மாணவர் மனம்..?

 

 


எனது நிறுவனத்தில் நிரந்தர ஊழியர்கள் ஏறக்குறைய 40 பேர் வேலைசெய்கின்றார்கள். இதில் பெரும்பாண்மையோர் விரிவுரையாளர்கள் தான். அடுத்து, போதனாசிரியர்கள். அடுத்து பயிற்சிப் பயிலுனர்கள். அடுத்து அலுவலக உதவி ஊழியர்கள், அதே அளவில் தான் எழுதுவினைஞர்கள் வகையைச்  சார்ந்த ஊழியர்கள். இதைத்தவிர வருகைதரு விரிவுரையாளர்கள் என்ற வகையிலும் ஏறக்குறைய 50 பேர்கள் வருவார்கள்.  அலுவலகப் பணியாளர்கள் மிகக்குறைவாக இருப்பதால் வேலைப்பளு என்பது எப்போதும் குறையாமல் தொடர்ந்து இருக்கும். பல முறை தலைமையகத்திற்கு தெரிவித்தும், அரசியல் தலையீடுகளும், சுயநல எண்ணங்களும், பொருளாதாரச் சூழல்களும் எம்மைச் சோதிப்பதாகவே அமைகின்றன.

புதுமுக மாணவ ஆட்சேர்ப்பு, தேர்வுப்பரீட்சை,  இறுதிப்பரீட்சை மற்றும் பட்டமளிப்பு விழாவிற்கான பதிவுகள் என அலுவலகம் போனால் நிமிர முடியாது. போதாததற்கு, பொருளாதாரச் சூழலால் எமது ஊழியர்கள் முதற்கொண்டு, பல நூற்றுக்கணக்கான மாணவர்கள்  வரை வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார்கள். அந்த மாணவர்களில் பலர் இன்னும் பட்டமளிப்பில் கலந்துகொள்ளவில்லை. பணத்தேவையால் Transcript மற்றும் Provisional Certificate  என்பவற்றுடன் வேலைகளுக்காக வெளிநாடுகளில் இருக்கின்றனர். அவர்களுக்கு பட்டமளிப்பில் கலந்துகொள்ள ஆசை இருக்கின்றது. ஆனால் அதற்கான விண்ணப்பங்களை அவர்களே சமர்ப்பிக்க வேண்டும்.  ஆனால் கொரோனா, நாட்டுப்பொருளாதாரம், கால விரயம், உழைப்பு விரயம் என்பவற்றைக் கவனத்தில் எடுத்து,  தூர இடங்களில் இருக்கும் மாணவர்களுக்கு, நவீன தொடர்பாடல் வசதிகள் மூலம் அவர்களின் ஆசைகளை நிறைவேற்ற விரும்பினேன். எமது நிறுவன ஆளணிப்பற்றாக்குறையில் இது மேலும் சிரமத்தைத் தரும் என்பதால் நானே நாள் முழுவதும் அவர்களது கோரிக்கைகளை நிறைவு செய்ய இயன்றவரை முயன்றேன். எமது எல்லா நிலை ஊழியர்களும் அவர்களால் இயன்றளவு முயற்ச்சிகளை மேற்கொண்டு தமது சேவைகளைச் செய்கின்றார்கள். இவற்றைத் தாண்டி ஆறுமாதங்களுக்கு மட்டும் மிகச்சொற்ப பணத்துடன் பயிற்சி ஊழியர்களாக (Practical Trainees) பணிசெய்கின்றார்கள். அனைவரும் எமது சூழலை கருத்திற்கொண்டு வேலைசெய்கின்றார்கள்.

இன்று வேலைப்பளுவால் மதிய உணவை எடுப்பதற்காக 3 மணியளவில் சிற்றூண்டிச்சாலையிலுள்ள உணவு அருந்தும் இடத்திற்குச் சென்றுள்ளார்கள்.

எமது நிறுவனத்தில் படித்த இரு மாணவர்கள், பட்டமளிப்பு விண்ணப்பதைப் போடுவதற்காக வந்துவிட்டு, எமது ஊழியர்கள் சிற்றூண்டிச்சாலையில் நேரத்தை வீணடிக்கின்றார்கள் என என்னிடம் முறைப்பாடு செய்தார்கள். நான் அவர்களது நிலைமையைச் சொல்லி,  அனுப்பிவைத்தேன். மாணவர்களுக்கு எம்மால் இயன்ற சேவையை வழங்குவதற்குப் பயிற்சிப் பயிலுனர்களைப் பயன்படுத்தும்போது, இதுபுரியாமல், பயிலுனர்கள் தமது சேவையைத் தாமே இடைநிறுத்தும் அளவுக்கு கொண்டுசெல்கின்றார்கள் எமது மாணவர்கள்..!

பெற்றோர்கள் கஷ்டங்களை மறைத்துப் பிள்ளைகளை வளர்க்கக் கூடாது.  அவ்வாறு வளரும் பிள்ளைகளுக்கு மற்றவர்களது கஷ்டங்களை புரிந்துகொள்வது கடினம். அதேபோல் ஒவ்வொரு சந்தர்பங்களிலும் எமது சூழ்நிலைகளைத் தெரியப்படுத்தி வாழ்வது என்பது உண்மையில் கவலைக்குரியது. அவர்களாகச் சூழ்நிலைகளை உணர்ந்துகொள்ள வேண்டும். அறிவு இருந்தும், அதிகமானோர், அறியாதவர் போல் இருப்பது அல்லது நடிப்பது தான், என்னைப் பொறுத்தவரை களவின் முதல்படி..!  அதுமாத்திரமல்ல, தற்கால வணிக யுக்தியும் கூட..!

 

ஆ.கெ.கோகிலன்

14-07-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!