தடைதாண்டும் பரீட்சை

 


2020களின் ஆரம்பத்தில் தடைதாண்டும் பரீட்சை ஒன்றை வைப்பதற்கு எமது தலைமை நிறுவனம் தீர்மானித்தது. அதற்காக சில செயலமர்வுகளை நடாத்த முனைந்தது. அந்த சமயத்தில் எனக்கு ஏற்பட்ட நரம்புப் பிரச்சனையால் அதில் கலந்துகொள்ள முடியவில்லை. பின்னர் சில மாதங்களில் கொரோனாத் தாக்கம் இலங்கையில் அதிகரிக்க, அதைத்தொடர்ந்த சூழலை நானும் ஏற்றுக்கொண்டேன். அதனை இறைவன் எனக்கு ஏற்படுத்தித்தந்த இடைவெளியாகவே பார்க்கின்றேன்.

இந்தநிலையில் மீண்டும் அந்தப்பரீட்சையை நடாத்த மேலிடம் முடிவு செய்து, அதற்கான செயலமர்வுகளையும் மீண்டும் நடாத்தியது. என்னால் இந்தமுறையும் போக முடியவில்லை. காரணம், அவர்கள் முழுக்க சிங்கள மொழிமூலவே அதனைச் செய்வார்கள். அங்குபோவதைவிட இங்கு இருந்து படிப்போம் எனநினைத்து, சுருக்கமான தாபனபக்கோவையினையும், நிதி ஒழுங்குவிதிகளையும் தயாரிக்க வெளிக்கிட்டேன். அதற்குள் பரீட்சையை அறிவித்துவிட்டார்கள். நான் நினைத்ததை முடிக்க முன்னர் பரீட்சைவந்துவிட்டது. இருப்பதை வைத்துக்கொண்டு, அங்கு சென்றவர்களின் சில குறிப்புக்களையும் வாங்கிக்கொண்டு, இயன்றவரை முயற்சித்து அந்தப் பரீட்சைகளை நிறைவாக எழுதிவிட்டு, இன்று காலையே வீடுவந்தேன். 

இன்றும் அலுவலகத்தில் ஒரு அவசர வேலை இருந்ததாலும், எனது உத்தியோகத்தர் ஒருவர் சத்திரசிகிச்சை மேற்கொண்டதாலையும், மகளின் ஜிற் (GIT – General Information Technology) பரீட்சை, நான்கு அணிகளுக்கு  (Batches) ஒன்றாக நடந்ததாலேயும், யாழ் செல்லவேண்டிவந்தது. அந்த அலுவல்கள் முடித்துவர மதியம் தாண்டியது. மதியவுணவை எடுத்த பின்னர்,  நேற்றைய இரவுத்தூக்கத்தைத் தொடர்ந்தேன்.

என்ன ஆச்சரியம்,  ஏதோவொன்று, கால்கள், நெஞ்சுப்பகுதியைப் பிடித்து இழுக்க நடக்க முடியாமல் மீண்டும் சிரமப்பட்டேன். வலி உயிரைப் பறிக்க நினைத்தது..! மனவுறுதியை வரவழைத்தேன். அருகில் யாரும் இல்லை. மகளைக் கூப்பிட்டேன்.  பின்னர் தான் காலை என்னுடன் சென்றவள் இன்னும் வீடுவந்து சேரவில்லை என்பது தெரிந்தது. நேரம் இரவு 7.00 மணியை நெருங்கிக்கொண்டிருந்தது.  குளியல் அறைக்குச்சென்று சிறுநீர் கழிக்கவே முடியவில்லை. எல்லா இடமும் சிந்தியது. கை, கால்களை அது, இழுத்துக்கொண்டன. வலி உயிரைப் பறிக்கவே வந்தது எனத்தோன்றியது..! ஒன்றும் செய்யமுடியவில்லை. கதிரையில் இருந்து கொண்டு வலிந்து தொலைக்காட்சி பார்த்தேன். அதுவும் முடியவில்லை. பின்னர் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியைப் போட்டுவிட்டு, அதனோடு ரசித்தேன்.  நோவிருந்தாலும், நரம்புகள் இழுத்தாலும், இசையை இயன்றவரை ரசிக்க முனைந்தேன். 

சிறிது நேரத்தில் மனைவியும் வந்தார், பிறகு பிள்ளைகளும் வந்தார்கள். நடந்ததைச்சொன்னேன். அதன்பின்னர், அனைத்தும் மறைந்துவிட்டன.  இப்போது உயிருடன் இருப்பதால்  நடந்ததை உடனேயே எழுத்து வடிவில் பதிவு செய்கின்றேன்.  நான் இந்தப் பிரபஞ்சத்தில் என்னை ஏதோஒன்று நன்கு பார்க்கின்றது. சோதிக்கின்றது. இறுதியில் நன்மையைத் தருகின்றது. இவை எல்லாம் ஏன் என்று புரியாவிட்டாலும், உண்மையாக இருப்பவர்களை பிரபஞ்சம் ஒன்றும் செய்யாது என்ற நம்பிக்கை மட்டும் உள்ளது. எவ்வளவு கஷ்டங்கள் கொடுத்தாலும் கைவிடாது என்ற நம்பிக்கை மட்டும்  இன்னும் நிறைய இருக்கின்றது.  “கடமை இருக்கும் வரை என்னைப் இப்பூமியில் இருந்து தூக்க முடியாது. கடமையில்லை என்றால் ஒரு நிமிடம் கூட இங்கு தங்கியிருக்க முடியாது” என்ற உண்மையை என்றோ நான் உணர்ந்துவிட்டேன்.

 


ஆ.கெ.கோகிலன்.

18-03-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!