நீல பொருளாதாரக் கொள்கை (Blue Economic concept)
எமது நாடு தற்போது பொருளாதாரத்தில் பாரிய நெருக்கடியைச் சந்தித்துவருகின்றது.
இந்நிலை இலங்கைக்கு மட்டும் ஏற்பட்ட ஒரு நிலை கிடையாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள
வேண்டும். உலகிலுள்ள பல நாடுகள் இந்தச்சிக்கலில் மாட்டியுள்ளது வெட்டவெளிச்சம். இருந்தாலும்
அந்தந்த நாடுகளின் பொருளாதார நிலை, வேறு பல காரணிகளால் ஓரளவிற்கு தாக்குப்பிடிக்கின்றது.
ஆனால் இலங்கையால் அவ்வாறான ஒரு நிலையை அடையமுடியாமைக்குப் பல காரணங்கள் உண்டு. இனப்பிரச்சனை
தொடர்பான சரியான நிலைப்பாட்டை இன்னும் எடுக்க முடியவில்லை. நாட்டைச் சரியான முறையில்
வழிநடத்த முடியவில்லை.
உண்மையில் உள்நாட்டு யுத்தம், மூளைசாலிகள் வெளியேற்றம், கொரோனா,
உக்ரேன்-ரஷ்யா போரும், அவற்றோடு தொடர்புடைய புவியரசியல், இனவழிப்பு எனப்பல காரணங்களை, நாடு இந்த நிலையை அடைந்ததற்கு கூறலாம்.
இனி எல்லோரும், கடந்த விடயங்களையும், நடந்ததையும் கதைப்பதைவிட
நாட்டுக்கு என்ன நல்லது செய்யலாம் எனச்சிந்திக்க வேண்டும்.
ஒவ்வொரு துறைகளும் தனித்தனியே போதிய கவனமெடுத்து முன்னேற்றப்படவேண்டும். அந்தவகையில் கடல் வளமும் கருத்தில் எடுக்கப்படவேண்டும். எமது நாடு கடலுக்கு நடுவே இருப்பது பல அனுகூலங்களை நமக்கு கொடுக்கும். அதனை நாம் முற்றாகப் பயன்படுத்த வேண்டும்.
அண்மையில்
நடந்த ஒரு ஆய்வில் கடல்வளங்களில் பயன்படுத்தக்கூடிய 40 வீதத்தில் நாம் பயன்படுத்துவது ஏறக்குறைய 20 வீதமாகும். இன்னும்
20 வீதத்தையும் பயன்படுத்தினால் பொருளாதாரத்தில் ஏற்றத்தை அடைய முடியும். கடல் வளங்கள் தொடர்பான பொருளாதாரங்கள் பற்றிய துறையை
நீலப் பொருளாதாரத் துறை எனலாம். அவற்றோடு தொடர்புடைய கொள்கைகளையும், சட்டங்களையும்,
விதிகளையும், தகவல்களையும் சேர்த்து நீலப்
பொருளாதாரக் கொள்கை எனலாம். நாம் அனைவரும் நீலப்பொருளாதாரம் பற்றிய அறிவையும், அதன்
மூலம் பெறக்கூடிய பலன்கள், தொழில்வாய்ப்புக்கள் பற்றியும் தெரிய வேண்டும். எல்லாவற்றிற்கும்
மேலாக கடல் வளத்தின் சுகாதாரத்தைப் (The health of ocean ecosystem) பேணவேண்டும்.
ஆ.கெ.கோகிலன்
31-03-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக