதற்காக நாமே சுற்றுப்புறங்களைச் சுத்தமாக
வைத்திருக்க வேண்டும். மாறாக, நாங்கள், துப்புவதும், கழிவுகளைக்கண்ட இடத்தில் போடுவதும்
பெண்களுக்கு எவ்வளவு துன்பம்..!
ஒரு கட்டத்தில், அந்தப்பெண்ணை பலவிதங்களில் காயப்படுத்திய கணவன்,
ரீ கேட்கும் காட்சியில், கழிவுத்தண்ணீரைக்கொடுப்பதும், அவனும், அவனுடைய தந்தையும் கோபமாகக்
குசினிக்குள் வரும்போது, கழிவு வாளித்தண்ணீரை அவர்கள் மேல் ஊற்றிவிட்டு, புதுமைப்பெண்
போல் வீட்டைவிட்டு வெளியேறுவது, சிறப்பு..! பாரதி கண்ட புதுமைப் பெண்..!
அதேநேரம் கணவனிடம் பணிந்துபோகச் சொல்லும் குடும்பமும், திமிரில்
இன்னோர் பெண்ணை மணந்து, திரும்ப வதைக்க தயாராகும் கணவனும், இவற்றில் இருந்து விடுதலைபெற்று,
தான் நினைத்தது போல் நடன ஆசிரியர் பதவியைப்பெற்று, தன்னுடைய காலில் நிற்கும்பெண்ணாக
நாயகியைக் காட்டியிருப்பது மகிழ்ச்சி.
குடும்பம் என்பது கோயில் என்றால் அங்கே உள்ளவர்கள் தெய்வங்கள்
போல் இருக்க வேண்டும். மாறாக விலங்குகள் போல் இருந்தால் குடும்பம் என்பது காடாகும்..!
அங்குள்ளவர்கள்
வேட்டையாடப் படவேண்டியவர்கள்.
பல நடிகர்கள் இருந்தும் ஜஸ்வரியா ராஜேஷின் நடிப்பு மிக யதார்த்தமாகவும்,
ரசிக்கும்படியும் இருந்தது. ஏனைய தொழில்நுட்பங்களும் காட்சிகளுக்கு பலம் சேர்த்தன.
ஆர்.கண்ணனின் இயக்கம் தரமாகவும், எமது மக்களுக்கு தேவையான
கருத்தை, இந்தப்படம் கடத்துவதால் இயக்குனரைப் பாராட்டலாம்.
ஆ.கெ.கோகிலன்
09-07-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக