டியர்..!
வாழ்க்கையே அனைவருக்கும் பாடங்களாகவே அமையும்..! சிலருக்கு
அதிக அத்தியாயங்களில் இன்பங்கள் இருக்கலாம். அல்லது குறைவாக இருக்கலாம். ஒரு சிலருக்கு
அது அறவே கிடையாது போகலாம்.
இந்தப்படத்தின் கதை ஒன்றும் பெரிய விடயங்களைக் கூறவில்லை
என்றாலும், மன்னிப்பின் மகத்துவத்தை சில இடங்களில் விளக்குகின்றது..! கோபத்தையும்,
வெறுப்பையும் வைத்து நாம் சில வேளைகளில் அதிகாரங்களை தக்கவைக்கலாம். ஆனால் அவை உண்மையானதாக
இருக்காது. சந்தர்ப்பங்கள் வரும்போது தானாகவே கழண்டுவிடும். அன்பும் விட்டுக்கொடுப்பும், தவறுகளை மன்னிக்கும்
இயல்பும் இருந்தால் நரகத்தில் கூட சொர்க்கத்தைப் பார்க்கலாம். எம்மில் இருந்தே எல்லாம்
உருவாகின்றது.
படத்தின் கதை என்று பார்த்தால், குறட்டையால் விவாகரத்துகோரும்
ஒரு ஆணுக்கு, அது ஒரு முக்கியமான தகுதியல்ல விவாகரத்திற்கு என்பதை புரியவைப்பதாகவே
படம் இருக்கின்றது..!
இருந்தாலும் சில இடங்களில் மனதைத் தொடும் காட்சிகளும் இருக்கின்றன..!
இறுக்கமான தன்மை கொண்ட கணவன், மனைவியின் திறமையையும், பொறுமையையும்
அறிந்து, தான் தவறாக நடத்திவிட்டேன் என்பதை உணர்ந்து கலங்குவது, நிஜத்தில் நான் கூட
அனுபவித்துள்ளேன். அதேபோல் படத்தில் வரும் ஹீரோவின் தந்தை, பிள்ளைகள் சிறுவயதில் இருக்கும்போது தாயாரைப் பிரிந்து
சென்றும், முதுமையில் ஞானம் பிறந்து, உண்மை உணர்ந்து, தாயிடம் திரும்ப வருவதும், அதனை
மன்னித்துத் தாயார் ஏற்பதும் நிஜத்தில் சற்றுக்கடினம் என்றாலும், அதனைவிடப் பெரிய தண்டனையை
அந்த மனிதருக்கு கொடுக்க முடியாது.
மேலும் பிள்ளையை அழிக்கக்கூடாது என்றும், ஆனால் மனைவி வேண்டாம்
என்றும் இருந்த கணவன், திருந்தி குறட்டையைப்
பொறுத்து, மனைவிமேல் அன்பைப் பொழிந்து வாழ நினைப்பது சரியான முடிவு.
பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் படத்தைப் பார்த்தால் பல
இடங்களில் ரசிக்கலாம். ஆனால் பெரிய புதுமைகள் இல்லை. இசை, பாடல்கள், ஒளிப்பதிவு போன்ற
தொழில்நுட்பங்கள் சிறப்பு.
பலரின் நடிப்பும் நன்றாக இருந்தன. ஆனந்த் ரவிச்சந்திரனின்
இயக்கம் படத்தைப் பார்க்கலாம் என்ற அளவில் வைத்திருக்கின்றது.
ஆ.கெ.கோகிலன்
26-05-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக