ஆடிப்பிறப்பு..!

 


 

ஆனி போய் ஆடி பிறந்தவுடன் பல நிகழ்வுகளுடன் மகிழ்வுகளும் வந்து சென்றன..! இலங்கையில் வழமையாக ஆடிப்பிறப்பிற்கு கூழ் காய்ச்சுவது வழக்கம். யாழ் சமூகம்  அதனை நீண்டகாலமாகச் செய்து வருகின்றது. நான்  இந்தியாவில் இருந்த காலத்திலோ அல்லது யாழ்ப்பாண மாவட்டத்தை விட்டு வெளியே இருந்த காலத்திலோ  ஆடிக்கூழ் கிடைப்பது குறைவு..! குடிப்பதும் குறைவு..! ஆனால் யாழ்ப்பாணம் வந்தபின்னர் வருடத்தில் ஒரு முறையாவது ஆடிக்கூழ் குடிக்க முடிகின்றது. இந்தவருடம் அதிஷ்டம் அடித்ததைப்போல் நான்கு விதமான ஆடிக்கூழைக் குடிக்க முடிந்தது..!

ஒன்று எமது நிறுவனத்தில் நலன்புரிச்சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கூழ்..! அதுவும்,  முன்பு ஒருமுறையும் பின்பற்றாத வகையில், பணிப்பாளர் அறையிலுள்ள இறைவன்களுக்குப் படைத்து, தேவாரங்கள் படி எல்லோருக்கும் நன்மை கிடைக்கக்கூடிய காலங்களாக, இனிவருவன அமையவேண்டும் என்று பிரார்த்தித்த பின்னர், எல்லோருமாகச் சேர்ந்து கூழைக் குடித்தோம். சிலர் தத்தமது  சூழ்நிலைகளால் வரமுடியாமல் போயிருக்கலாம். ஆனால் அன்று ஆங்கிலம் அல்லாத போட்டிப்பரீட்சை விடைத்தாள்கள் திருத்த வேண்டிய சூழல் இருந்ததாலும், பாதீடு 2024 இனை முடிக்கவேண்டிய சூழல் இருந்ததாலும், மாகாண கட்டடத்திணைக்களத்தின் உதவியுடன் எமது நிறுவன கற்றல் கட்டடத்தில் திருத்தவேலைகளுக்கான ஏற்பாட்டினைச் செய்யவேண்டிய தேவை இருந்ததாலும் பல ஊழியர்கள் நிறுவனத்திற்கு, வந்திருந்தார்கள்..! வழமையான கற்றல் நடவடிக்கை உள்ள காலம் என்றால் இன்னும் அதிகமானோர் வந்திருப்பார்கள். இருந்தாலும் பராவாயில்லை. நான் கூட, வருத்தம் இருந்தாலும் பனடோலைப் போட்டுக்கொண்டு சென்று அவற்றில் எல்லாம் பங்குபற்றினேன்.

இவ்வாறாக எமது நிறுவன நலன்புரிச்சங்கக்கூழ் குடித்தபிறகு, மதியம் தாண்டிய நேரம் எமது நிறுவன பெண் விரிவுரையாளர் ஒருவர் கூழ் கொண்டுவந்திருந்தார். அதனையும் ரசித்துக்குடித்து, அவருக்கும் நன்றியை பகிர்ந்தேன். அலுவலகம் முடித்து வீடு செல்ல, மனைவி மற்றும் பிள்ளைகளும் சேர்ந்து, கொஞ்சம் கார சாரமாக வரக்கூடிய வகையில் கூழ் தயாரித்து இருந்தார்கள். எனது  வீட்டு CCTV  கமெராக்கள் சில வாரங்களாக வேலைசெய்யவில்லை.  இந்த நிலையில், எனது  நெருங்கிய உறவினர் அவரது பிள்ளைகளுடன்,  நீண்ட காலத்திற்குப் பின்னர் வீட்டிற்கு வந்துள்ளார்.  போட்டிப்பரீட்சை வேலைகளால் அவர்களைப் பார்க்க முடியவில்லை. எமது கமெராக்களும் அவர்களைக் காண்பிக்கவோ அல்லது காட்சிகளைக் கைப்பற்றவோ இல்லை..! அதன்பிறகு தான் அவை பழுதாகிவிட்டன என்பதைக் கண்டுகொண்டேன். எனவே அதனைத் திருத்த ஏற்பாடு செய்து இருந்தேன். மாலை வீட்டுக்கூழுடன் நானிருக்க,  கமெரா திருத்தும் எனது மாணவரும் வந்து, கமெராக்களைத் திருத்தி, என்கூட வீட்டுக்கூழையும் உண்டு,  என்னை மகிழ்வித்தார்.

அம்மா வீட்டில், மறுநாளும் எனக்காகக் கூழ் தயாராக இருந்தது..! அது அவரது கையால் சமைத்து, நான் உண்பதற்காக குளிர்சாதனப்பெட்டியில்  வைத்து அடுத்த நாள்,  எனக்கு காய்ச்சல்..  வேண்டாம்.. என்றாலும் இல்லை குடிக்கவேண்டும் என்று, வற்புறுத்தி அந்தக்கூழைக் குடிக்க வைத்தார். அம்மாவின் சாப்பாடு எப்பவும்  பிள்ளைக்கு முதல்தரம் தான்.

நான்கு விதக்கூழ்களுடன் கடந்த இருநாட்களும் ஓடின..! காய்ச்சலால் மூக்காலும் நீர் ஓடியது..!

 

ஆ.கெ.கோகிலன்

19-07-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!