டி ப்ளாக் (D-Block)


 


பெயரே வித்தியாசமாக இருக்கும் படத்தில் ஏதாவது வித்தியாசமாக இருக்கின்றதா எனப்பார்த்தால். ஆம் வித்தியாசமாக இருக்கின்றது. அது வில்லன் தனிய நின்று எல்லோருடனும் சண்டைபோட்டு வெல்கின்றார் என்பது தான்.  வழமையாக ஹீரோ செய்யும் வேலையை, கூட்டமாக அடித்தாலும் எதிர்க்கும் ஆற்றல் இந்தப்படத்தில் வில்லனுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது..! 

வழமையாக அருள்நிதி படம் என்றால் நம்பிப் பார்க்கலாம் என்ற உத்தரவாதத்தை இந்தப்படமும் தருகின்றது.  அதற்கு அருள்நிதியைப் பாராட்டலாம். ஒவ்வொரு முறையும் ரசிகர்களை ஏமாற்றாமல் ஏதாவது வித்தியாசமாகக் கொடுக்க நினைப்பது சினிமாவில் நீடிக்க உதவும். இந்தக்காலத்தில் பெரிய ஹீரோக்களே வித்தியாசத்தை நோக்கி நகர்கையில் இவர்கள் அவ்வாறு செய்வதில் ஆச்சரியம் ஒன்றும்  இல்லை. 

வந்த வழமையான கதைகளைத் தெரிவார்களேயானால் விரைவாக  திரையுலகைவிட்டுக் காணாமல்போக வாய்ப்புண்டு. இது அனைத்துக் கதாநாயகர்களுக்கும் பொருந்தும். எம்ஜியார், ரஜினி மாதிரி காலத்தை ஓட்ட இந்தக்காலத்து மக்கள் அவ்வளவு இழிச்சவாயன்கள் அல்ல.

இந்தப்படத்தின் கதையின் களம் சைக்கோ திரில்லர். டி ப்ளாக்கிலுள்ள பெண்கள் விநோதமாக, சிறுத்தை அடித்து இறக்கின்றார்கள். ஆனால் நிர்வாகம் கண்டுக்காமல், எல்லாவற்றையும் மூடிமறைத்து காசு பார்ப்பதிலே குறியாக இருக்கின்றது. மாணவர்களும், நிர்வாகம் சொல்வதைக் கேட்டு அடங்கிப்போக, ஒரு மாணவன், தனது நண்பர்களுடன் சேர்ந்து அதனைக்கண்டுபிடிக்க முயல, எம்மைச் சோதிக்க பரதநாட்டியம், பின்னர் முடி என டுவிஸ்ட் அடித்து, வில்லனை ஒருவாறு ஹீரோ கண்டுபிடித்து, மாணவிகளே காலால் மிதித்துக் கொல்கின்றார்கள்.

“கேடு நினைப்பான் கெடுவான்..“ என்பது போல படம் முடிகின்றது. ஆனால் படத்தில் பல ஓட்டைகள். அவற்றைக்கண்டுக்காமல் பார்த்தால் படத்தை ரசிக்கலாம்.  விஜய் குமார் ராஜேந்திரன் என்பவர் எழுதி இயக்கியுள்ளார்.

Vijay Kumar Rajendran

 ஒன்று மட்டும் நிச்சயம் படம் போரடிக்கவில்லை. கதாநாயகியாக அவந்திகா மிஸ்ரா பரவாயில்லை என்று சொல்லுமளவிற்கு நடித்துள்ளார்.



எல்லோரும் வழமைபோல் நடித்தாலும், படத்தைத் தூக்குவது வில்லன் சரண்டீப் சுர்னேனி (Charandeep Surneni) தான். மிரட்டியுள்ளார். சில காட்சிகள் நிச்சயமாகத் திடுக்கிட வைக்கின்றது.  எமது ஊர்களிலும் எண்பதுகளில் கிறீஸ் மனிதனின் நடமாட்டம் பற்றி நிறையக்கதைகள் வந்தன. பெண்கள் உள்ள வீடுகளுக்குப் போவதும், யாராவது துரத்திப் பிடிக்க முனைந்தால், அவனது உடலிலுள்ள கிறீஸ் வழுக்க, அவன் இலகுவாகத் தப்பிச் செல்வதும் வழமை என்று கருதப்பட்டது. அதேபோன்ற காட்சியமைப்பு, படத்தில் இருப்பதால் எனக்குப் புதுமையாகத் தெரியவில்லை. ஆனால் படத்தைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. 2022இல் வெளிவந்த இப்படம் மக்களிடம் வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

 


ஆ.கெ.கோகிலன்.

25-03-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!