சிட்டுக்குருவிகள்..!
இந்தவருடம் மார்ச் மாதம் 20ம் திகதி உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்பட்டது. வளர்ந்து வரும் நாகரீக மோகங்களால் மனிதன் இயற்கையாக இருக்கும் எவ்வளவோ அற்புதமான விடயங்களை ரசிக்கத் தவறுகின்றான். ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட கார்ட்டூன் பறவைகளை ரசிக்கத் தெரிந்தவனுக்கு, இறைவனால், இயற்கையால் உருவாக்கப்பட்ட உயிருள்ள பறவைகளை ரசிக்க முடியவில்லை. அதன் சேட்டைகளைத் தொல்லைகளாகப் பார்க்கின்றான்..! அதன் எச்சங்களை, தமக்கும் வரும் கஷ்டங்களாக நினைக்கின்றான். ஆனால் இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் ஏதோவோர் விதத்தில் இணைந்து செயற்படுவதாலே சமநிலை பேணப்படுகின்றது. அந்தச் சமநிலையே எம்மை இதுநாள் வரை உயிருடன் வைத்துள்ளது. நாமும் இயற்கையின் சமநிலைக்கு பாதகத்தை ஏற்படுத்தும் காரியங்களைத் தவிர்க்க வேண்டும். முடியாவிட்டாலும், குறைக்கவாவது வேண்டும்.
தொலைபேசிகளின் பாவனையும், அதற்குத் தேவையான மின்காந்த அலைகளும் பறவைகளுக்கு கேடாகவே அமைகின்றன. இதனை மையமாக வைத்து சங்கர் இயக்கிய எந்திரன் 2 என்ற திரைப்படமே வந்து சென்றது. இருந்தாலும் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இன்னமும் ஏற்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும். எமது தேவைகளுக்காகச் செய்யும் செயல்கள் மற்றைய உயிர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றால் அது கூடாத செயலாக இருப்பதற்கான வாய்ப்பு உண்டு. அவ்வாறான செயல்கள் செய்வதை அறிவுள்ள சமூகம் தவிர்க்க வேண்டும்.
தெரியாமல் செய்வது குற்றம் அல்ல. தெரிந்தே செய்வது தான் குற்றம்.
ஒவ்வொரு வருடமும் சிறிய பறவையினமான சிட்டுக்குருவியை மார்ச் மாதம் 20ஆம் திகதியாவது நினையுங்கள். அவற்றிற்கு உணவு வையுங்கள். அவற்றின் சேட்டைகளை பொறுத்துக்கொள்ளுங்கள். முடியுமென்றால் அதனை ரசியுங்கள். மக்களுக்கு பல நன்மைகளைச் செய்து, பூமி செழிக்கக் காரணமாக இருக்கும் இது போன்ற அனைத்து பறவைகளையும், உயிர் இனங்களையும் பேணுவது எமது கடமை என்பதை உணந்து செயற்படுவோம்.
ஆ.கெ.கோகிலன்.
20-03-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக