கற்றாரைக் கற்றாரே காமுறுவர்..!

 

 


இன்று எனது பழைய  நண்பர் ஒருவரின் மறைவையொட்டி, அவரது வீட்டிற்குச் சென்றேன்.

ஏறக்குறைய 25 வருடங்களுக்கு முன்னர் அவரை ஒரு கிளார்க்காக  திருகோணமலை தொழில்நுட்பக்கல்லூரியில் சந்தித்தேன். மென்மையான பண்பான மனிதர். என்னுடைய வயதை ஒத்தவர். அப்போது நான் அங்கே வருகை தரு விரிவுரையாளராகப் பல பாடங்கள் படிப்பித்துக்கொண்டிருந்தேன். அவருடன் நெருங்கிப் பழகுவதற்கு நிறைய  வாய்ப்புக்கள் கிடைத்தன.

அவரது இயல்பு பொதுவாக அனைவருக்கும் பிடிக்கும். யாரையும் நோகடிப்பது போல் நடக்க மாட்டார். மிகவும் பொறுமையும், திறமையும் வாய்ந்தவர். அந்நேரத்தில் கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் பட்டிமன்றப்பேச்சு போன்றவற்றில் நானும் கலந்து கொள்வேன். அவரும் கலந்துகொள்வார். அனேகமாக நான் இரண்டாவது இடத்தையும், அவர் முதலிடத்தையும் பிடிப்பார்..!  அவர் ஒரு எழுதுவினைஞராக இருந்தாலும் படிக்கும் ஆர்வம் மிகவும் கொணடவர். தொடர்ந்து படிப்பார். பல பட்டங்களைப் பெற்றுள்ளார். தற்போது சட்டமும் படித்துக்கொண்டிருக்கின்றார்.  அவரது முயற்சியும் நடத்தையும் தற்போது திருகோணமலைத் தொழில்நுட்பக்கல்லூரியின் அதிபராகுமளவிற்கு அவரைக் கொண்டுவந்துள்ளது.

அவர் அந்தக்காலத்திலேயே தனது குடும்பத்தையும், அதன் சிக்கல் தன்மைகளையும் என்னுடன் பகிர்ந்துள்ளார். நான் அப்பவே அவரை அந்த உறவுகளுக்கு சட்டரீதியாகப் பதிலளிக்கச்சொன்னேன்.  அது மாத்திரமன்றி, மறுமணத்தையும் செய்யச் சொன்னேன். அவர் சிரித்துக்கொண்டு இனி இப்படிச்செய்ய எனக்கு மனமில்லை என்றும், திருமணம் செய்தபடியால் எப்படியும் தனது கடமைகளை இயலுமான வரை செய்ய வேண்டும் என்றும் விரும்பி, இறக்கும்வரை அதனைக்கடைப்பிடித்துக்கொண்டு வந்துள்ளார்.

இன்று உவர்மலையிலுள்ள   வைரவர் கோவிலுக்கு கிட்டவாகவுள்ள அவரது வீட்டிற்கு, பல வழிகளில் அந்த இடத்தைச் சுற்றிய பின்னர், சென்றேன்..! அந்த இடத்திலுள்ள ஒரு வீட்டின் வாசலில் நின்று நண்பரின் பெயரைச்சொல்லிக்கேட்க, அந்தவீடு தான் என்றும், உள்ளே வந்து இருக்கும் படியும் கூறி, தான் அவரின் அம்மா என்றும் சொல்லி, அவரின் பல நற்கருமங்கள் பற்றி பெருமையோடு பேசினார்..!

அவருடைய ஆறு சகோதரங்களில் இருவரின் இறப்பும், மரத்தால் விழுந்து தான் நடந்திருப்பது ஆச்சரியமாகப் பட்டது. அதுமாத்திரமன்றி, தனது தாயைக் குழந்தை, குமரி மற்றும் கடவுள் போல் பார்த்து வந்துள்ளார்..! தனது சகோதரங்களைத் திருமணம் செய்து நிறைவாக  வாழ வைத்துள்ளார்.  தற்போது எல்லோரும் நன்றாக இருக்கும் சூழலில் அவரில்லாமல் இருப்பது அவர்களுக்கு சொல்லமுடியாத ஒரு பேரிழப்பு தான்.  அவருக்கு அடுத்த சகோதரி, கனடாவில் இருந்து வந்தவர், தனது வாழ்க்கைக்கே காரணமானவர் அண்ணன் தான் என்றும் இந்த வயதில் பிரிந்தது தங்களுக்கெல்லாம் பேரிழப்பு என்றும், ஆனால் அண்ணணின் குணத்திற்கு இது அவருக்கான ஒரு ஓய்வாகவே தான் பார்ப்பதாக் கூறினார்.  கடைசி வரை மனைவி, பிள்ளைகள், தாய், சகோதரங்கள் என அனைவரையும் நன்றாகப் பார்த்துக்கொண்டவர்.

வளர்ந்த பிள்ளைகள் அவரை நன்றாகப் புரிந்துகொண்டிருப்பார்கள்..!

முன்பு என்னுடன் கதைக்கும்போது தனக்குக் கேளரத்தொடர்பு இருப்பதாகச் சொன்னார்..! இன்று தான் அது என்ன தொடர்பு என்பது புரிந்தது. மட்டக்களப்பு ஏறாவூரைச் சேர்ந்திருந்தாலும், இவர் வளர்ந்து படித்தது எல்லாம் திருகோணமலையில் தான். அதற்கு முக்கிய காரணம், அவரது மலையாளி அப்பா, குடும்பத்தை விட்டுவிட்டு இந்தியாவிலுள்ள கேரளா சென்றுவிட்டார்..! பின்னர்  அங்குள்ளவர்களை விசாரித்த போதே தெரிந்தது, அவருக்கு இன்னொரு மனைவியும் பிள்ளைகளும் கேரளாவில் இருக்கின்றார்கள் என்பது..! அவர்களுடன் இவர்களுக்கு நல்ல உறவுகள் கிடையாது. காலப்போக்கில் அவர்களையே மறந்து விட்டார்கள்.

இவர்களின் பக்கத்தில் இருந்து யாரோ சிலர் அங்கு சென்று, சில மனச்சங்கடங்களுடன்  திரும்பி வந்துள்ளனர். தாய், தனது கணவரைப் பிரிந்து நீண்ட காலம் தனித்து இருந்ததாலும், தனியாகவே கஷ்டப்பட்டு, பிள்ளைகளை வளர்த்து இந்த நிலைக்கு கொண்டுவந்துள்ளார். கனடா, ஜேர்மன், லண்டன், ஹொலண்ட் எனப்பல இடங்களில் சகோதரங்கள் வசிக்கின்றார்கள்..!

கனடா சகோதரி தன்னைத் தனது அண்ணனே தந்தைபோல் எல்லாம் செய்து அனுப்பினார் எனச்சொல்லிக்கவலைப்பட்டார். தாங்கள் கனடாவில் நன்றாக இருப்பதற்கு அண்ணனே காரணம் என்றார். அதுபோல், தாயாரும் தம்பி தன்னை எந்தக்குறையுமில்லாமல் பார்த்துக்கொண்டார் என கண்ணீர் மல்க மகனைப் புகழ்து பேசினார்.

இவ்வாறு தமக்காப் பாடுபட்ட அண்ணனின் சடங்குகளைச் சிறப்பாகச் செய்யப் பலர் வெளி நாடுகளில் இருந்து திருகோணமலையில் நிற்கின்றார்கள். இந்த நிலையில் நான் சென்றது அவர்களுக்கு குறிப்பாகத் தாய்க்கும், தங்கைக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் என்று நம்புகின்றேன்.

தந்தை தாயைக் கைவிட்டாலும், மகன் தாயை தந்தை கவனிப்பதைவிட மேலாக கவனித்தாகவும், போதிய ஆடை அணிகலன்கள் வாங்கிக்கொடுத்ததாகவும்,  குழந்தைபோல் பாதுகாத்தாகவும்  பதம் மாறாமல் தேநீர் உணவுகள் வழங்கியதாகவும் சொல்லித் தாயார் கலங்கினார்.

சிறுவயதில் இவர்கள் பட்ட கஷ்டம் இப்போது இல்லை என்றாலும், ஆடம்பரம்  காட்டாமல் நிறைவாக, நிம்மதியாக இருந்தார்கள்..!

மாமரத்தில் ஏறியவர், தவறிவிழுந்து, சில நாட்கள் வைத்திய சாலையில் மருத்துவ சிகிச்சைகள் பெற்றும் அவரால் எழுந்துவர முடியவில்லை..! தங்கை சொன்னது போல், அவரது கடமை முடிந்துவிட்டது..! இறைவனே அழைத்துவிட்டார். நாம் அதைத்தாண்டி என்ன சொல்லப் போகின்றோம்..?

சாவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் என்னைச் சந்திப்பதாகச் சொன்னார். ஆனால் அந்தச் சந்திப்பு நடைபெற முடியவில்லை. நானும் அவரைப் பார்க்க திருகோணமலை தொழில்நுட்பக்கல்லூரிக்கு ஒரு முறை சென்றேன். ஆனால் அவரைச் சந்திக்க முடியவில்லை. அவர்  கோவில், குளங்கள் எனச்சென்று வந்தார்.

எண்ணைக்காப்பு சாத்தப்போய், அது முடியாமல்   வந்து, சுவாமியறையில் ஏற்றிய விளக்குக்கூட  அணையாமல் இருக்க, அருகிலுள்ள மாமரத்தில் ஏறித் தவறி விழுந்து, அவரின் விழுந்த உடல், தாயார் கண் முன்னே சிறிய மூச்சோடு வைத்தியசாலை போயுள்ளது. ஆனால் பல சிகிச்சைகள் செய்தும், பலனில்லை..!  இறைவன் நினைத்து நடத்துவதை, யாராலும் தடுக்க முடியாது..! தாண்டிப்போக பழக வேண்டியது தான்.

 

ஆ.கெ.கோகிலன்

02-06-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!