நாங்களும், நாய்களும்..!

 




இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் பல விடயங்கள் நமக்குப் புரிவதில்லை. புரிய நாம் முயற்சிப்பதும் இல்லை. இருக்கும் வாழ்க்கைச் சுமையைச் சமாளிக்கவே பெரும் போராட்டம் போடவேண்டிய இன்றைய காலத்தில் சக மனிதர்களையே கவனிக்க முடியாத விரைவான சூழலின், ஏனைய உயிர்களைப் பற்றி எப்படிக்கவலைப்பட முடியும்.

அண்மைக்காலமாக இயற்கை என்னை பல்வேறு கொலைகளைப் புரியத் தூண்டுகின்றது. இதனை எப்படித் தாண்டுவதென்றே சில வேளை புரிவதில்லை.  இருந்தாலும், எதோ ஒரு நோக்கத்திற்கு எதிராக இருப்பதைத் தடைகளாகப் பார்ப்பது போல் எமது வாழ்க்கைப்பயணத்தில் தோன்றும் தடைகளாகவே மசுக்குட்டிகளையும், நுளம்புகளையும், கரப்பான் பூச்சிகளையும் பார்க்க வேண்டியுள்ளது. அவற்றை நான் கொலை செய்தாலும், ஒரு உயிரை அழித்தாலும், அது வேதனையாக இருந்தாலும் என்னால் அவற்றைச் சகித்து வாழும் பக்குவம் இன்னும் வரவில்லை.

ஒரு மயிர்கொட்டி கடித்து, அதன் வேதனைகளைத்   தாங்கினாலும், தொடர்ந்து மற்றைய மயிர்கொட்டிகளின் கடியைத் தாங்க முடியவில்லை. அவை என்னை மாத்திரமல்ல, மனைவி, பிள்ளைகள் மற்றும் மாமியாரையும் விட்டுவைக்கவில்லை. சில, மரங்களையும் விட்டுவைக்கவில்லை. குறிப்பாக முருங்கை, முசண்டாஸ் இவற்றின் தாக்கத்தால் தொடர்ந்து  பலியாகின்றன. பல கொப்புகளைத் தறித்தும், எரித்தும் நாசமாக்கவேண்டிய சூழலே எனக்கு அமைகின்றது.  இவ்வாறே கரப்பான்களும், தொல்லைப்படுத்தி, என்னாலேயே தொலைந்து போகின்றன.

அண்மையில் யாரோ ஒருவருடைய நாய் மூன்று குட்டிகளை எமதுவீட்டில் போட்டுவிட்டது. நாங்கள் அதனைத் துரத்திப் பார்த்தோம். வேலைக்கு ஆகவில்லை.  இறுதியில் ஒரு குட்டி எமது கிணத்திற்குள் விழுந்து மாண்டு, எம்மையும் தொல்லைக்குள் சிக்கவைத்தது. இன்னொரு குட்டி என்ன  நடந்தது என்றே தெரியவில்லை. அதனைக் காணவில்லை. இறுதியாக ஒரு குட்டிமட்டும் தப்பி அங்கும் இங்கும் ஓடித்திரிந்தது. நான் மனைவிற்கும், பிள்ளைகளுக்கும் சொல்லியிருந்தேன். அது தன்பாட்டில் நிற்கட்டும். அதோடு கொஞ்சிக்குலாவி இருக்க வேண்டாம். பின்னர் அது காணவில்லை என்றாலும் துன்பமாக இருக்கும். தள்ளியே இருந்து, அது, தன் பாட்டிலே வளரட்டும் என்று விட்டுவிட்டேன். ஒரு நாள் மேல் மாடிக்குவந்து நான்கு இடங்களில் அபிஷேகம் செய்துவைத்திருந்தது. வேறு என்ன செய்ய அவற்றையெல்லாம் சுத்தம் செய்து அவருக்கு ஒரு சின்ன அடியும் கொடுத்தேன். அது குட்டிநாய் தானே அதனை அடிப்பதை விட மேலே வராமல் தடுப்புப்போட்டேன்.ஜன்னல் வடிவ வெள்ளிப் படலைக்கு கேர்ட்டின் துணியில் ஒரு உறையும்போட்டேன். அதன் பிறகு அது மேலே வருவதில்லை. என்னைக்கண்டால் ஓடி மறையும். நானும் ஒன்றும் செய்வதில்லை. அந்தப்பயம் இருக்கட்டும் என்றுவிட்டுவிட்டேன். 

கடந்த ஒரு வாரம் எனது தடைதாண்டும் பரீட்சைகளுக்கு கொழும்பு சென்றுவந்தேன். மனைவி சொன்னார் அந்தக்குட்டியையும் காணவில்லை என்று..? நல்லவேளை பிள்ளைகள் அவற்றுடன் நெருங்கிப்பழகவில்லை.  இல்லையென்றாலும் இன்னும் கவலை தான். ஏன் இவ்வாறு நடக்கின்றது என்று புரியவில்லை. தானாகவே வருகின்றன. தானாகவே மறைகின்றன. இதற்கு பின்னாடி என்ன மர்மங்கள் இருக்கின்றதோ எனக்குப்புரியவில்லை. பொதுவாக நான் ஐயரை நம்புவதில்லை. ஆனால் கடவுளை நம்புகின்றவன். வியாபார மருத்துவர்களை நம்புவதில்லை. ஆனால் கடவுள் போலுள்ள நல்ல மருத்துவர்களை கடவுள் போல் நம்புகின்றவன்.  எனது இயல்பே இப்படித்தான். இந்த பிரபஞ்சம் எதையோ எனக்குச் சொல்கின்றது..! இன்னும் முடியவில்லை அதனைப் புரிய..!



ஆ.கெ.கோகிலன்.

18-03-2023.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!