பச்சிலர்..! (Bachelor)

 


சில வருடங்களாக, இந்தப்படத்தைப் பார்க்கவேண்டும் என்று நினைத்தாலும், இன்று தான் அதற்கான சூழலமைந்தது.

திருமணம் முடிக்க முதல், ஆடும் ஆட்டங்களும் அதனால் வரும் ஆர்ப்பாட்டங்களும், அவமானங்களும் சேர்ந்து, அறிவாளியாக மாறும் மனிதர்களே உலகில் அதிகம்..!

குடி, கும்மாளம் எனக் கூத்தடிக்கும் இளைஞர்களும், நாகரீக வாழ்க்கைக்குத் தயாரான நவீன பெண்களும் சேர்ந்து, குளிர்நாடுகளில் தோன்றும் கலாசாரங்களை, வெப்பநாடுகளிலும் கொண்டுவந்தால் பல குழப்பங்கள் வந்து தான் ஆகும்..!

எமது நாடுகளின் வாழ்க்கை முறைகள் வேறு. பெண்களைத் தாயாகவும், குடும்பத்தலைவியாகவும், குடும்பங்களின் மையமாகவும், வாழ்க்கையின் ஆதாரமாகவும், சில இடங்களில் கடவுளாகவும் விளங்குவதை நீண்டகாலமாக உணர்ந்து வருகின்றோம்..! ஆங்காங்கே சிறு சிறு தப்புகள் செய்து, தமது வாழ்வை அழித்துக்கொள்ளும் பெண்களையும் பார்த்திருக்கின்றோம்.

காதலிப்பது போல் நடித்து,  பெண்ணை லாவகமாக ஏமாற்றி, தமது இச்சைகளை தீர்த்துவிட்டு, தவிக்கவிட்டுச் செல்லும், ஆண்களையும், அவர்கள் வாழ்க்கையும் பார்த்திருக்கின்றோம்.

காதல் என்று உணராமல், ஒரே இடத்தில் வாழும் சூழல் ஏற்படும் போது, ஏற்படும் கரிசணங்கள் ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கை வர, இரு சாராரும் சேர்ந்து வாழும் வாழ்வியல், தற்போது சகஜமாகியுள்ளது..!  ஆங்கில நாகரீக வாழ்வியல் முறையான  திருமணம் முடிக்காமல் சேர்ந்து வாழும் (Living together) இக்கலாசாரம், தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ந்த பின்னர் அதிகரித்துள்ளது..!

விளைவு, கர்ப்பம் தரித்தாலும், கருவை கலைப்பதுவும் சாதாரணமானதாக மாறிவருகின்றது..! அதனைக்காசாக்கவே பல வைத்தியர்களும் இருக்கின்றார்கள்..! “கண்டதும் காதல், திண்டதும் போதல்..” என்பது போல் வாழ்வை அமைக்க நினைத்தால் ஏற்படும் சிக்கல் தான் படம்..!

இளவளது ஆண், பெண் என இருவர் ஒன்றாக இருந்தனர். கர்ப்பம் உருவாக,  தனது குடும்ப கௌரவத்திற்காக ஆண் அதனைக்கலைக்கச் சொல்கின்றான்..! குறித்த பெண்ணிடம் தாய்மை உணர்வு மேலோங்க, கருவைக்கலைக்க மறுக்க, அதற்கு காரணமானவன், தனது நண்பர்களுடன் சேர்ந்து,  கருக்கலைப்பைச் செய்ய வற்புறுத்தும்போது, குறித்த பெண் அதனை மறுத்து, உறவுகளின் துணையோடு நீதிமண்றத்தை நாட, வக்கீல்கள் ஆளாளுக்கு பொய்களை அடுக்கி, பிரச்சனையைப் பூதாகரமாக மாற்ற,  குறித்த பெண்ணின் காதலன், தவறை உணர்ந்து, பெண்ணிடம் மீண்டும் சேரத்துடிக்க, இவற்றையெல்லாம் பார்த்து வெறுத்து,  நீ எல்லாம் “ஒரு ஆண்..” என்பது போல் நடுவிரலைத் தூக்கிக்காட்டிவிட்டுச் செல்கின்றாள் அந்த நவீன பெண்..!

 

ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படியான படங்களில் நடிப்பது, அவரது இமேஜைப் பாதிக்கும் என்று தெரிந்தாலும் தொடர்கின்றார்..! அவரது நடிப்பும் நன்றாக இருந்தது. திவ்யா பாரதி என்பவர் நாயகியாக  சிறப்பாக  நடித்திருந்தார். படத்தில் இளைஞர் பட்டாளமும், யுவதிகளும் அதிகம் என்பதால் பெயர்கள் தெரியவில்லை. ஆனால் கதைக்குப் பொருத்தமாக எல்லோரும் நடித்தார்கள். பாடல்களும், இசையும் வித்தியாசமாக இருந்தன..! தொழில்நுட்பங்களும் தரமாக இருந்தன.

சதீஸ் செல்வகுமார் என்ற இயக்குனர் வித்தியாசமான முறையில் கதையை சமர்பித்து இருந்தார். “வர்மக்கலை மூலம் மலடாக்குதல்”  என்பது ஒரு புதுத்தகவலாகவே எனக்கு இருந்தது.

காதலன் தான் ஆண்மையற்றவன் என்று நிரூபித்து, கர்ப்பத்திற்கு தான் காரணமில்லை என்பதை உணர்த்த, பெண் என்ன தான் செய்ய முடியும்..?

எப்படி இவ்வாறான இழிவான மனிதனுடன் வாழ முடியும்..?

“போய் தொலை..!”என்று சைகையூடு சொல்லி முடிப்பது, ஆச்சரியமாக இருந்தது.

நவீன வாழ்வியலின் ஒரு பக்கத்தைக் காட்டியதற்கு இயக்குனரைப் பாராட்டலாம்.



ஆ.கெ.கோகிலன்

22-06-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!