பிருத்விராஜ் (Samrat Prithviraj)
இந்தி நடிகர் அக்சய் குமார் மாவிரன் பிருத்விராஜாக நடித்த இந்தப்படத்தின் கதை, ஒரு மாவீரன், சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட ஒரு வரலாற்றுப் பாடத்தைக் கண்முன்னே கொண்டுவருகின்றது.
சண்டைக்காட்சிகள், ஏனைய காட்சியமைப்புக்கள் பெரிய அளவில் கவரவில்லை என்றாலும் பரவாயில்லை. பெரியப்பாவாக நடித்த சஞ்யய் தத்தின் நடிப்பு அமர்க்களமாக இருந்தது. அவரது மரணத்தோடு ஏதோ தோல்விப் பயம் படம் பார்க்கும் எமக்கும் மனதில் பற்றிக்கொண்டது. படத்திலும் அதுவே நடந்தது.
ஆண், பெண் சமத்துவத்தைப் பேச வெளிக்கிட்ட இந்தப்படத்தில், இறுதியில் கணவனும், அவனது படைகளும் சூழ்ச்சியால் தோல்வியுற்றதை அறிந்த மனைவியும், ஏனைய படைவீரர்களின் மனைவிகளும் நெருப்பில் குதித்து உயிரை மாய்த்தது வேதனையாகவும், பெண்களின் தன்னம்பிக்கையை உடைப்பதாகவும் இருந்தது. இந்தக்கதை 700 வருடகாலத்திற்கு முன்னர் உண்மையில் நடந்திருந்தாலும், இன்று பார்க்கும் போது சில விடயங்களை ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை. அந்தப்பெண்கள் உயிரைவிட்டதற்குப் பதிலாகப் போராடச்சென்று இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று மனம் ஏங்கியது. இந்தப்படத்தை துயரமான முடிவில் நிறுத்தாமல் இன்னும் ஏதாவது நம்பிக்கையை அளிக்கும் ஒரு காட்சியில் முடித்திருந்தால் இந்தப்படம் பெரிய அளவில் மக்களைச் சென்றிருக்கும்.
மானுசி சில்லர் (Manushi Chhillar) என்ற உலக அழகியே நாயகியாக நடித்தார். அவரும் அந்தக்கதா பாத்திரமாகவே தெரிந்தார். தந்தையுடன் வாதிட்டு, டெல்லி மன்னனை மணம்செய்த முறை வித்தியாசமாக இருந்தது.
விறுவிறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்கோ தெரியவில்லை மூன்று சிங்கங்களுடன் மோதவிட்டு, கண்ணைப் பறிகொடுத்த மன்னனை வெல்லவைத்தது வீரத்தைச் சோதித்ததாகத் தெரியவில்லை. கண்ணில்லாவிட்டாலும் குறிபார்க்க முடியும் என்னும் புதுவித்தையைக் காட்டியதாகத் தெரிகின்றது. என்னால் அந்தக்காட்சிகளை ரசிக்க முடியவில்லை.
டொக்டர் சந்திரபிரகாஷ் த்விவேதி இந்தப்படத்தை இயக்கியிருந்தார். படம் பார்க்கும்போது போரடிக்காமல் இருந்தது. சிந்திக்கும் போது மட்டுமே ரசிக்க முடியவில்லை.
ஆ.கெ.கோகிலன்.
25-03-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக