2023 அம்மன் திருவிழா..!

 



பிரபஞ்சம் பல விநோதமான விடயங்களை நடாத்திச் செல்கின்றது.  அது என்ன..? எப்படி..? எவ்வாறு..? என்பதை நாம் புரிந்துகொள்வது கடினம். சில சமயம் சிலருக்குப் புரியலாம். அதற்கும் அந்த இயற்கையின் அருள் வேண்டும்.

 

நான் வசிக்கும் ஊரில் மகாமாரி அம்மன் என்ற ஒரு மிகவும் சக்திவாய்ந்த அம்மன் கோவில் உண்டு. எனது வீடு கூட அந்தக்கோவிலின் அலங்கார வளைவினுள் பார்க்கும் போது, தெரியும் வகையிலே அமைந்துள்ளது. இதற்கும் காரணம் இயற்கை தான். வேணும் என்றால் அதனை வாஸ்த்து சாத்திரம் மூலம் வந்தது எனலாம். தானாகவே எல்லாம் அமைந்தது. அதில் எனக்கு சந்தோசத்தைக் கொடுத்த நிகழ்வுகளும் உண்டு. கவலையைக் கொடுத்த சம்பவங்களும் உண்டு.


இந்தக்கோவிலின் திருவிழா கொடியேற்றத்துடன் 24-02-2023 தொடங்கி, 07-03-2023 இன்று பூங்காவனத்துடன் இனிதே நிறைவடைந்துள்ளது.  அதற்கு ஒத்துழைத்த அனைத்து சக்திகளுக்கும் நாம் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்.  இம்முறை இந்த ஊரில் நிறைய மரணங்கள்  நடந்தன. இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி பூஜைகள் வெற்றிகரமாக நடந்துள்ளன. அது மாத்திரமன்றி, சில சிறப்பான நிகழ்வுகளும் நடந்தன. குறிப்பாக, தீர்த்தத்திருவிழா நாளில், கொடியிறக்கத்தின் பின்னர், குருவின் ஆசிகள் மற்றும் அவரது உரை என்பன போன்ற வழமையான நிகழ்வுகளுடன், பெரிய அலங்கார மேடை போடப்பட்டு, அதில் பிரபலமான  மேளக்கச்சேரி மற்றும் இன்னிசைக்கச்சேரி என்பன பக்த அடியார்களைப் பரவசப்படுத்தின. அதுமாத்திரமன்றி என்னைப்போன்ற நபர்களையும் கவர்ந்தன. 

குறைகள் இல்லாத நிகழ்வுகளே இல்லை என்றாலும் இங்கு அவை மிகக்குறைவாக இருந்தது அம்மனின் அருள். நான் இந்தக்கோவிலுடன் அவ்வளவு நெருக்கமான தொடர்புகளை கொண்டிருக்கவில்லை என்றாலும்,  என்னால் இயன்றளவு சில திருவிழாக்களுக்கு செல்லும் வாய்ப்பை இறைவன் தந்தார்.  நானும் பிரசாதங்களை நாடிச்செல்லும் குழந்தைபோல சென்று வந்தேன். அது எனக்கு திருப்தியைக் கொடுத்தது. சப்பரம் அன்று வெடிகளை (அவுட்டு வானம்) நான்கு பக்கங்களிலும் கொளுத்தி சந்தோசப்படுத்தினார்கள். அதுமாத்திரமன்றி என்னைப்போன்ற சில மக்களை பயமுறுத்தினார்கள். சனங்கள் நெருங்கிவாழும் இந்தப்பிரதேசத்தில் வெடிவிபத்துக்கள் ஏற்பட வாய்ப்புண்டு. நல்லவேளை இறைவன் அருளால் அவையெல்லாம் நன்மையாகவே முடிந்தன.  

இம்முறை சுவாமி காவும் வாய்ப்பையும் நான் எனது கால் வருத்தம் காரணமாக ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தாலும் தேரை இருப்பிடத்திற்கு கொண்டு செல்ல  மற்றவர்களுடன் சேர்ந்து, நொண்டி நொண்டி உதவினேன். முன்புபோல் சுவாமி காவவும், தேர் இழுக்கவும் ஆசையிருந்தாலும்  அதனைத் தவிர்த்தேன்.  இம்முறை போதிய நபர்களை அம்மன், அயல் ஊர்களில் இருந்தும், பிறநாடுகளில் இருந்தும் வரவைத்தது சிறப்பு.  வெளிநாடுகளில் இருந்து வந்த உறவுகளால் ஊரே மகிழ்ச்சியில் களைகட்டியது. நாட்டின் பொருளாதார இறுக்கச்சூழலிலும் சிறப்பாக நிகழ்வுகளை முன்னெடுக்க அவர்கள் பேருதவி புரிந்தார்கள்.

நேற்றைய நிகழ்வுகளால் ஏற்பட்ட களைப்பால், இன்று மாலை நடந்த புதுமையான விளக்குகள் நகர்ந்து குவியும் பூங்காவன விழாவில் கலந்துகொள்ளவில்லை என்றாலும் மனைவி கலந்துகொண்டார். அத்துடன் பிரசாதம் என்னைத்தேடி படுத்தபாய்க்கே வந்துவிட்டது..! அதற்கு மனைவிக்கும், அம்மனுக்கும் நன்றி. கடந்த 3 வருடங்களாக கொரோனா தாக்கத்தால் பல புதிய அறிவுகளை இணைய ஊடகங்கள் வாயிலாக அறியமுடிந்தது. அதில் பிராமணர்களின் வரலாறு, வாழ்வியல் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வை ஊக்குவித்தல் போன்ற செயற்பாடுகள் எனக்கு மனவெறுப்பை ஏற்படுத்தின. தற்போது கோவில்களில் பூஜை செய்யும் அந்தணர்கள் இதனை அறிந்துள்ளார்களா என்பதே எனக்குத் தெரியாது. இருந்தாலும் நாம் அடிமையாகாமலும், ஏமாறாமலும் இருக்க வேண்டும் என்ற கொள்கை வலுவடைந்தே வருகின்றது. நான் லீவு போட்டுக்கோவிலுக்குப் போவதைவிட, வேலைக்குப்போவதையே தற்போது விரும்புகின்றேன். கடமையே இறைவன் என்ற கொள்கையில் இப்போது இருக்கின்றேன். ஓய்வு பெற்றபின்னர், இறைவனின் ஆசியிருந்தால் என்னால் முடிந்ததைச் செய்ய முனைவேன்.

எல்லோரும் இப்படியிருக்கவேண்டிய அவசியம் கிடையாது. எனது ஊழியர்களில் பலர் கோவிலுக்காக லீவு எடுப்பார்கள். நான் தவிர்க்க சொல்வேன். ஆனால் அவர்கள் அதன் முக்கியத்தைச் சொல்வார்கள். அதனால் நானும் அவர்களுக்கு அனுமதி வழங்குவேன்.

அண்மைக்காலமாக, நான் சொல்லும் கருத்துக்களும், கொள்கைகளும் பலருக்கு பிடிப்பதில்லை. அதனால் முரண்பாடுகளும், மனச்சங்கடங்களும் வருவதுண்டு. கோவில் சூழலிலும் அவ்வாறு நடந்திருக்கலாம். எனது செயற்பாடுகள் சிலரைக்காயப்படுத்தியிருக்கலாம். அல்லது தனித்து, தெரியலாம்.  இவ்வாறு என்னை மாற்றியதும் இறைவன் தான். எனவே என்மேல் கோவிக்காமல்,  அவர்மேல் கோவியுங்கள். சிலவேளை நான் நடப்பதும் சரிபோல் தெரியலாம். எனக்கு அப்படித்தான் தெரிகின்றது. எனவே தான் அப்படி என்னால் நடக்க முடிகின்றது.

இறுதியாக இந்த 12 நாட்களும் மிகநிறைவாகக் கடந்ததற்கு அம்மனின் அருள் தான் காரணம்.  கொரோனா காலத்திலும் அவ்வாறே நடந்தது.

என்ன சூழல் வந்தாலும், அம்மனின் அருள் அனைத்தையும் சாதகமாக்கி, மக்களுக்கு அருளை வழங்குவதற்கு, அந்த அம்மனுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள்.

 மகாமாரித்தாயே நீ அற்புதத்தாய்..!”



 

ஆ.கெ.கோகிலன்

07-03-2023.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!