லவ்வர்..!
இம்முறை திருகோணமலையில் இருந்து வரும்போதே சற்று குழப்பமான
மனநிலையில் வீடுவந்தேன். முதலில் மகளை ஆறுதல் படுத்திப்பின்னர் எனது நேர்முகத்தேர்வை
முடித்து, அதன்பிறகு அந்தியேட்டியில் பங்குபற்றி, இம்முறைப் பயணநோக்கத்தை நிறைவுசெய்தாலும்,
ஒரு திரைப்படம் என்றாலும் பார்த்து மனதை புத்துணர்ச்சிப்படுத்த விரும்பினேன்.
நேரமே கிடைக்காமல் இருந்தது. இருந்தாலும் நேற்று இரவு 10
மணிக்கு கிட்டத் தொடங்கி, காலை 8 மணிக்குள் இந்தப்படத்தைப் பார்த்து முடித்தேன்.
படத்தில் பல சம்பவங்கள் என் வாழ்க்கையோடும் சம்பந்தப்பட்டு
வந்தது ஆச்சரியம்..! குடிகாரத்தந்தை..! வேலைசெய்யும் தாய்..! அக்கறையுள்ள லவ்வர், நல்ல
சில நண்பர்கள் என இருந்தாலும், இந்த படத்தின் கதையே காதலிக்கும் காலத்திலேயே ஒருவருடைய
முழுக்குணமும் தெரியவர, எப்படிக்காதலைத் தொடர்ந்து கலியாணம் வரை கொண்டுசெல்வது..?
இந்தக்காலத்து சந்ததிகள் பலர் இந்தப்பிரச்சனைக்குள் மாட்டித்
தவிப்பதை பல தடவைகள் எனது நிறுவனத்திற்குள்ளேயே பார்த்துள்ளேன்..!
காதலைக் கலியாணம் வரை கொண்டுசெல்லாத தவறை நானும் செய்துள்ளேன்.
யாரைக்குறை கூறுவது என்று தெரியாவிட்டாலும், நாம் சரியாக இருந்திருந்தால் தவிர்த்திருக்கலாம்.
ஆனால் இறைவனின் ஆசையும், இயற்கையின் ஆசையும் வேறுமாதிரி இருந்தால்
என்ன செய்ய..?
படம் எனக்கு அப்படியே பொருந்தியது. எனது குணம் என்ன..? என்பது
முதலே புரிந்ததாலும், பல அனுபவங்களைப் பெற்றதாலும் தற்போது என்னால் ஒரு இயல்பான, நிறைவான
வாழ்வில் பயணிக்க முடிகின்றது. இதற்கு, முக்கிய காரணமே வாழ்வில் பட்ட அடிகளும், தோல்விகளும்
தான்..!
இந்தப்படத்தில் மணிகண்டனின் நடிப்பு தரம் என்றால் அதைவிட
புது நடிகை சிறிகௌரிப் பிரியாவின் நடிப்பு இன்னும் சிறப்பாக இருக்கின்றது..! அதுமாத்திரமன்றி,
அனைத்து நடிகர்களினதும் பங்களிப்பு சிறப்பாக இருந்தன.
தொழில்நுட்பங்களும் சிறப்பாக இருந்தன. கடற்கரையில் ஸ்கேட்டிங்கில்
(sea skating board) ஈடுபடுவதுபோல் படம் தொடங்கியதே கதை வேறுபட்டதாக இருக்கப்போகின்றது
என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது..! படம் முடியும் வரை போரடிக்கவில்லை. காதல் பூபோன்றது..!
அதனை அவ்வளவு கவனமாக அனுகவேண்டும். அன்பு கூடினாலும் ஆபத்து..! குறைந்தாலும் ஆபத்து..!
சூழலைப் புரிந்து நடந்து, காதல் வாழ்வில் வெற்றிபெற பாடம் நடத்தியதற்கு ஆசிரியர் மன்னிக்கவும்,
இயக்குனர் பிரபு ராம் வியாஷிற்கு நன்றி.
ஆ.கெ.கோகிலன்
09-06-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக